Tuesday, June 15, 2010

கெடா (கடாரம்) மாநிலத்தின் கூலிம் நகரில் நாங்கள் !

வரலாற்றாய்வுப் பயணம் -  ௧௧
௨௫-௦௫-௨௦௰
(25-05-2010)


கோலாலம்பூரிலிருந்து ௩௫௦ (150) கி.மி தொலைவு கூலிம் நகரம் உள்ளது. . கூலிம் என்பத்து ஒரு மரத்தின் பெயர்.
௫ (5) மணி நேரப்  பயணம். ௩௩.௫௦ (33.50)  மலேய வெள்ளிகள் ஒரு பயணசீட்டு. மாலை ௪.௩௦  (4.30) க்குப் புறப்பட்டு இரவு  ௯.௦௦ (9.00) க்கு கூலிம் போய்ச்செர்ந்தோம். கூலிம் விடுதியில் (Koolim Inn) ௨௦௦ (200) வெள்ளிகள் கொடுத்து ௨ (2) நாள் தங்கினோம்.
கூலிம் நகரத்தில் எங்கள் காலைப் பொழுது புலர்ந்தது. நாங்கள் தங்கிய கூலிம் விடுதி எளிமையான அழகான தோற்றத்துடன் விளங்கியது. தோட்டத்திலே பெரும் பூச்சட்டியில் மரங்களை வளர்த்து வருகிறார்கள்.
மலையக நாட்டில் கெடா (கடாரம்) மாநிலத்தின் கூலிம் நகரிலிருந்து காலை ௯ (9) - மணிக்கு பூஜாங் பள்ளத்தாக்கு நோக்கிய பயணம் தொடங்கியது.  எங்கள் மகிழுந்து மலேசியாவில் செய்யப்பட்டது. நன்றாகப் பயணம் அமைந்தது. வாடகை ௧௪௦ (140) வெள்ளிகள். ஓட்டுநர் மகேந்திர ராவ்.தாய் மொழி தெலுங்கு. பிள்ளைகள் தமிழ்ப் பள்ளியில் படிக்கிறார்கள்.

கூலிம் விடுதியிலிருந்து புறப்பட்டு முதல் வேலையாக முருகன் கோயிலில் விநாயகரை வழிபட்டு முருகனை வணங்கி எங்கள் நோக்கமான கடாரம்  நோக்கிப்  புறப்பட்டோம். 100 - 150 கி.மி தொலைவு.
வழியில் தேசிய வகை "லடாங் துப்பா தமிழ்ப் பள்ளி" என்ற அழகான பெயர்ப்பலகை  விளங்கியது. பெயர்ப் பலகையைக் கண்டு எங்களையும் மீறி அது ஈர்த்து வண்டியை நிறுத்தினோம்.  பள்ளியின் உதவியாளர் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றார் . தண்ணீர் மலை என்ற பெயர் கொண்டவர் தலைமை ஆசிரியர். தமிழ் இங்கு வாழ்கிறது என்று பெருமையுடன் கூறினார். இவரது பெயர் பினாங்கிலுள்ள  தண்ணீர்மலை என்ற மலையிலுள்ள முருகப் பெருமானின் பெயரைக் குறிப்பிடுவதாகும்.
 ஆங்கிலேயர்களால் ௧௯௪௭- (1947) இல் கட்டப்பட்டத் தமிழ்ப் பள்ளி. தோட்டத் தொழிலாளர்க்கு என தொடங்கப்பட்டது. இரண்டு தோட்டத்துக்கு ஒரு பள்ளி . மலாய் , சீனம், தமிழ் இம்மூன்றும் வழக்கில் உள்ளன . மலாய் மட்டுமே தேசிய மொழி. ஆனால் சிங்கப்பூரிலோ ஆங்கிலம், சீனம் . மலாய் , தமிழ் ஆகிய நான்கு மொழிகள் தேசிய மொழிகளாக விளங்குகின்றன.
கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்ட சோழப் பெருவேந்தன் இராஜ இராஜன் ஆட்சிக் காலத்தே அவன் மகன் இராஜேந்திர சோழன் தாய்லாந்து, கம்போடியா (காம்போஜம்), வியத்நாம், கடாரம், (கெடா, மலேசியா) சாவகம், (ஜாவா, இந்தோனேசியா) போன்ற நாடுகளுக்குச் சென்று, வென்று கோயில்களை அமைத்தான் !
இன்று பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் பல்லவர் கால , சோழர் கால கட்டடடக் கலைச் சிறப்பை விளக்கி அகழ்வாதாரங்களையும், மேலும் பல புகைப்படங்களையும்  காட்சிக்கு வைத்திருந்த மலையக அரசின் தொல்லியல் துறைக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட   தாழிகளும், மணிகளும் பல்லவர் மற்றும் சோழர் கால சிவன் , திருமால், நான்முகன் (பிரமன் ), சக்தி, பிள்ளையார் முதலிய கடவுளர் சிலைகளும், கல்வெட்டுக்களும் கட்டடச் சிதைவுகளும் அருங்காட்சியகத்தில் உள்ளன.  அருங்காட்சியகத்தை அகழ்வுகளுக்கு அருகிலேயே வைத்துள்ளனர். எனவே சுற்றிலும் அகழப்பெற்றுள்ள கட்டட அடித்தளங்கள் உள்ளன.
மலையக அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த புதையல்களான கோயில்களை ஒப்பிட்டுத்  தமிழ்நாட்டின் கோயிலையும், தாய்லாந்து கோயிலையும், கம்போடிய  அங்கோர்வாட் கோயிலையும், வியத்நாம் நாட்டுக் கோயிலையும், இந்தோனேசிய நாட்டின் ஜாவாவில் உள்ள கோயிலையும் படங்கள் எடுத்து  அந்த அருங்காட்சியகத்தே வைத்துள்ளார்கள். இந்த ஐந்து நாடுகளிலும் காணப்பட்ட கோயில்களின் கட்டடக்கலை தமிழரின் கைவண்ணமே !
வெள்ளத்தால் அழியாது, வெந்தணலில் வேகாது, கள்ளத்தால் போகாது இந்தத் தமிழரின் கோயில் கட்டடக் கலை! கோபுர அமைப்பு! இன்றும் நம் தமிழர் மட்டும் அறிந்த ஒன்றே இக் கட்டடக் கலை ! உறுதியுடன் சொல்வேன் !  அறுதியிட்டு சொல்வேன் ! சவால் விட்டும் சொல்வேன் !
தமிழ்நாட்டுக் கட்டடக்கலையின்  தனித்துவம் வாய்ந்த தன்மையை வரலாற்று ஆய்வாளர்களும், ஏன் இன்றும் கூட நம்மில் பலரும் அறிந்து வைத்துள்ள செய்தியே ஆகும்.
தெற்கே கன்னியாகுமரி  தொடங்கி வடவேங்கடம்வரை உள்ள கோயில்  கோபுர அமைப்பும், கட்டட அமைப்பும் அதற்கு வடக்கே உள்ள கோபுர அமைப்பும் தெளிவாக  வேறுபடும் நம் தமிழரின் கைவண்ணமும் இவ்வுலகம் அறிந்த ஒன்றே!
நிழற்படங்களைக் , காணொளி (வீடியோ ) காட்சிகளை எடுத்துத் தள்ளினோம் ! கடாரம் அருங்காட்சியகம் மற்றும், தமிழர் கோயில் கட்டிய இடங்கட்கும் சென்று எடுத்த படங்களே இவை !
இன்னும் ஒரு புதிய செய்தி பூஜாங் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி வரும் வழியில் சுங்கை பட்டானி என்னுமிடத்தில் ஆற்றங்கரையில் ஓர் அற்புதப் புதையல் கிடைத்து அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்ந்துவருகிறார்கள் .சுங்கை பட்டானி ; சுங்கை= ஆறு  பட்டானி = உழவர் . நிலைத்துள் புதையுண்ட கோயிலின் மேற்புற தோற்றம் வெளி வந்துள்ளது, சுவர்களின் பகுதிகளும் , செங்கற்குவியலும், கிடக்கின்றன .
பாருங்கள் ! தமிழர்களே ! உலகத்தோரே ! வரலாற்றாய்வாளர்களே ! கூறுங்கள் உலகிற்கு ! இக்கட்டடக் கலைக்குச் சொந்தக்காரன் தமிழனே என்று ! உரக்க உரைப்போம் ! மலேசிய நாட்டின், கெடா மாநிலத்தில் உள்ள புஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகம் சொல்லும் செய்தியும் இதுவே ஆகும் ! தலை நிமிர்ந்து சொல்லுங்கள் தமிழர்களே ! உலகிற்கு இவ்வுலகிற்கு !  
கடாரப் பயணத்தை முடித்து கோலாலம்பூர் அதிகாலை வந்தோம். உமாசங்கர் என்ற நண்பர் எங்களை அன்புடன் வரவேற்றுத்  தங்க ஏற்பாடு செய்தார்.

No comments:

Post a Comment

தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers