Thursday, June 17, 2010

சிங்கப்பூரில் கவிமாலைhttp://www.dinamalar.com/nri/More_picture.asp?News_id=4391&lang=ta&news_head=சிங்கப்பூரில்%20கவிமாலை%20இலக்கிய%20நிகழ்வு&detectflash=false

ஜலான்புசார் : மாதந்தோறும் நடைபெறும் கடற்கரைச்சாலைக் கவிமாலை நிகழ்வு மே 29ம் தேதியன்று சிங்கப்பூர் ஜலான்புசார் சமூக மன்ற அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்க அங்கமாக யாப்பு இலக்கண வகுப்பு, ந.வீ.விசயபாரதியால் நடத்தப்பட்டது. பின்னர் இணையதள எழுத்தாளர்கள் தருமி, பிரபாகரன் ஆகியோர் தங்கள் அனுபவங்களை எடுத்துரைத்தனர். இவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்துச் சிறப்பிக்கப்பட்டது. இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு : ' குற்றவாளி'. இப்போட்டியில் வள்ளியம்மை சுப்பிரமணியம், பீஷான் கலா, மலர்விழி,லலிதா சுந்தர், அகிலமணி ஸ்ரீவித்யா ஆகிய பெண்பாற் கவிஞர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவர்களில் கவிஞர்கள் வள்ளியம்மை சுப்பிரமணியம், மருதமலை, புருஷோத்தமன் ஆகியோர் ரொக்கப் பரிசு பெற்றனர். 
கவிஞர்கள் பாலமுருகன், பறவாக்கோட்டை அண்ணா, ராசூ கலைவேந்தன் ஆகியோர் புத்தகப் பரிசும் பெற்றனர். தமிழரும் இலக்கியமும் என்ற தலைப்பில் முனைவர் பா.இறையரசன் சிறப்புரையாற்றினார். சிங்கையில் இலக்கிய ஆர்வலர்களிடை தமது இணையதளம் மூலமாக சிறந்த இணைப்புப் பாலமாக விளங்கி இந்தியாவுக்கு திரும்பிச் செல்லும் கலைக்குமாருக்கு, மா.அன்பழகன் பொன்னாடை போர்த்தி பாராட்டிச் சிறப்பித்தார். தமிழக எழுத்தாளர் கவிதா ஆல்பர்ட், சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்ததோடு கவிமாலை அமைப்பின் பணிகளைப் பாராட்டி உரையாற்றினார். யோகா விஞ்ஞானம் பற்றி ஜீனத் சரவணன் சிற்றுரையாற்றினார். நிகழ்ச்சியைக் கவிஞர் பாலு மணிமாறன் சுவைபடத் தொகுத்து வழங்கினார். சிங்கையின் மூத்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் வி.புருஷோத்தமன்
-- 

Tuesday, June 15, 2010

கெடா (கடாரம்) மாநிலத்தின் கூலிம் நகரில் நாங்கள் !

வரலாற்றாய்வுப் பயணம் -  ௧௧
௨௫-௦௫-௨௦௰
(25-05-2010)


கோலாலம்பூரிலிருந்து ௩௫௦ (150) கி.மி தொலைவு கூலிம் நகரம் உள்ளது. . கூலிம் என்பத்து ஒரு மரத்தின் பெயர்.
௫ (5) மணி நேரப்  பயணம். ௩௩.௫௦ (33.50)  மலேய வெள்ளிகள் ஒரு பயணசீட்டு. மாலை ௪.௩௦  (4.30) க்குப் புறப்பட்டு இரவு  ௯.௦௦ (9.00) க்கு கூலிம் போய்ச்செர்ந்தோம். கூலிம் விடுதியில் (Koolim Inn) ௨௦௦ (200) வெள்ளிகள் கொடுத்து ௨ (2) நாள் தங்கினோம்.
கூலிம் நகரத்தில் எங்கள் காலைப் பொழுது புலர்ந்தது. நாங்கள் தங்கிய கூலிம் விடுதி எளிமையான அழகான தோற்றத்துடன் விளங்கியது. தோட்டத்திலே பெரும் பூச்சட்டியில் மரங்களை வளர்த்து வருகிறார்கள்.
மலையக நாட்டில் கெடா (கடாரம்) மாநிலத்தின் கூலிம் நகரிலிருந்து காலை ௯ (9) - மணிக்கு பூஜாங் பள்ளத்தாக்கு நோக்கிய பயணம் தொடங்கியது.  எங்கள் மகிழுந்து மலேசியாவில் செய்யப்பட்டது. நன்றாகப் பயணம் அமைந்தது. வாடகை ௧௪௦ (140) வெள்ளிகள். ஓட்டுநர் மகேந்திர ராவ்.தாய் மொழி தெலுங்கு. பிள்ளைகள் தமிழ்ப் பள்ளியில் படிக்கிறார்கள்.

கூலிம் விடுதியிலிருந்து புறப்பட்டு முதல் வேலையாக முருகன் கோயிலில் விநாயகரை வழிபட்டு முருகனை வணங்கி எங்கள் நோக்கமான கடாரம்  நோக்கிப்  புறப்பட்டோம். 100 - 150 கி.மி தொலைவு.
வழியில் தேசிய வகை "லடாங் துப்பா தமிழ்ப் பள்ளி" என்ற அழகான பெயர்ப்பலகை  விளங்கியது. பெயர்ப் பலகையைக் கண்டு எங்களையும் மீறி அது ஈர்த்து வண்டியை நிறுத்தினோம்.  பள்ளியின் உதவியாளர் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றார் . தண்ணீர் மலை என்ற பெயர் கொண்டவர் தலைமை ஆசிரியர். தமிழ் இங்கு வாழ்கிறது என்று பெருமையுடன் கூறினார். இவரது பெயர் பினாங்கிலுள்ள  தண்ணீர்மலை என்ற மலையிலுள்ள முருகப் பெருமானின் பெயரைக் குறிப்பிடுவதாகும்.
 ஆங்கிலேயர்களால் ௧௯௪௭- (1947) இல் கட்டப்பட்டத் தமிழ்ப் பள்ளி. தோட்டத் தொழிலாளர்க்கு என தொடங்கப்பட்டது. இரண்டு தோட்டத்துக்கு ஒரு பள்ளி . மலாய் , சீனம், தமிழ் இம்மூன்றும் வழக்கில் உள்ளன . மலாய் மட்டுமே தேசிய மொழி. ஆனால் சிங்கப்பூரிலோ ஆங்கிலம், சீனம் . மலாய் , தமிழ் ஆகிய நான்கு மொழிகள் தேசிய மொழிகளாக விளங்குகின்றன.
கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்ட சோழப் பெருவேந்தன் இராஜ இராஜன் ஆட்சிக் காலத்தே அவன் மகன் இராஜேந்திர சோழன் தாய்லாந்து, கம்போடியா (காம்போஜம்), வியத்நாம், கடாரம், (கெடா, மலேசியா) சாவகம், (ஜாவா, இந்தோனேசியா) போன்ற நாடுகளுக்குச் சென்று, வென்று கோயில்களை அமைத்தான் !
இன்று பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் பல்லவர் கால , சோழர் கால கட்டடடக் கலைச் சிறப்பை விளக்கி அகழ்வாதாரங்களையும், மேலும் பல புகைப்படங்களையும்  காட்சிக்கு வைத்திருந்த மலையக அரசின் தொல்லியல் துறைக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட   தாழிகளும், மணிகளும் பல்லவர் மற்றும் சோழர் கால சிவன் , திருமால், நான்முகன் (பிரமன் ), சக்தி, பிள்ளையார் முதலிய கடவுளர் சிலைகளும், கல்வெட்டுக்களும் கட்டடச் சிதைவுகளும் அருங்காட்சியகத்தில் உள்ளன.  அருங்காட்சியகத்தை அகழ்வுகளுக்கு அருகிலேயே வைத்துள்ளனர். எனவே சுற்றிலும் அகழப்பெற்றுள்ள கட்டட அடித்தளங்கள் உள்ளன.
மலையக அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த புதையல்களான கோயில்களை ஒப்பிட்டுத்  தமிழ்நாட்டின் கோயிலையும், தாய்லாந்து கோயிலையும், கம்போடிய  அங்கோர்வாட் கோயிலையும், வியத்நாம் நாட்டுக் கோயிலையும், இந்தோனேசிய நாட்டின் ஜாவாவில் உள்ள கோயிலையும் படங்கள் எடுத்து  அந்த அருங்காட்சியகத்தே வைத்துள்ளார்கள். இந்த ஐந்து நாடுகளிலும் காணப்பட்ட கோயில்களின் கட்டடக்கலை தமிழரின் கைவண்ணமே !
வெள்ளத்தால் அழியாது, வெந்தணலில் வேகாது, கள்ளத்தால் போகாது இந்தத் தமிழரின் கோயில் கட்டடக் கலை! கோபுர அமைப்பு! இன்றும் நம் தமிழர் மட்டும் அறிந்த ஒன்றே இக் கட்டடக் கலை ! உறுதியுடன் சொல்வேன் !  அறுதியிட்டு சொல்வேன் ! சவால் விட்டும் சொல்வேன் !
தமிழ்நாட்டுக் கட்டடக்கலையின்  தனித்துவம் வாய்ந்த தன்மையை வரலாற்று ஆய்வாளர்களும், ஏன் இன்றும் கூட நம்மில் பலரும் அறிந்து வைத்துள்ள செய்தியே ஆகும்.
தெற்கே கன்னியாகுமரி  தொடங்கி வடவேங்கடம்வரை உள்ள கோயில்  கோபுர அமைப்பும், கட்டட அமைப்பும் அதற்கு வடக்கே உள்ள கோபுர அமைப்பும் தெளிவாக  வேறுபடும் நம் தமிழரின் கைவண்ணமும் இவ்வுலகம் அறிந்த ஒன்றே!
நிழற்படங்களைக் , காணொளி (வீடியோ ) காட்சிகளை எடுத்துத் தள்ளினோம் ! கடாரம் அருங்காட்சியகம் மற்றும், தமிழர் கோயில் கட்டிய இடங்கட்கும் சென்று எடுத்த படங்களே இவை !
இன்னும் ஒரு புதிய செய்தி பூஜாங் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி வரும் வழியில் சுங்கை பட்டானி என்னுமிடத்தில் ஆற்றங்கரையில் ஓர் அற்புதப் புதையல் கிடைத்து அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்ந்துவருகிறார்கள் .சுங்கை பட்டானி ; சுங்கை= ஆறு  பட்டானி = உழவர் . நிலைத்துள் புதையுண்ட கோயிலின் மேற்புற தோற்றம் வெளி வந்துள்ளது, சுவர்களின் பகுதிகளும் , செங்கற்குவியலும், கிடக்கின்றன .
பாருங்கள் ! தமிழர்களே ! உலகத்தோரே ! வரலாற்றாய்வாளர்களே ! கூறுங்கள் உலகிற்கு ! இக்கட்டடக் கலைக்குச் சொந்தக்காரன் தமிழனே என்று ! உரக்க உரைப்போம் ! மலேசிய நாட்டின், கெடா மாநிலத்தில் உள்ள புஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகம் சொல்லும் செய்தியும் இதுவே ஆகும் ! தலை நிமிர்ந்து சொல்லுங்கள் தமிழர்களே ! உலகிற்கு இவ்வுலகிற்கு !  
கடாரப் பயணத்தை முடித்து கோலாலம்பூர் அதிகாலை வந்தோம். உமாசங்கர் என்ற நண்பர் எங்களை அன்புடன் வரவேற்றுத்  தங்க ஏற்பாடு செய்தார்.

24.05.2010 மலேசியாவில் நாங்கள் !

பயணம் : 
நாள் : ௰ (10)  கோலாலம்பூரிலே !

புலவர் இளங்குமரனின் மார்சிலிங் வீட்டிலிருந்து மலையகம் (மலேசியா) காலை ௭ மணி அளவில் நோக்கி புறப்பட்டோம். மலேசியா நாட்டின் நுழைவுசீட்டு பெற்று தலைநகராம் கோலாலம்பூர் செல்லும் பேருந்தில் தேடினோம். ஓட்டுநர் ஒருவர் தம் வண்டிக்கு அழைத்தார். எமது வருகையை மலையகத் தமிழர் இளந்தமிழ் அவர்கட்குத் தெரிவிக்கத்  தொலைபேசியைத் தேடினோம். ஓட்டுநர் மீண்டும் எம்மை நாடி வந்து பொதுத்தொலை பேசியை  இயக்கும் முறை, குறியீட்டு எண் முதலியவற்றைத்  தெரிவித்து உதவினார் . 

அவரது வண்டியிலேயே ஏறிப் பயணம் தொடர்ந்தோம். வழியெல்லாம் வானுயர்ந்த பலமாடிக் கட்டடங்களும், இருபுறமும் புல்வெளிகளும் அடர்ந்த மரங்களும் பறவைகளின் ஒலிகளும் பின்புலமாக முன்னேறினோம்.

கண்ணில் ஆடு மாடுகளோ வீடுகளோ கண்ணில் படவில்லை. ஆனால் வழியெல்லாம் அழகுதமிழில்   பெயர்ப் பலகைகள் கண்ணில் பட்டன. தம்பா நிலை , நிலை, சேனை, அய்யர் குரோ முதலிய ஊர்ப் பெயர்களில் தமிழைக் கண்டோம்.

ஓட்டுநர் சுரேஷ் அன்போடு மலையகத்தமிழர் நிலை பற்றியும், புலம் பெயர்ந்து வந்துள்ள தம்போன்ற தமிழர்கள் தாய் நாட்டுத் தொடர்பு அறவே அறியாது வாழ்வது பற்றியும் ஆங்கிலச்சொல் கலவாது நல்ல தமிழில் உரையாடிக்கொண்டு வந்தார். 

கோலாலம்பூர் வந்தடைந்ததும், தாமே தொலைபேசியிட்டு இளந்தமிழ் அவர்களுக்கு நாங்கள் இறங்கிய இடம் பற்றிக் கூறினார்.

வந்து சேர்ந்தார் இளந்தமிழ் ! வேகமெடுத்தது எங்கள் வரலாற்றாய்வுப் பணி ! மின்னலென உணவகம் சென்றோம். உணவு முடித்த உடனே மலேசிய பல்கலைக் கழகத்தின் சிறப்பு நிலைப் பேராசிரியர் முனைவர் ச.சிங்காரவேலு அவர்களிடம் அழைத்துச் சென்றார் . இவ்வளவு இணைப்பு ஏற்பாடுகளையும் தொலைபேசி வழியே அமெரிக்க நாட்டிலிருந்தே செய்த ஆல்பர்ட் அவர்களை நன்றியுடன் நினைந்தோம். 

பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள  தமிழ்த்துறையில் பேரா.சிங்காரவேலு அவர்கள் மிக்க ஆர்வத்துடன் கடாரம் பற்றிய செய்திகளை கட கடவென்று பொழிந்தார். தமிழ் நாட்டு வணிகர்களின் வணிக எல்லை கடல் கடந்து கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முன்னரே பரந்து விரிந்து கிடந்தது. அதே போல யவனர்கள், கிரேக்கர், அராபியர் என வணிகத்தொடர்பு தமிழ் நாட்டுடன் மிகச் சிறப்பாக வைத்திருந்தனர். அதனைப் பதிவும் செய்தனர். 
கிரேக்கப் புவியியலாளர் ஏரடோஸ்தெனிசு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழ்நாட்டின் குமரித்தெய்வத்தை பற்றியும் தமிழர் அத்தெய்வத்தை  வழிபட்ட முறை பற்றியும் தன் நூலில் குறிப்பிடுகிறார். கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிரேக்க வணிக வழிகாட்டு நூலிலும் இதைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டு வணிகர்களின் சிறப்பைப் பற்றி அளவளாவினோம் . சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தமிழக வணிகர்களின் கடல் கடந்த வணிகத்தைப் பற்றி நம்மால் அறியமுடிகிறது. கப்பலில் கடற்பயணம் செய்து மணிபல்லவம் ,சாவகம், போன்ற தீவுகளுக்குச் சென்று பசிப்பிணி அகற்றிப்  புத்தமதத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 

கடார நாட்டு திரு விஜய மன்னர்களிடம் தமிழக வணிகர்கள் நல்லுறவு கொண்டார்கள். வாணிகத்தைப் பெருக்க திரு விஜய மன்னர்களும் விரும்பித்  தமிழக வணிகர்களுக்கு நல்லாதரவும் கொடுத்தார்கள். அவர்கள் சீனர்களுடனும்  வணிக உறவு கொண்டிருந்தனர். அவர்கள்  வழியேதான் சீனருடன் தமிழகவணிகர்கள்  வாணிகஞ் செய்திடவேண்டிய சூழல் இருந்தது. அதனைத் தமிழ் வணிகர் விரும்பாது சீனருடன் நேரடித் தொடர்பு கொள்ள விரும்பி தம் மன்னர் சோழப் பெருவேந்தன் இராஜ இராஜனிடம் தங்கள் பிரச்சினை குறித்து முறையிட்டனர். 

மன்னனும் ஒற்றர்களை அனுப்பி கடார நாட்டு நிலை அறிந்து படைகளை இளவரசர் இராஜேந்திர சோழன் தலைமையில் அங்கு அனுப்பி எதிர்பாராமல் திடீரென்று தாக்கி திரு விஜய மன்னரை நிலைகுலைய வைத்துத் தோற்கடித்தார். கடாரத்திலிருந்து சோழநாட்டுக்குப் பெரும்பொருள்  கொண்டுவந்து சேர்த்தார் இராஜேந்திர சோழன்.
தமிழ் நாட்டு வணிகரும் மகிழ்ச்சியுடன் சீனருடன் நேரடி வணிகத்தில் ஈடுபட்டனர். சோழப் பெருவேந்தரிடம் தமிழ் நாட்டு வணிகர்களின் பெரும் செல்வாக்கு இதன் வழியே நமக்குப் புலனாகிறது.    

சீனாவில் உள்ள தக்கு-ஒ-பாவில் தமிழ்க்கல்வெட்டுக்களில், ஐநூற்றுவர், எண்ணூற்றுவர், ஆயிரத்து ஐநூற்றுவர்  என்னும் வணிகர்  குழுக்களைப் பற்றிய குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன. 

அப்படிப் பல நாடுகட்கும் சென்ற தமிழ் வணிகர்கள் தம்முடன் வடமொழி தெரிந்த சிற்பிகளையும், கடவுள் வழிபாட்டுக்குத் துணையாக புரோகிதர்களையும் அழைத்துச்சென்றனர். சென்ற இடங்களில் கோயில்கள் கட்டினர். பல கல்வெட்டுக்களைத்  தமிழிலும், பிராகிருத மொழியிலும் பதிவு செய்தனர்.

இவ்வளவு செய்திகளையும் பேரா. சிங்கார வேலனாரிடம் அறிந்து கொண்டு அவருடைய ஆய்வுக் கட்டுரையையும் பெற்றுக் கொண்டு புறப்பட்டோம் !   

ஒரு வினாடி கூட தாமதியாது கடாரம் (இன்றைய கெடா மாநிலம்) நோக்கி கூலிம் செல்லும் பேருந்தில் நாங்கள் சென்றமர்ந்தோம்.  சிங்கப்பூரிலிருந்து  வரும்போது வழியெங்கும், இங்கு மலையகத்திலும் கடைகளின் பெயர்ப் பலகைகளில் நல்ல தமிழைக் கண்ட போது , தமிழ் நாட்டில் கடைகளில் தமிழ்ப் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டுமென்று தமிழக அரசு கூறுவதை தமிழ்த்திணிப்பு என ஊளையிடும் குள்ளநரிகளின் கூட்டத்தை எண்ணி எண்ணி சிரித்துக் கொண்டோம்.   

கூலிம் கல்வியியல் கல்லூரியின் மொழியியல் பேராசியர் மணியரசன் பேருந்து நிலையம் வந்து எங்களை கூலிம் விடுதியில் தங்கவைத்த போது இரவு 
மணி ௰ (10) ! சிறிது கடாரங் கொண்டானைப் பற்றி உரையாடிவிட்டு உறங்கச்சென்றோம் .  

- கோ.கண்ணன் , பா.இறையரசன், தா.இளங்குமரன் 

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers