Thursday, March 12, 2020

சீனி மொழி படியுங்கள்!

( தின செய்தி நாளிதழில் 10.03.2020 அன்று வெளிவந்த கட்டுரை.)

                                                            உலகில் மூத்த மொழிகள் என்றும் செம்மொழிகள் என்றும் கூறப்படும் ஆறு தலைமையான மொழிகளில் இன்றும் வாழும் பேசப்படும் சிறப்புடைய மொழிகள் தமிழும் சீனமும் மட்டுமே . ஆயினும் பழைய சீன மொழி இன்று இல்லை; மாண்டரின் என்ற திரிபுச் சீன மொழியே உள்ளது, அதுவும் வட, தென், கிழக்கு மேற்குச் சீன மொழிகளாக வட்டாரவழக்கு மொழிகளாக உள்ளது என்று மொழியியலாளர்கள் கூறுகின்றனர். பேச்சு வழக்கற்ற சமற்கிருதத்தின் வழிமொழியாகிய இந்தி உலகில் பெரும்பான்மை மொழி எனப்பட்டாலும் அதற்கும் இதே நிலைதான். சோனியா பேசும் இந்தி உத்தரகாண்டில் புரியாது, சு சாமி பேசும் இந்தி சரோஜ் நாராயண் சாமிக்குப் புரியாது. தமிழ் மட்டுமே தொல்காப்பியர்,திருவள்ளுவர், கபிலர் எழுதியதும் பேசியதும் பாரதியும் தாசனும் வைரமுத்தும் பேசிய எழுதிய ஒலிகள் அப்படியே உள்ளன. கிரேக்க நாடகங்களில் உள்ள தமிழும், சீன உரோம் நாட்டுக் கல்வெட்டு எழுத்துகளில் உள்ள தமிழும் சிந்துவெளி, மயிலாடுதுறை செம்பியன் கண்டியூர்,மாங்குளம் தமிழி எழுத்துத் தமிழும், மெச்சிகன், மாயன் தமிழும் உலகம் முழுதும் ஒன்றாகவே உள்ளன.

             கிரேக்கம், உரோம், (எகிபது, அரபு நாடுகள்) முதலிய மேற்கத்திய நாடுகளுடன் மட்டுமல்லாமல் கிழக்கே சீனம், சாவகம், சுமத்திரா முதலிய நாடுகளுடனும் தமிழ்நாட்டுக்குள்ள தொடர்பு பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ளது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் வெளி நாட்டாரை யவனர் என்றும் சோனகர் என்றும் குறிப்பிடுகின்றன.   
             
                   பல்லவர் காலத்தில் - கிமு 5, 6, 7 ஆம் நூற்றாண்டுகளிலும் பின்னும்  இந்த உறவு வலிமை அடைந்து தமிழ்நாட்டுக்கும் குறிப்பாகக் காஞ்சிபுரத்திற்கும் சீன நாட்டுக்கும் வணிகத் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் நிகழ்ந்துள்ளன. இதற்கு இணைப்பாகப் புத்த மதம் விளங்கியுள்ளது.  காஞ்சிபுரம், நாளந்தா ஆகிய இடங்களில்விளங்கிய மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள், புத்த மதம் பற்றிய சிந்தனைகளை விரிவாக ஆய்வு செய்து பரப்பி வந்தன.  இந்திய நாட்டின் தேசியக் கொடியில் அசோக சக்கரம் உள்ளது;  அசோகச் சக்கரத்தின் ஆரக் கால்கள் போல அசோகர் அனுப்பிய புத்தமதத் தூதர்கள் எங்கும் பரவினார்கள்.  தெற்கே  இலங்கையிலும் கிழக்கே சீனம் கொரியா, சாவகம் (ஜாவா), சிங்கபுரம் (சிங்கப்பூர்), மலையகம் (மலாயா, மலேசியா, கடாரம்/ கெடா), கம்போடியா, தாய்லாந்து, வியத்நாம், சுமத்திரா, பாலி, சுமத்திரா முதலிய நாடுகள்   வரை புத்த மதம் பரவியது.
             
                   தமிழ்நாட்டில் இருந்து மேற்கே கிரேக்கம் அரபு நாடுகள்,  கிழக்கே தென்கிழக்காசிய நாடுகள்  ஆகியவற்றுக்கும் தமிழக வணிகர்கள் கப்பலில் சென்று வந்துள்ளனர்.  அத்தகைய வணிகக் கப்பல் ஒன்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிமேகலை என்ற 18 வயதுப் பெண் கிபி 2 ஆம் நூற்றாண்டு அளவில் மணிபல்லவத் தீவு வரை  சென்று புத்த மத அறக் கருத்துகளைப் பரப்பி உள்ளார்.  பல்லவத் தலைநகராகிய காஞ்சி முதல் கம்போடியா வரையுள்ள நாடுகளில் கண்ணகியும் மணிமேகலையும் தெய்வமாகப் போற்றப்படுகின்றனர்..            
                   
                     சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ சமணம் ஏற்றுத் துறவியானது போலப்,  புத்தமதத்தை ஏற்றுத் துறவியாக மாறிய மணிமேகலை  மணிபல்லவம், சாவகம், கம்போடியா, சுமத்திரா முதலிய    கீழை ஆசிய நாடுகளுக்குக் கப்பலில் சென்றது போலப்,   கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டு அளவில் போதி தருமன் என்ற   பல்லவ இளவரசர் காஞ்சியிலிருந்து சீனம் சென்றுள்ளார். இவர் புத்த மதக் கருத்துகளையும் சித்த மருத்துவத்தையும் வர்மம் சார்ந்த  களரி என்ற போர் முறையையும் பரப்பிப் புகழ் பெற்று  இன்றும் வணங்கப்படுகிறார்.  போகர் என்ற சித்தர் பல ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னாலேயே சீனத்திற்குச்  சென்று சித்த மதக் கருத்துகளைப் பரப்பி உள்ளார்.
                      
                  ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னால் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் தமிழ் நாட்டுக்கும் சீன நாட்டுக்கு மிக நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இரண்டு நாட்டு அரசர்களும் தாங்கள் அரசவையில் தூதர்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.  வணிக உறவும் சிறப்பாக இருந்துள்ளது.
   
                தமிழ்நாட்டு அரசர்களும் வணிகர்களும் இந்து மதக் கோயில்களை கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கட்டியுள்ளனர்.  பேரரசன் முதலாம் இராசராசன் தன் அரசவையில்  இருந்து 12 அரசுத் தூதர்களைச் சீன அரசவைக்கு அனுப்பியுள்ளான்; இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரன் 30 அரசுத் தூதர்களை அனுப்பியுள்ளான்.  சீன நாட்டிலிருந்து சீன அரசின் சார்பாக அரசுத் தூதர்கள் சோழ அரசர்களின் அவையிலும் இருந்தார்கள். 
                
                 தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தின் ஒரு மாடத்தில் உள்ள வெளிநாட்டார் சிற்பத்தை  இராசராசனின் நண்பர் ஆகிய சீன அரசரின் அல்லது அவன்  அரசவையில் இருந்த சீன தூதரின் சிற்பமும் அவர் மனைவியின் சிற்பமும் ஆகும் என்று கருதுகின்றனர்.   தஞ்சாவூர்ப் பெரிய கோயிலில் புத்தரின் புடைப்புச் சிற்பங்கள் மூன்று உள்ளன.   
                 
                 இராசராசன் கடாரத்து அரசன்  விசயோத்துங்க வர்மனின்  தாய் வேண்டுகோளுக்கு இணங்க நாகப்பட்டினத்தில் புத்தருக்குக் கோயில் (விகாரம்) அமைத்து மானியமும் அளித்துள்ளான்.  தஞ்சை மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புத்த துறவிகள் வாழ்ந்துள்ளனர்; புத்தர் சிலைகள் நூற்றுக்கணக்கில் கிடைத்துள்ளன.
              
              தமிழ் நாட்டிலிருந்து  திசையாயிரத்து ஐநூற்றுவர் / எண்ணூற்றுவர், நானாதேசிகள்  முதலிய வணிக குழுக்கள் சீனா நாட்டுக்கும்  பிற கிழக்காசிய நாடுகளுக்கும் சென்றுள்ளன. சீனா தாய்லாந்து கம்போடியா இந்தோனேசியா முதலிய நாடுகளில் இவர்கள் கட்டிய கோயில்கள் உள்ளன; தமிழ்க் கல்வெட்டுகளும் உள்ளன. சீன நாட்டில் கிடைத்த மணி ஒன்றில் தமிழ் எழுத்துகள் உள்ளன.                 

           தமிழ்நாட்டைப் போலவே சீன நாட்டிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் பண்பாடும் பழக்கவழக்கங்களும் ஒத்து உள்ளன.  சல்லிக்கட்டு / மஞ்சுவிரட்டு, கோழிச்சண்டை, தாயம் விளையாடுதல், மற்போர், களரி, பொங்கல் வைத்தல் முதலிய பண்பாட்டுக் கூறுகள் தமிழ்நாட்டைப் போலவே சீன நாட்டிலும் தாய்லாந்து, கொரியா,  கம்போடியா, பாலி, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் உள்ளன. 

              மாமல்லை,  கடல்மல்லை என்று போற்றப்படும் மாமல்லபுரத்தில் இருந்தும் பூம்புகார் முசிறி தொண்டி முதலிய துறைமுகங்களில் இருந்தும் சீனா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகத்  தமிழ்நாட்டியிருந்து கப்பல்கள் (வங்கம் : கப்பல்) கீழை மேலை நாடுகளுக்குச் சென்றுள்ளன. அதனால்தான் தென் கிழக்குக் கடல் பகுதி "சோழ ஏரி" என்றும், "வங்கக்கடல்" (வங்காள விரிகுடா) என்றும் "சோழ மண்டலக் கடற்கரை  (ஆங்கிலத்தில் : Coromandel Shore/ Coromandel Coast))" என்றும், கடல்வழியில் இளைப்பாறிய இடம்  "வங்காளம் (பெங்கால்)" என்றும் பெயர் பெற்றன.

             காஞ்சிபுரம் என்னும் காஞ்சி புத்த மதப் பல்கலைக்கழகமாக விளங்கியது என்பதோடு நெசவிலும் புகழ்பெற்று விளங்கியது.  காஞ்சி என்பதற்குத்  துணி, உடை, பொன் என்றெல்லாம் பொருள் உண்டு.  காஞ்சிப் பட்டு  உலகப் புகழ் பெற்றது சீன வணிகர்களால்தான்.     காஞ்சிபுரத்தின் தலைசிறந்த பட்டு நெசவாளர்கள் இரண்டு பேர் சீனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். காஞ்சிப் பட்டு சீனம் சென்றது போல,  சீனத்துப் பட்டும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது. சீனத்துப் பட்டு, சீனத்துப் பொன், சீனத்து மதுக் கிண்ணம், கொள்கலன் (ஜார்) -முதலியன தமிழ்நாட்டில் புகழ் பெற்று விளங்கின. சீனத்து நாட்டிலிருந்து வந்தவை  சீனி வெடி,  சீனப்பட்டு, சீனத்துக்கிளி என்றும் வழங்கின. தொடக்கத்தில்   சீனத்து நாட்டிலிருந்து வந்ததால்  கரும்புச்சர்க்கரை சீனி என்று பெயர் பெற்று இப்போது வெண்ணிறச் சர்க்கரைக்குரிய பொதுப்பெயராக  தமிழ்நாட்டில் வழங்குகின்றது. மதுரையில் சங்கக் காலத்தில் சீனர் குடியிருப்பு இருந்துள்ளது; அண்மையில் சீன நாணயங்கள் மதுரையிலும் சார்ந்த பகுதிகளிலும் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. 
             
  சீனப் பயணிகள் யுவான் சுவாங் , பாகியான், முதலியோர் காஞ்சிக்கும் மதுரைக்கும் வந்துள்ளனர். தமிழ்நாட்டு மன்னர்களைப் பற்றியும் மக்களைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளனர்.  அதைப்போல சீன நாட்டில் இப்பொழுது கிடைக்கின்ற மிகத் தொன்மையான வணிகர்களின் / வரலாற்று ஆசிரியர்களின் நூல்கள் குறிப்புகள் முதலியவற்றில் தமிழக மன்னர்களைப் பற்றியும் வணிகம் பற்றியும் குறிப்புகள் உள்ளன. தமிழக வரலாற்று ஆய்வாளர்களும் மொழியியல் வல்லுநர்களும் சீன மொழி பயின்று  சீன வரலாற்று அறிஞர்கள் / அல்லது சீனப் பயணிகள் சீன (சீனி) மொழியில் எழுதி வைத்துள்ள ஆவணங்களைத் தமிழில் மொழிபெயர்த்தால் தமிழர் வரலாற்றின் மிகத் தொன்மையும் பழமையும் சிறப்பும் பற்றிய மிகப்பெரிய வரலாற்று உண்மைகளை வெளிக் கொணர முடியும்.
  **********        ************       ***********    

                                                      - முனைவர் பா. இறையரசன்.


                                                                                   
                                                                                      ( நன்றி:   தின செய்தி நாளிதழ் 10.03.2020 )

No comments:

Post a Comment

தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers