பெண்மணி
மாத இதழ்
இலக்கியச் சோலை–1 / வெளிவந்தது -
கிளி ஓச்சி கிளிநொச்சி
-முனைவர் பா.இறையரசன்
மிகவும் அழகான அந்த ஊர்தான் கிளிநொச்சி. சிறு தெருக்களும்
பெரிய வீதிகளும் செம்மண் சாலைகள்தான்.வீடுகள் நூல்பிடித்துபோல் நேர் ஒழுங்காக
இருக்கும். எல்லா வீடுகளும் செங்கல் வீடுகள். நகரத்துக்கு உள்ளேயே
அங்காடித்தெருக்கள். காய்க் கடை, எண்ணெய்க் கடை, துணிக்கடை என எல்லாக் கடைகளும் அங்கே
இருந்தன. இளவனர் (யவனர்) என்னும் வெளிநாட்டவர் கடைகளும் உண்டு.
மிலேச்சர் என்னும் ஆரியர்கள் வெள்ளைத்தோல் என்றாலும்
குளிக்காத அழுக்கு மூட்டைகள். கயிற்றின் மேல் ஆடிப் பிழைக்கும் கழைக் கூத்தாடிகள்.
புத்த மதம் பரப்புகிறேன் என்று வந்த அவர்களில் பலர் கழைக் கூத்தடிகளகவும் சிலர்
மரத்தடிகளின் கீழிருந்து போதிப்பவர்களாகவும் இருந்தனர். ஊரைச் சுற்றியுள்ள
வயல்களில் கரும்பும் நெல்லும் தினையும் பயிராகும். பக்கத்து மலையிலிருந்து வரும்
மலைக் குறவர்கள் தேனும் பலாவும் காய்கறிகளும் விற்று நெல்லும் உப்பும்
துணிமணிகளும் வாங்கிச் செல்வர்.
தச்சரும் கம்மியரும் பிறரும் தொழில் செய்யும் ஓசையும்
விற்பவர்கள், வாங்குபவர்கள் , அரசு திணைக்களத்து அதிகாரிகள், வீரர்கள் என அனைவரின்
பேச்சொலிகளும் கடல் ஒலிபோல் கேட்கும். இரவில் நடனமோ தெருக்கூத்தோ தொடங்கி விடியும்
வரை நடக்கும்.
என்றைக்கும் மகிழ்ச்சி ஒலி கேட்ட அவ்வூர் இப்போது சாவு அமைதியில் இருக்கிறது.
வானத்தில் கோட்டைகட்டி இருப்பதாகக் கதைவிட்ட ஒரு சிறு
கூட்டம் அரக்கர்களாக அவ்வூரில் புகுந்து வயல்களையும் வீடுகளையும் கொளுத்தியது; பெண்களையும் குழந்தைகளையும்
கொன்றது. வீர மறவர்களோடு மட்டுமே போரிட்டுப் பழக்கப்பட்ட தமிழ்வீரர்கள்
புறமுதுகிடாமல் மண்ணில் பிணமாகி உரமாயினர். தேவாரம் பாடிய கோயில் வாயிலில்
அழிப்பாளர்கள் புத்தர் சிலையை நட்டுவிட்டுப் போய்விட்டனர்.
ஊரே பிணக்காடு. கடைகள் வீடுகள் எல்லாம் தரை மட்டம்.
இவற்றையும் மீறி நின்ற சில வீடுகள் குட்டிச் சுவர்களாய் நின்றன. தெருவெல்லாம்
எலும்பும் தசையும் குருதியும் கொஞ்சம் கொஞ்சமாக்க் காய்ந்து செம்மண்ணைக் கருகிய
சுடுகாடாக ஆக்கியிருந்தது. பல மாதங்கள் ஆகியும் அங்கு வீடுகள் எதுவும்
கட்டித்தரப்பட வில்லை. ஊரைவிட்டு வெளியேறிய பெரியவர்களும் பெண்களும் குழந்தைகளும் மட்டும்
அரைகுறை உயிரோடு முற்காடுகளுக்குள் இருந்தனர்.
அதோ அந்த வீடு ஒற்றை வீடு. தனியே நிற்கிறது. அரக்கர்களின்
கொடிய பார்வையில் தப்பி நிற்கிறது. மிகப்பெரிய அறிஞராகவும் அரசு திணைக்கள அதிகாரியாகவும் விளங்கிய
மல்லாகம் மாறன் வழுதி அம்பலம் வீடு. அவர் வீட்டில் எப்போதும் திருவிழாபோல் கூட்டம்
இருக்கும். அறிஞரும் வருவர்,
வறியவரும்
வருவர். அடுக்களையில் எப்போதும் சோறுவடித்து ஊற்றும் கஞ்சி தெருவில் மலைப்பாம்பு
நெளிவது போல் பளபள என்று ஓடும். வீட்டிற்கு முன்புறம் தினை காய வைத்திருப்பார்கள்.
அதைக் காத்துக்
கொண்டிருக்கும் கிழவிகள் ஊர்க்கதை பேசிக் கொண்டே கிளிகளையும் குருவிகளையும்
விரட்டுவர். குறுக்கே வரும் குழந்தைகளையும் விரட்டிப் பிடித்துக் கருப்பஞ்சாறு
கொடுத்து,
“எதிரே
போய் மன்றத்தில் விளையாடுங்கள்” என அனுப்புவர்.
அறம்தலைக் கொண்ட அந்தக் கலகலப்பான வீடு இன்று தனிமையில்.
இரவில் எப்போதாவது ஒருமுறை ஆந்தை அலறிவிட்டு அடங்கிப் போய்விடும். சாவின்
அமைதியாகிப் போன அந்த முன்றிலில் இன்று தினை காயவில்லை. அந்த முற்றத்தில் இப்போது
ஓர் அணில் ஓடுகிறது. சிறு ஒலி கேட்டாலும் அஞ்சி ஓடுகின்ற அழகிய அணில் மெல்ல
ஓடி அங்கே தரையில் கிடக்கும் ஒன்று இரண்டு தினை
மணிகளைத் தின்றுவிட்டுத்,
தன்
முதுகைவிட மென்மையான குழந்தைகளையும் வாலைவிட மென்மையான வெண்தலை முடியைக் கொண்ட
கிழவிகளையும் தன் அழகிய காண்களில் காணாமல் சலித்துப்போய் வாய் சப்பிக்
கொண்டிருந்தது.
ஒய்யாரக் கொண்டையிட்டுக் கூந்தலிட்டுப் பூ முடித்து காலில்
சலங்கை ஒலிக்க மயிலாட்டம் போல் நடைநடந்து குயில் போல் குரலெடுத்துப் பாடிக் கிளி
ஓட்டிக் காவல் காக்கும் அழகுப்
பெட்டகமாகிய அந்த இளங்கொடி, தினைப்புனக் காட்டுக்குள்ளே
ஆரும் அறியாமல் காதலனுடன் கூடிக்களித்துத் திருவிழாக்காலத்து ஊர் போல் மகிழ்ந்து
விளையாடியவள், இன்று தன்தலைவன் பொருள் தேடிச்
சென்று விட்டதால், இப்போது ஊர்மக்கள் யாரும்
இல்லாமல் போய் விட்டதால் அமைதியாகிப்போன அந்த அணில் விளையாடும் வீட்டு முற்றத்தைப் போல்
அழகிழந்து வாடி வதங்கிப் படுத்துக்கிடந்தாள்.
பாடல் காட்சி :
“காதலர் உழையர் ஆகப் பெரிதுவந்து
சாறுகொள் ஊரில் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றில்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழிஅவர் அகன்ற ஞான்றே”.
குறுந்தொகை :41: அணிலாடு முன்றிலார்.