Saturday, October 13, 2012

ஆட்சிமொழிப் பாசறை


பாவாணரின் பெயரைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்குச் சூட்டவேண்டும்!
                               ஆட்சிமொழிப் பாசறை கோரிக்கை!



04. 10. 2012   வியாழன் காலையில் சின்னப்போரூர், செந்தில்நகரில்  உள்ள  நாம் தமிழர் அரங்கத்தில்,                                       செந்தமிழன் சீமான் அவர்கள் நாம்தமிழர் ஆட்சிமொழிப் பாசறையைத் தொடங்கி வைத்தார்கள். தமிழ்க்கொடி நாகராசன் தமிழிசை பாடினார்.
மறத்தமிழன் வரவேற்கிறார்
புறநானூறு பற்றி முனைவர் பா.இறையரசன்,  தமிழ் மொழி திரிந்து உலகளாவிய மொழிகளாகத் திகழ்வது பற்றிப் பொறிஞர் அருட்கண்ணனார், இலக்கியமும் அறிவியலும் பற்றி மருத்துவர் இளவஞ்சி ஆகியோர்  பேசினர். மறைமலை அடிகளின் பேரன் மறை. தி. தாயுமானவன், மறத்தமிழ் வேந்தன் ஆகியோர் தனித்தமிழ் பற்றிப் பேசினர். சித்தமருத்துவர் ஆனைவாரி ஆனந்தன், கரந்தைப் பேராசிரியர் முனைவர் செல்லன் ஆகியோரும் பெருந்திரளான தமிழன்பர்களும் இளைஞர்களும் பெண்களும் பங்கேற்றனர். 


செந்தமிழன் சீமான் பாசறையைத் தொடங்கிவைக்கிறார்

      ஒரு இனத்தின் அழிவு மொழியை இழந்தால் நிகழும்; அதனால் மொழியைக் காக்கவேண்டும். மொழி விடுதலையே இனவிடுதலை. இனம் விடுதலையடைந்தால் ஆட்சியிலும் விடுதலை பெறலாம். வடமொழிக் கலப்பால் தமிழிலிருந்து திரிந்து தெலுங்கு முதலிய மொழிகள் பிறந்தன. தமிழர்கள் வாழ்க்கையில் பேச்சு வழக்கில் கூட ஆங்கிலம் அதிகமாகக் கலந்துவிட்டது. எனவே தமிங்கிலத்திடமிருந்து தமிழைக் காக்க வேண்டும் என்று சீமான் பேசினார். 


மறை.தி தாயுமானவன் பேசுகிறார்
 
வரலாற்றறிஞர் தஞ்சை கோ.கண்ணன் பேசுகையில், பல்லாவரம் மலைத்தொடர்களில் 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலக் கோடரிகளை புரூசுஃபுட் கண்டுபிடித்து 150 ஆண்டுகளாவதை ஒட்டி,  மீனம்பாக்கம் வானூர்தி நிலையத்திற்கு எதிரில் உள்ள அம்மலைப் பகுதியில் பன்னாட்டுத் தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப் பெறவேண்டும் என்றார்.
அரசு பள்ளி,கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வி மட்டுமே இருக்கவேண்டும்; தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டரசின் வேலைவாய்ப்புகள் தரப்படவேண்டும்.
செம்மொழி நிறுவனம், திராவிடப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் ஆட்சிக்குழுவில் தமிழே தெரியாதவர்கள் அமர்த்தப்படக் கூடாது.  பாவாணரின் பெயரைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்குச் சூட்டவேண்டும்; அவருக்குச் சென்னையில் இதுவரை சிலை இல்லாததால்,  அமைக்கப்படவேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்றன. காஞ்சி எழிலரசன் நன்றி கூறினார். 



Monday, August 6, 2012

எழுத்தேணி செய்தி-மாலைமுரசில் 05-08-2012


29-07-2012 அன்று காலை நடைபெற்றது.அமெரிக்காவிலிருந்து 
வந்துள்ள தமிழ் உலகஅறக்கட்டளையின் தலைவர்ஆல்பர்ட் சிறப்புரைஆற்றினார்தமிழ் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கதமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.வெளிநாடுகளில் வாழ்கிற தமிழர்களின் பிள்ளைகள்தமிழ் கற்க வாய்ப்பில்லாமல் தமிழை மறந்துவருகிறார்கள்அவர்களுக்கு இணைய வழி அடிப்படைக்கல்வியை பெறவேண்டுமென்று தமிழ் எழுச்சிப்பேரவையின் செயலாளர் இறையரசன் கூறினார்.

வரலாற்று அறிஞர் கோ.கண்ணன் பேசும்போது,தமிழர்கள் தங்கள் தாழ்வு
 மனப்பான்மையைக் கைவிட்டுதமிழ் வளர்ச்சிக்குரிய பணிகளைச் செய்ய வேண்டும்.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மேலைநாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் சென்று நம்மொழியையும் பண்பாட்டையும் பரப்பியுள்ளார்கள்.கம்போடியாதாய்லாந்துகொரியா , வியத்னாம்சீனாமுதலிய நாடுகளில் நம்முடைய கோயில்களும்,கல்வெட்டுகளும் உள்ளனஅம்மா அப்பா முதலியஐநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் அந்நாட்டுமொழிகளில் உள்ளனதாய்லாந்து நாட்டில் மார்கழிமாதத்தில் தேவாரம்திருவெம்பாவை முதலியனஇன்றும் பாடப்படுகின்றன என்று கூறினார்.

மறத்தமிழ்வேந்தன் பேசுகையில் மிழர்கள்அனைத்து மொழிகளையும் 
மதிப்பவர்கள்தங்களுடையமொழியைக் காப்பதற்கு அவர்களுக்கு உரிமை 
ண்டு.மற்ற மொழியினர் அதைக் குறை சொல்வது தவறுசாதிமத வேறுபாடில்லாமல் நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்றார்.

மருத்துவர் இளவஞ்சி பேசும்போது 
1886 –இலெயே இலங்கையில் சாமுவேல் பிஷ் கிரீன்மருத்துவப் பட்டப் படிப்புக்கான பாடங்களைத் தமிழில்கற்பித்தார்கிறித்து பிறப்பதற்கு முன்னாலேயே தமிழ்ச்சொற்கள் உரோமானிய நாடு வரை பரவி இருந்தன .ஆனால் இசை நடனம் முதலியவற்றில் தமிழ்ச்சொற்களை நீக்கி வடமொழிச் சொற்களைத்திணிக்கிறார்கள்நாம் நம் மொழியையும்பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

கவிக் குயில் இதழ் ஆசிரியர் சித்த மருத்துவர்ஆனைவாரி ஆனந்தன்,
 மன்னார்குடி பேராசிரியர் மணி,மிழாசிரியர்கள் செயந்தினந்தன்,தஞ்சைராசகணேசன்பட்டுக்கோட்டை ராசசேகரன்,குருமூர்த்திமுதலியோரும் பேசினர்எழுத்தேணி றக்கட்டளையின் சார்பாக  தங்கமணிமாணவர்களுக்கு நிதி உதவிக் காசோலைகளைவழங்கினார். இந்திய ஆட்சிப்பணித் தேர்வுக்குப் பயிலும் சுந்தர்,வாசன் கண் மருத்துவக்கல்லூரியில் பயிலும் விட்டுணுதயா,  உழவியல் பட்டப்படிப்புப் பயிலும் ஆத்தூர் செயபாரதி, சிறீராம் கல்லூரியில் இள அறிவியல் கணினியில் சேர மாணவர் சுடர்த்தமிழ்ச்சோழன் ஆகியோர்க்கு மூறையே 10000 மேனிக்கு வழங்கப்பட்டது.

ஆன்மவியல் மருத்துவம் பற்றி ஜான் ரத்தினராஜ்விளக்கினார்திரு
மதி பகவதி நோய் நீக்கும் முறையைசெய்து காட்டினர்.
மாலையில் நடைபெற்ற கூட்டத்தில்  கவிஞர்காரைமைந்தன் , இறையெழி
லன்மறை தாயுமானவன்,.மதிவாணன்ஆகியோர் பேசினர்அனைத்துலகத்தமிழர் ஆய்வு நடுவம் ஒன்றை அரசியல் மதம் சாதிகடந்த நடுவு நிலைமையுடன் கூடிய பல்துறை அறிஞர்ஒன்று கூட்டி அறங்கூர் நடுவமாகம் மொழி இனம்,நாடு தொடர்பான அறிவியல் ஆய்வு வழியில் கண்டஉண்மைகளை உலகுக்கும்அரசுக்கும் அறிவிப்பதற்காகஅமைக்க முடிவு செய்யப்பட்டது.




                                                     நன்றி: மாலைமுரசு 05-08-2012

Tuesday, July 24, 2012

தமிழ் இதழ்களுக்கு வேண்டுகோள்!


மதிப்பிற்குரிய ஆசியர் அவர்களுக்கு,
உலகின் பல் வேறு பகுதிகளிலிருந்து, பல சவால்களுக்கிடையில் செய்திகளை, தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பதற்கு முதலில் உங்களுக்கு நாங்கள் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  சனநாயகத்தின் நான்காம் தூண் என்று பத்திரிகை கருதப்படுகிறது. ”வாள் முனையை விட பேனா முனைக் கூர்மையானது” என்றொரு சொல்லாடலை ஆங்கில ஆசிரியர் எட்வர் புல்வர்-லைட்டன் என்பவர் உருவாக்கினார். நாங்களும் அதை நம்புகிறோம்.
அத்தனை அற்புதமானக் கூர்வாளைக் கொண்டு நீங்கள் பாலினப் பாகுபாட்டை ஊக்குவிக்கிறீர்கள், உங்கள் பத்திரிக்கைகளில், இதழ்களில் ஆபாசப் படங்களை வெளியிடுகிறீர்கள் என்று காணும்போது வேதனை அடைகிறோம். உங்களின் இந்த பொறுப்பின்மையைக் கண்டு வெட்கப்படுகிறோம். ஒரு புறம் பெண்களுக்கெதிராக அரசு, தரகர்கள், அதிகார வர்க்கத்தினர், ஆண்கள் செய்யும் வன்கொடுமைகளைப் பற்றி செய்தி வெளியிடுகிறீர்கள். மறுபுறம், நடிகைகள், பெண்களின் உடல் பாகங்களை (பாலியல் உணர்வைத் தூண்டும் வகையான) அதாவது கவர்ச்சி, ஆபாசம் என்று சொல்லக்கூடிய படங்களையும் செய்திகளையும் வெளியிடுகிறீர்கள். உங்களின் இந்தச் செயலை “சதை வியாபாரம்” என்று தான் சொல்ல வேண்டும்.
நீங்கள் வெளியிடும் இந்த ஆபாசப் படங்களால் ஆண்களின் பாலியல் உணர்ச்சிகள் தூண்டப்பெறுவதாகாவும், அது பெண்களுக்கெதிரான பாலின வன்கொடுமைகளுக்கு வித்திடுவதாகவும் நாங்கள் கருதுகிறோம். அக்குற்றங்களுக்கு மறைமுகக் காரணிகளாக உங்களை, உங்கள் பத்திரிகையை, இதழைப் பொறுப்பாளராக்குகிறோம். இப்படி தூண்டப்பெறும் ஆண்கள் பெரும்பாலும் குழந்தைகளை, பதின்பருவ வயதினரை அதிகமாகச் சுரண்டுகின்றனர்.
மிஸ் எனும் இதழ் பின்வருமாறு குறிப்பிடுகிறது “பாலியல் பண்டமயமாக்கப்படும் கலாச்சாரத்தில், பெண்கள் (குறிப்பாக) தங்களைத் தாங்களே மற்றவர்களுக்கான நுகர்வுப் பொருளாக காணும் நிலைக்கு உள்ளாகிறார்கள்.  இந்த பாலியல் பண்டமய உட்புறமாக்கலானது பல்வேறு மன நலச் சிக்கலோடு தொடர்பு படுத்தப்படுகிறது. (மருத்துவரீதியான மன அழுத்தம், “உடலை கண்காணித்துக் கொண்டே இருக்கும் பழக்கம்”), உணவு உண்ணும் கோளாறு, உடல் பற்றிய வெட்கம், சுய-மதிப்பு மற்றும் வாழ்வு நிறைவு மீதான கேள்விகள், மனநிலை செயல்பாடுகள், இயக்கு தசை செயல்பாடுகளில் சிக்கல், பாலியல் பிறழ்ச்சி, அரசியலில் தலைமையை அனுகுதலில் பின்னடைவு மற்றும் அரசியல் பலாபலன் அடைவதில் சிக்கல்கள் ஆகியவை ஏற்படுகிறது.  எல்லா இனப்பிரிவு பெண்களிடமும் இந்த பண்டமய உட்புறமாக்கலானது ஆணை விட அதிகமாகப் பாதிக்கிறது.” *
பெண்களைப் பாலியல் பண்டமாகச் சித்தரிப்பதற்கும், பெண்களைப் பற்றிய தவறான மதிப்பீடுகளை பரப்பவதற்கும் உங்கள் வெளியீடுகள் ஒரு காரணமாக இருக்கிறது  என்று உங்கள் மீது நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இவை பெண்களுக்குப் பெரும் ஆபத்துகளை விளைவிக்கிறது. நீங்கள் பெண்களைப் பாலியல் வேட்கைக்கான ஒரு பொருளாக சித்தரிக்கிறீர்கள், பெண்களின் மனிதத்தன்மையை அகற்றுகிறீர்கள்.
இம்மனு மூலம் மாசெஸ் அமைப்பும் இதில் கையெழுத்திடுவோரும் பெண்களின் உடலுக்குரிய மரியாதையைக் கோருகிறோம். நடிகைகள், பெண்களின் ஆபாச / கவர்ச்சி / உடல் பாகங்களை வெளியிடும் பொறுப்பற்ற உங்கள் செயலை நீங்கள் திரும்பப் பெறவேண்டும், நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்களிடமிருந்து ஒரு உறுதி மொழியைக் கோருகிறோம்.
குறிப்பிட்ட அளவு கையொப்பம் கிட்டியவுடன் இதழ்கள் பெண்களின் புகைப்படங்களை வெளியிடுவதில், பெண்களைப் பற்றிய சித்தரிப்புகளில் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று மாசஸ் அமைப்பு இந்திய அரசாங்கம், தேசிய பெண்கள் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், பெண்கள் தேசியக் கூட்டனி, இந்திய பிரஸ் கவுன்சில், மகளிர் அமைப்புகள், குழுக்கள் மற்றும் இதர மனித உரிமை அமைப்புகளிடமும் அழுத்தம் கொடுக்கச் சொல்லி முறையிடும்.
ஊடகங்களில் பெண்களின் உடல்களைப் பாலியல் ரீதியாக சுரண்டுவதை பெண்களுக்கெதிரான பாலியல் பாகுபாடு என்று கருதப்பட வேண்டும். அதை தடுக்கவில்லையென்றால் இந்திய அரசாங்கம் பெண்களுக்கெதிரான பாகுபாட்டை அழிப்பதற்கான செயற்குழுவில் (CEDAW) கையெழுத்திட்டதின் மூலம் ஏற்றுக் கொண்ட பொறுப்பிலிருந்து விலகிச் செல்வதாகும்.
ஜூலை 1993 மாநாட்டில் பெண்களுக்கெதிரான எல்லாவிதமான பாகுபாடுகளையும் நீக்கிவிடுவதாக இந்திய அரசு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் கால இடைவெளியில் (4 வருடம்) UN CEDAW செயற்குவுக்கு (சுதந்திரமான வல்லுனர்கள்) நாட்டில் பெண்களுக்கெதிரான பாகுபாடுகளைக் களைவதற்காக அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்று அறிக்கை அளிக்க வேண்டும்.
கையொப்பம் இட:

Wednesday, May 2, 2012

http://www.facebook.com/photo.php?fbid=244470245629744&set=a.244469462296489.56999.100002003102419&type=3

Monday, November 28, 2011


இணையத்தில் வடமொழிக் கலப்பை எதிர்த்த

அமெரிக்கத்தமிழ்ச் சங்கத் தலைவருக்குச்
சென்னையில் பாராட்டு விழா!


சென்னை, அக். 25- எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை,  தமிழ் எழுச்சிப்பேரவை ஆகியவற்றின் சார்பில்  கரோலினா தமிழ்ச் சங்கத் தலைவர் சுந்தர் செயபாலனுக்குச் சென்னையில் வரவேற்பு தரப்பட்டது.

விரிவான செய்திக்குப் பார்க்க : https://groups.google.com/forum/?hl=ta#!topic/aaiviththamizh/5iJ1z2saaW8

தமிழ் எழுச்சிப்பேரவையின் செயலர் முனைவர் பா. இறையரசன் வரவேற்றார். அமெரிக்காவிலுள்ள யுனிகோடு கன்சார்ட்டியம் என்கிற  ஒருங்குகுறி சேர்த்தியத்தில் அன்றைய தமிழக அரசு உறுப்பினர் கட்டணம் கட்டிப் புதுப்பிக்கவில்லை; சுந்தர் செயபாலன் தாமே உறுப்பினர் ஆகி காஞ்சி மடத்தைச் சேர்ந்த இரமண சர்மா கோரிக்கையின்படி தமிழில் கிரந்த எழுத்துகள் சேர்க்கப்பட்டபோது, உலகத் தமிழர்களின் சார்பில் அதை எதிர்த்து ஒருங்குகுறி சேர்த்தியத்தில் பதிவு செய்தார் என்று இறையரசன் பாராட்டினார்.

திரைப்படக் கவிஞர்கள் அண்ணாமலை, பூவை வாலறிவன், சித்த மருத்துவர் கவிஞர் பொ.அ.அரசக்குமரன் (ராஜ் குமார்), உணர்ச்சிக் கவிஞர் தஞ்சை கோ. கண்ணன், வத்திரா இருப்பு தெ.சு. கவுதமன், கவிஞர்கள் எழில் வேந்தன்.தனித்தமிழ் வேங்கை மறத்தமிழ் வேந்தன்   முதலியோர் கவிதை படித்தனர்.

அழகிய தமிழ் மொழியில் தூய சொற்கள் பல உள்ளபோது பிறமொழிச் சொற்களைக்  கலக்க வேண்டியதில்லை; அறிவியல் தொழில் நுட்பம்  சார்ந்த பிற மொழிச் சொற்கள் தேவைப்படின் மொழிபெயர்த்து வழங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்று மறைமலை அடிகளாரின் பெயரன் மறை திருநாவுக்கரசு கூறினார்.

சித்த மருத்துவர் தெ.வேலாயதம் உரையாற்றும்போது தமிழ் மொழியில் 75 விழுக்காட்டுக்கு மேல் சித்த மருத்துவச் சுவடிகளும் நூல்களும் உள்ளன என்றார். ஓய்வுபெற்ற கூட்டுறவுத்துறைப் பதிவாளர் பத்மநாபன் தம் வெளிநாட்டு அனுபவங்களையும் அமெரிக்காவில் தமிழுக்கும் தமிழருக்கும் உரிய இடமும் உரிமைகளும் தரப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

இராமச் சந்திரா மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் வேங்கடாசலம், அமெரிக்க அறிவியல் அறிஞர்  விசுவநாதன், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கந்த சாமி,                                     முதலியோரும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கணினி வல்லுநர்களும் கலந்து கொண்டனர்.

தியூக் பல்கலைக்  கழக அறிவியல் அறிஞர் முனைவர் திருமதி இரமாமணி செயபாலன் “கசப்பும் இனிப்பும்” என்ற தலைப்பில் சர்க்கரைநோய் பற்றிப் பேசினார்.

அமெரிக்காவிலுள்ள கரோலினா தமிழ்ச் சங்கத் தலைவரும் கணினி வல்லுநரும் ஆகிய சுந்தர் செயபாலன் சிறப்புரை ஆற்றினார். கரோலினா தமிழ்ச்சங்கம், உலகதமிழர்கள் அமைப்பு,தமிழர்கள் கூட்டமைப்பு முதலியன தமிழக முதல்வர் செயலலிதா, கச்சத்திவை மீட்கவும் ஈழத்தமிழரைக் காக்கவும், மூவர் உயிர் காக்கவும்  கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்களைப் பாராட்டியதைத் தெரிவித்தார்.    சரவணன் நன்றி கூறினார்.
                                                           நன்றி : மாலை முரசு (25.10.2011 பக்கம் 10)

--------------------------------------------------------------------

Sunday, November 13, 2011

அண்ணா நூலகத்தை மாற்றாதே!





தென்மொழி இதழ் 2042, நளி (நவம்பர்,2011)
அண்ணா நூலகத்தை மாற்றாதே!

றிவின் ஊற்றாகத் திகழ்வன நூலகங்கள். தனிப்பட்டமனிதர்களின் நூலகங்களை விட பொதுமக்களுக்குப் பயன்படும் நூலகங்கள் பலரையும் பல தலைமுறைக்குச் சென்றடையும். பழங்காலத்தில் அரசர்களும் துறவிகளும் புலவர்களும் ஆசான்களும் சுவடிகளைச் சேர்த்து வைத்திருந்தனர்; மடங்களும் கோயில்களும் நூலகங்களாக விளங்கின. தனியார் சேர்த்துவைத்த புத்தகங்களும் வீட்டில் அமைத்துக் கொண்ட நூலகங்களும் கூடப் பிற்காலத்தில் பொதுச் சொத்தாகிப் பலருக்கும் பயன்படுகின்றன. தஞ்சை சரபோசி மன்னர், மறைமலை அடிகள், பாகனேரி ஆறுமுகம் செட்டியார், குளித்தலை கா.சு.பிள்ளை, புதுக்கோட்டை உரோசா முத்தையா நுலகங்கள் இன்றைக்குப் பொதுமக்களுக்கு உரியவையாகிப் பயன்பாட்டில் உள்ளன.  இன்னும் எண்ணற்றோர் தாம் சேர்த்த அறிவுச் சொத்தாம் நூல்களைப் பொது நூலகங்கள் ஆக்கிப் பொதுச்சொத்தது ஆக்கியுள்ளார்கள். அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் முதலிய அறச் செயல்களை விட  ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் மிக  உயர்ந்த அறம் என்பார் பாரதியார்.

இளம் மாணவர்கள் கல்வி கற்கக் கல்விக்கூடங்களில் சேர்ந்தோர் மட்டுமே – பெரும்பாலும் பணம் கொடுத்துப் – படிக்கக் கூடியவர்களுக்கு மட்டுமே  கல்விச் சாலைகள் பயன்படுகின்றன; ஆனால் இலவயமாக எல்லோரும் – எல்லா அகவையினரும் (வயதினரும்) படிக்க- அறிவைப் பெருக்கிக் கொள்ள உதவுவன பொது நூலகங்கள். கல்விக்கூடங்களில் இடம் கிடைக்காதவர்களும், வாய்ப்பில்லாதவர்களும், ஏழைகளும்,முதியோர்களும் படிக்க நூலகங்கள் உதவுகின்றன. ஆய்வாளர்களும்,  மாணவர்களும் கல்விச்சாலைகளில் படித்தற்கும் மேலாகத் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ள நூலங்களைத்தான் நாடுகிறார்கள். ஒரு கல்விக்கூடம் திறக்கப்பட்டால்  ஒரு சிறைச் சாலை மூடப்படும் என்பார்கள்; ஒரு நூலகம் திறக்கப் படுவதால் பல சிறைச் சாலைகள்  முடப்படும்.

அறிஞர் அண்ணா கன்னிமாரா நூலகத்தில் படித்துத் தாம் உயர்ந்ததைப் பெருமையாகச் சுட்டுவார். அப்படிப்பட்ட அறிஞர் அண்ணாவின் பெயரால் அமைக்கப்பட்ட நூலகம் முந்தைய அரசு கட்டியது என்பதற்காக, இன்றைய அரசு அந்த நூலகத்தை மாற்ற நினைப்பதோ ஒடுக்க நினைப்பதோ தவறானதாகும். கலைஞர் கட்டியது என்பதற்காகத் தலைமைச் செயலகத்துக்காகக் கட்டிய புதியகட்டடத்தை உயர் சிறப்பு மருத்துவ மனையாக மாற்றுவேன் என அறிவித்துப் பழைய கட்டடத்திலேயே – கோட்டையிலேயே ஆட்சிப்பொறுப்பை ஏற்று அங்கேயே தலைமைச் செயலகத்தை நடத்திவருகிறார் இன்றைய முதல்வர் செயலலிதா . முந்தைய ஆட்சியில் நடந்த சீகேடுகளை மாற்றினால் – போக்கினால் – தவறில்லை.

சமச்சீர் கல்வியில்  முதல்வர் செயலலிதா பின்பற்றிய முறையை அனைவரும் எதிர்க்கவில்லை; மாணவர்களின் படிப்புக் காலம் வீணாகிறதே என்றுதான் அனைவரும் வருத்தப்பட்டனர். சமச்சீர்கல்வி உண்மையில் பாடத்திட்ட அளவில்தான்  சமச்சீர்கல்வியே தவிர உண்மையான முழுமையான சமச்சீர் கல்வியில்லை என்று கல்வியாளர்கள் முந்தைய அரசு கொண்டுவந்ததில் குற்றம் சொல்லத்தான் செய்தார்கள். மேலும் பாடத்திட்டத்தில் மட்டுமல்லாமல் பாடங்களில் கலைஞர் புகழ் பாடும் தன்மை மிகுந்து இருந்ததைக் கல்வியாளர்கள் ஏற்கவில்லை. மேலும் சமச்சீர் கல்வியை ஏற்பதாகவும் பிறகு நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் முதல்வர் செயலலிதா கூறியிருந்ததைப் பலர் வரவேற்றார்கள்.


சமச் சீர்கல்விப் புத்தகங்களின் அட்டையில்  இருந்த கலைஞர் பாடிய செம்மொழிப்பாடல் நீக்கப்பட்டது தவறு என்பதற்கில்லை; ஏனென்றால் அப்பாடலே தவறுடையது. ஆனால் தமிழ் செம்மொழி என்ற    செய்தியும், தமிழ்ப்புத்தாண்டு பற்றிய பாடமும், திருவள்ளுவர் சிலைப் படமும்  நீக்கப்பட்டன என்பது தமிழறிஞர்களுக்கு வருத்தம் தந்தது. செம்மொழி என்ற தகுதியைத் தமிழுக்கு நடுவண் அரசு அறிவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சி நூறு ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்தால் வென்றதாகும். திருவள்ளுவர் ஆண்டு, தமிழர் திருநாள் என்ற முயற்சியும் அவ்வாறே நூறாண்டு கடந்த முயற்சியின் வெற்றியாகும்.  மறைமலை அடிகள், கா.நமச்சிவாய முதலியார், தேவ நேயப் பாவாணர் முதலியோரின் கருத்தாக்கங்களே இவை.

கலைஞர் ஆட்சியில் நடந்த தவறுகளும் ஊழல்களும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றாமல் கைவிட்டதும் அவரை ஆட்சியிலிருந்து நீக்கின. சிங்கள அரசு  பயங்கரவாதத்தை ஒழிக்கும் உள்நாட்டுப்போர் என்று கூறி ஈழத்தில் பொதுமக்களை அமில குண்டுகள் வீசிக் கொன்றழித்தபோது, தமிழ் நாட்டில் இருந்த கலைஞர் ஆட்சி ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை என்ற வருத்தம் உலகத்தமிழர்களின் நெஞ்சில் ஆழப்பதிந்ததால்தான், அடுத்து புதிய ஆட்சி செயலலிதா தலைமையில் வரவேண்டும் எண்று விரும்பினர். அதன்படி மிகப்பெரும்பான்மையான வெற்றியை செயலலிதா பெற்றார். இப்போது உள்ளாட்சியிலும் பெற்றுள்ளார். அதைத் தக்கவைத்துகொள்ள வேண்டியது அவர் கடமை.

செயலலிதா பதவியேற்றவுடன் ஈழத்தமிழர்களுக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க இரு தீர்மானங்களைக் கொண்டு வந்து உலகத்தமிழ் மக்களின் நன்மதிப்பினைப் பெற்றார். கச்சத்தீவினை மீட்க வேண்டும் என்பதும் தமிழக மீனவர்களைக் காக்க வேண்டும் என்பதும் முதல்வர் செயலலிதா அவர்களின் மிகப்பெருங்குரலாக ஒலித்ததால் உலத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் அவரைப் போற்றினர். தமிழக மீனவர்களைச் சிங்களர்கள் தாக்கிக் கொன்றுவருவதைச் சுட்டிப் பேசுகையில் ,” தமிழக மீனவர்கள் என்று பார்க்காதே! இந்திய மீனவர்களாகப் பார்!” என்று மைய அரசிடம் துணிந்து பேசியபோது தமிழக வீரப்பெண்ணாகப் பார்த்துத் தமிழர்கள் மகிழ்ந்தனர்.

ஆனால், மூவர் தூக்குதண்டனை நீக்க முதலில் மறுத்துப் பின் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததும், 29-10-2011 அன்று நடந்த வழக்கு உசாவலில் நடுவண் அரசு சார்பில் சொல்லப்பட்டது போலவே,  தூக்கு தண்டணை நீக்க வேண்டலை (கருணைமனுவை) ஒதுக்கித் தள்ளலாம் (அதாவது தூக்கு தண்டனை தரவேண்டும்) என்று தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் கருத்தளித்துள்ளதும் முதல்வர் செயலலிதா தமிழ் இன நலத்திற்கு உண்மையில் ஏதும் செய்ய மாட்டாரோ என்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் இன நலன் சிங்கள அரசாலோ நடுவண் அரசாலோ கேடுற்றால் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழக முதல்வரைச் சார்ந்ததே! அதே போல தமிழ் மொழி நலனும் பாதுகாக்கப்பெற வேண்டும் என்று எதிபார்க்கிறோம்.  சென்ற முறை செயலலிதா ஆட்சியில்தான் கண்ணகி சிலை அகற்றப்பட்டது; மீண்டும் கலைஞர் ஆட்சியில் கண்ணகி சிலை சென்னை கடற்கரையில் அமைக்கப்பெற்றது.  தலைமைச் செயலகம் அமைக்க இராணி மேரி கல்லூரியை இடிப்போம் என்று முன்பு முதல்வராக இருந்தபோது செயலலிதா முற்பட்டு, மாணவர்கள் எதிர்த்ததால் கைவிடப்பட்டது. மொழி, பண்பாடு, கல்வி முதலியவற்றில் கைவைத்தால் வலிமையான ஆட்சி வலுவிழந்து போகும்.
”ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை அழி” என்றோர் ஈரானியப் பழமொழி உண்டு; இட்லர் யூதர்களின் நூலகங்களைக் கொளுத்தினான்; சிங்களக் காடையர்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரித்து அழித்தார்கள். எனவே நூலகம் என்பது இன்றைய மாணவர்கட்கு - மக்கட்கு மட்டுமல்லாமல் எதிகாலத்தில் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டக்கூடிய மொழி பண்பாட்டு இன வரலாற்றுக் கருவூலம் ஆகும். தலைமைச் செயலகத்தில் இருந்த செம்மொழி நூலகத்தை மாற்றிக் கொண்டுபோனதால், அது இன்றுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை; தெற்கு ஆசியாவிலேயே பெரியது என்ற பெருமைக்குரியதும் மாணவர்கள் பேராசியர்கள் வீடு வீடாகச் சென்று திரட்டிய 5 இலக்கத்துக்கு மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டதும், விரைவில் 40 இலக்கம் புத்தகங்களைத் திரட்ட உள்ளதும் ஆகிய  ஆகிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றம் செய்து 5000 புத்தகங்கள் கூட வைக்க இயலாத பொதுக் கல்விக் கட்டட வளாகத்துக்கு மாற்றுவது கூடாது; மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் அனைவரும் இந்நூலகத்தைப் பயன்படுத்தும் பயன்பாட்டுநிலையில் இந்நூலகம் இருப்பதால் இந்நூலகத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டாம்.

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers