ஈழத் தமிழர்களுக்குச் சம உரிமை கிடைக்கவேண்டும்
என்ற இலாரி கிளிண்டனுக்குத் தமிழர்களின் நன்றி!
தமிழ் எழுச்சிப் பேரவையின் தலைவர் கோ.கண்ணன் அவர்களும் செயலர் முனைவர் இறையரசனும்
இலாரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து ஈழத் தமிழர்கள் சிங்களர்களுக்குச் சமமான உரிமையுடன் வாழவேண்டும் என்றும் முதற்கட்டமாக விரைவில் நல்லமுறையில் குடியமர்த்தப்பெற வேண்டும் என்றும் கூறியதற்கு உலகத் தமிழ் இனத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அவ்வறிக்கையி ல்,
அமெரிக்கப்பெருநாட்டின் வெளியுறவுத் துறைசெயலராக விளங்கும் பெருமைக்குரிய இலாரி கிளிண்டன் தமிழக முதல்வரை அவரது அலுவலகத்துக்கே சென்று சந்தித்தது தமிழர்களுக்குச் செய்த பெருமையாகும் என்றும், இது இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த இராசபக்சேயைப் போர்க்குற்றாவாளியாக அறிவிக்க வேண்டுமென்றும், இலங்கையின் மேல் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்ட மன்றத்தில் செயலலிதா கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.
வடக்கு மாநிலத்தின் பெரும்பான்மைப் பகுதிகளில் சிங்கள இராணுவம் இன்னும் உள்ளது; முள்வேளி முகாம்களில் உள்ள தமிழர்கள் இன்னும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்; வீடு வாசலற்ற அவர்கள் உடமைகளை இழந்து உண்ண உணவின்றி,குடிக்க நீரின்றி மருத்துவ வசதிகளின்றி, எந்நேரம் வேண்டுமானாலும் விசாரணை என்ற பெயரில் கொல்லப் படலாம் என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளனர்.; அவர்களுடைய வீடுகளில் சிங்கள இனத்தவர் குடியேற்றப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்கள், சிங்களர்களுக்குச் சமமான உரிமைகளுடன் வாழ வழி செய்ய வேண்டும் என்று இலாரி கிளிண்டன் கூறியுள்ளது நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துகிறது. இராச பட்சே நடத்திய இனப்படுகொலையை- போர்க்குற்றங்களை அமெரிக்கப்பாராளு மன்றத்தில் திரைப்படமாகப் பார்த்த உறுப்பினர்கள் கண்ணீர் விட்டுள்ளனர்.தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் நிறவேற்ற்ப்பட்ட தீர்மானத்தை அடியொற்றி இந்திய அரசும் இராச பட்சேயின் போர்க்குற்றங்களை விசாரிக்க ஐ.நா.வை வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் இலாரிகிளிண்டன் வற்புறுத்த வேண்டுகிறோம்; சிங்கள் அரசின் மேல் பொருளாதாரத் தடை கொண்டுவரவும் வேண்டுகிறோம்.
போர்க்குற்றங்கள் நடந்துள்ள சூழ்நிலையில் உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்பட்டகுழந்தைகளையும் பெண்களையும் முதியோர்களையும் காக்க உடனடியாக உலக நாடுகள் அவை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் ஆவன செய்யவும் கண்காணிக்கத் துறவிகளாகிய அக்னிவேஷ், ஸ்ரீ ரவிசங்கர், தமிழக முதலமைச்சர் சார்பில் ஓர் அமைச்சர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழ் எழுச்சிப் பேரவையின் சார்பில் கோரியுள்ளனர்.
இலாரிகிளிண்டன் தமிழக முதல்வரைச் சந்திக்கும் செய்தியை முதலில் வெளியிட்டதுடன் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க ஆவன செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்திய மாலைமுரசு இதழுக்குத் தமிழ் எழுச்சிப் பேரவையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.