Saturday, May 15, 2010

Historical Tour-1

                            சிங்கப்பூர் வந்து சேர்ந்தோம் !


எங்கள் வரலாற்றாராய்ச்சிப் பயணத்தின் முதல் நிலையாக மே திங்கள் 14 - ஆம் நாள் மதியம் 1.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் விமானத்தில் ஏறிச் சிங்கப்பூர் நோக்கிப் பயணம் செய்தோம்.

பயணத்தின் தொடக்கத்திலேயே, தஞ்சை உறத்தநாடு அருகில் அமைந்த அழகிய சிற்றூரான தென்னவ நாட்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் திரு செல்வராஜ் அவர்களை , அவரது இளைய மகள், பெயரனுடன் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றோம் ! சந்திப்புகளே வாழ்க்கை என்ற தத்துவத்தின்படி பண்பாட்டுக்குத் தமிழன் என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பவன் என்ற செய்தி எங்களை வந்தடைந்தது.

அவரது இளைய மகள் அபிராமி தஞ்சையில் ஸ்டெம் செல் காப்பு நிறுவனம் நடத்திவருபவர். அவர் கூறிய ஒரு நிகழ்வையே உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

அமெரிக்க நாட்டில் நல்ல பணியில், நல்ல நிலையில் வாழ்க்கை நடாத்தி வந்த தமிழன்பர் தவறுசெய்த தன் பிள்ளையைக் கண்டித்தார். மிரட்டலையே அடித்ததாக மாற்றி காவலரிடம் மகன் சொல்ல, அப்படியில்லை என விளக்கி உண்மை நிலை உணர்த்த பெரும்பாடு படவேண்டி வந்தது. பெற்ற தாயோ தந்தையோயாயினும் தண்டனைக்குரிய குற்றமாக எடுத்துக் கொள்ளப்படும் .

இதற்கு அந்தத் தமிழன்பர் ஒரு வாழ்நாளில் எடுக்க வேண்டிய முடிவையன்றோ எடுத்தார் ! போதும் இந்த போலி வாழ்க்கை ! குழந்தைகளுக்குப் பண்பாட்டுத்தாக்கத்தின் ஆரம்ப நிலையே இதுவென்றால்.....மூட்டை முடிச்சுகளுடன் தமிழ்நாடு திரும்பியே விட்டார் ! அமெரிக்காவின் செல்வச் செழிப்பான வாழ்க்கைமுறைக்கு முழுக்கும் போட்டார்! பிள்ளையை நல்ல முறையில் வளர்த்தெடுத்தால் போதும் என்ற முடிவுக்கும் வந்தார். தமிழன் தன் பண்பாட்டைக் காக்க எதுவும் செய்பவனே என்று காட்ட இதைவிட வேறென்ன எடுத்துக்காட்டு நமக்கு வேண்டும்?

நம் வரலாற்றாசிரியர் செல்வராஜ் அவர்களின் இளைய மகள் பற்றிக் கூறியே ஆகவேண்டும். சென்னையில் அவரும், சிங்கப்பூரில் அவரது தமக்கையும் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்களது வேர் அவர்களது ஊரிலேயே ! இந்தச் சிறிய வயதில் அவர் தன் தாயை இழந்தாலும் வசதி வாய்ப்புக் குறைந்த தகுதியுள்ள இரு பெண்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவர்களை எம்.எஸ்ஸி., பயோடெக் படிக்க வைத்து தன் குழுமத்திலேயே பணியும் கொடுத்திருகிறார் இந்த இளம் தமிழ்ப் பெண்மணி! ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் முடிவு நம் தமிழ்க்குடி தொல்குடியே என உலகிற்குப் பறைசாற்றியுள்ளது என்ற எங்களது கூற்று அவரை மேலும் தமிழின் பால் ஈர்த்தது. 2009- ஆம் ஆண்டின் அமெரிக்காவின் மிக அதிகமாக விரும்பிப் பார்க்கப்பட்ட நிகழ்ச்சி இந்தியத் திரு நாட்டினைப்பற்றி மைக்கேல் உட்சு என்பவர் டிஸ்கவரி அலைவரிசையில் வழங்கியதாகும். இந்த நிகழ்ச்சியில் கூறிய செய்தி: 5000 -ஆண்டுகளுக்கு மேலான மம்மியிடமிருந்து கிடைத்த மரபணுவும், உசிலம்பட்டியிலே இன்று வாழும் சில தமிழ் மக்களின் மரபணுவும் 100 விழுக்காடு (MAPPING OF GENES) ஒத்துப் போவதாகக் கண்டறியப் பட்ட அறிவியல் முடிவே அது.

விமானத்தில் உடன்வந்த சென்னை மாவட்ட நீதியரசர் ஒருவர் நாங்கள் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு வர விரும்புவதாகக் கூறி எங்களை வியப்பில் ஆழ்த்தினார்.

சிங்கப் பூரின் சாங்கி பன்னாட்டு விமான நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு இளங்குமரன் என்கிற சகாயராசு எங்களை வரவேற்று மகிழ்ந்தார். ஒளிப் படங்களும் எடுத்துத் தள்ளினார். அன்னாரின் விருந்தோம்பலை அனுபவித்து மகிழ்ந்தோம் அவர் பேராசிரியர் இறையரசனாரின் மாணாக்கரே !

தரமான சாலைகள் கார் வழுக்கிக்கொண்டே 120 கி. மி. வேகத்துக்கு மேல் சென்றது. இருமருங்கிலும், சாலையின் நடுவிலும் உயர்ந்து நிற்கும் மரங்கள் , அடுத்தடுத்து புல் வெளிகள். ஒளியை வெள்ளமெனப் பாய்ச்சும் விளக்குகள் !

சிங்கை நாட்டின் உட்லண்ட்ஸ் குடியிருப்புப் பகுதியை நாங்கள் வந்தடையும் போது இரவு மணி 10.30.

அவரின் இல்லத்தரசியும், மகள் யாழினியும், மகன்கள் இளம்கதிர் , இலக்கியன் ஆகியோரும் காத்திருந்து வரவேற்று மகிழ்ந்தனர் . இரவு விருந்து முடித்து அளவளாவிப் படுக்கைக்குச் செல்லும் போது இரவு மணி 1.00 !


நாள் – 2 : 15-05-2010

தமிழுலகம் மின்குழுமத்தின் மட்டுறுத்தர் ஐயா ஆல்பர்ட் அமெரிக்காவிலிருந்து எங்களை அழைத்துப் பேசி உலகத்தரமுள்ள ஆங்கிலத்தில் தமிழ் நாட்டு வரலாறு நாங்கள் வெளியிட இருப்பது அறிந்து மகிழ்ந்தார் ! பாவாணர் குடும்பத்திற்கு நிதியுதவி கிடைக்க இவர் செய்துவரும் இடைவிடாத முயற்சி எங்களை வியப்பில் ஆழ்த்தியது. உடனுக்குடன் தகுந்த நண்பர்களையும் அரசு அதிகாரிகளையும், அமெரிக்க நேரப்படி வேறுபடுகின்ற இரவுபகல் பாராது எத்தனை தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு ஆவன செய்திருக்கின்றார். இவரைப் பாராட்ட எங்களுக்குச் சொற்கள் கிடைக்கவில்லையே என்று தடுமாறினோம். ஆனால் அவரோ, பாவாணர் குடும்பத்திற்குச் செய்கின்ற உதவிகளுக்கு இடையே சிலர் செய்கின்ற இடையூறுகளையும் எண்ணி வருந்தினார்.
எங்கள் வரலாற்றுப்பணி தொடர்பான பயணத்துக்கு வாழ்த்தையும் அதற்குத் தேவையான நண்பர்கள் முகவரிகளையும் அளித்து உதவினார்.

அவர் அமெரிக்காவில் இருந்தபடியே , நாமக்கல் அருகே சங்கக்காலச் சிற்றூர் அமைக்க எண்ணிய செயலை நாங்கள் எண்ணி எண்ணி வியந்தோம். பேராசிரியர் அவர்களிடமும் கலந்தாலோசித்துச் செய்கிறார்கள்.
இன்று மாலை இளங்குமரன் வீட்டுக்கு அருகே உள்ள நூலகத்திற்குச் சென்று வந்தோம் . மிக அழகிய சூழலைக் கொண்ட மிகப்பெரிய நான்கடுக்கு மாடி கொண்ட நூலகம். ஆனால் இது உட்லண்ட்ஸ் வட்டாரத்தின் கிளை நூலகமாம்!


        - முனைவர் பா.இறையரசன், கோ.கண்ணன், இளங்குமரன்

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers