Monday, November 28, 2011


இணையத்தில் வடமொழிக் கலப்பை எதிர்த்த

அமெரிக்கத்தமிழ்ச் சங்கத் தலைவருக்குச்
சென்னையில் பாராட்டு விழா!


சென்னை, அக். 25- எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை,  தமிழ் எழுச்சிப்பேரவை ஆகியவற்றின் சார்பில்  கரோலினா தமிழ்ச் சங்கத் தலைவர் சுந்தர் செயபாலனுக்குச் சென்னையில் வரவேற்பு தரப்பட்டது.

விரிவான செய்திக்குப் பார்க்க : https://groups.google.com/forum/?hl=ta#!topic/aaiviththamizh/5iJ1z2saaW8

தமிழ் எழுச்சிப்பேரவையின் செயலர் முனைவர் பா. இறையரசன் வரவேற்றார். அமெரிக்காவிலுள்ள யுனிகோடு கன்சார்ட்டியம் என்கிற  ஒருங்குகுறி சேர்த்தியத்தில் அன்றைய தமிழக அரசு உறுப்பினர் கட்டணம் கட்டிப் புதுப்பிக்கவில்லை; சுந்தர் செயபாலன் தாமே உறுப்பினர் ஆகி காஞ்சி மடத்தைச் சேர்ந்த இரமண சர்மா கோரிக்கையின்படி தமிழில் கிரந்த எழுத்துகள் சேர்க்கப்பட்டபோது, உலகத் தமிழர்களின் சார்பில் அதை எதிர்த்து ஒருங்குகுறி சேர்த்தியத்தில் பதிவு செய்தார் என்று இறையரசன் பாராட்டினார்.

திரைப்படக் கவிஞர்கள் அண்ணாமலை, பூவை வாலறிவன், சித்த மருத்துவர் கவிஞர் பொ.அ.அரசக்குமரன் (ராஜ் குமார்), உணர்ச்சிக் கவிஞர் தஞ்சை கோ. கண்ணன், வத்திரா இருப்பு தெ.சு. கவுதமன், கவிஞர்கள் எழில் வேந்தன்.தனித்தமிழ் வேங்கை மறத்தமிழ் வேந்தன்   முதலியோர் கவிதை படித்தனர்.

அழகிய தமிழ் மொழியில் தூய சொற்கள் பல உள்ளபோது பிறமொழிச் சொற்களைக்  கலக்க வேண்டியதில்லை; அறிவியல் தொழில் நுட்பம்  சார்ந்த பிற மொழிச் சொற்கள் தேவைப்படின் மொழிபெயர்த்து வழங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்று மறைமலை அடிகளாரின் பெயரன் மறை திருநாவுக்கரசு கூறினார்.

சித்த மருத்துவர் தெ.வேலாயதம் உரையாற்றும்போது தமிழ் மொழியில் 75 விழுக்காட்டுக்கு மேல் சித்த மருத்துவச் சுவடிகளும் நூல்களும் உள்ளன என்றார். ஓய்வுபெற்ற கூட்டுறவுத்துறைப் பதிவாளர் பத்மநாபன் தம் வெளிநாட்டு அனுபவங்களையும் அமெரிக்காவில் தமிழுக்கும் தமிழருக்கும் உரிய இடமும் உரிமைகளும் தரப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

இராமச் சந்திரா மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் வேங்கடாசலம், அமெரிக்க அறிவியல் அறிஞர்  விசுவநாதன், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கந்த சாமி,                                     முதலியோரும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கணினி வல்லுநர்களும் கலந்து கொண்டனர்.

தியூக் பல்கலைக்  கழக அறிவியல் அறிஞர் முனைவர் திருமதி இரமாமணி செயபாலன் “கசப்பும் இனிப்பும்” என்ற தலைப்பில் சர்க்கரைநோய் பற்றிப் பேசினார்.

அமெரிக்காவிலுள்ள கரோலினா தமிழ்ச் சங்கத் தலைவரும் கணினி வல்லுநரும் ஆகிய சுந்தர் செயபாலன் சிறப்புரை ஆற்றினார். கரோலினா தமிழ்ச்சங்கம், உலகதமிழர்கள் அமைப்பு,தமிழர்கள் கூட்டமைப்பு முதலியன தமிழக முதல்வர் செயலலிதா, கச்சத்திவை மீட்கவும் ஈழத்தமிழரைக் காக்கவும், மூவர் உயிர் காக்கவும்  கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்களைப் பாராட்டியதைத் தெரிவித்தார்.    சரவணன் நன்றி கூறினார்.
                                                           நன்றி : மாலை முரசு (25.10.2011 பக்கம் 10)

--------------------------------------------------------------------

No comments:

Post a Comment

தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers