Monday, January 14, 2013

இலக்கிய ஓவியம்: புலிக்குகை

மாலை முரசு பொங்கல் மலரில் 13-01-2013 வெளிவந்த இலக்கிய ஓவியம்:
   புலிக்குகை.              000000      

                                                                                                                                                       - முனைவர். பா. இறையரசன்.                                                                                                                                                                            

            பக்கத்து வீட்டுப் பெண்,  மான்போல் துள்ளிக் குதித்து அடுத்த வீட்டுக்கு முன் வந்ததும் தயங்கி நின்றாள். பின் மெல்ல நடந்து அவ்வீட்டுக்கு வெளியே வாசலில் நின்று முன் கூரையைத் தாங்கிக் கொண்டிருந்த சிறுதூணைப் பற்றிக் கொண்டு எட்டிப் பார்த்தாள்.  எங்கே அவன்?’  அவள் புருவங்களில் வினாக்குறி வில்லாய் வளைந்து கரு விழிகள் அம்பு போல் வீட்டின் உள்ளே பாய்ந்தன. அவன் இருக்கிறானா? இல்லையா?  உள்ளே இருப்பானா?.
          அவன் தோளைப் பார்த்தால்  பார்த்துக்  கொண்டே  இருக்கலாம். மலை போன்ற தோள்கள். இந்தத் தோளிலிருந்து அந்தத் தோள்வரை பார்க்கவே பல உகங்கள் ஆகிவிடும். வீரம் செறிந்த அவன் தோள்களைப் பார்த்ததுமே அவள் கண்கள், சூரியன் மேற்கே மறைந்ததும்  தலை சாயும் தாமரைகள் போல்  தரையைப் பார்க்கும். மெல்ல மெல்ல அவன் கால்களையும் கால்களில் உள்ள வீரக் கழல்களையும் பார்த்துப் பெருமிதம் கொண்டு மகிழும். மலைகளுக்கு மேலே  தோன்றுகின்ற  காலைச் சூரியன்போன்ற அவன் முகத்தைப் பார்க்க அவளுக்குத் துணிச்சல் இல்லை.
          துணிந்து ஒருமுறை அவன் முகத்தைப் பார்த்துவிட்டு விருட்டெனத் தாழ்ந்தன  அவள் விழிகள். ஆ! மின்னல் பாய்ந்ததா? மீசைக்கு மேலே நெருப்பைக் கக்கும் அந்த விழிகள் போர்க்களத்தில் மட்டுமல்லவா சிவக்க வேண்டும்! இந்த ஆண் மகனுக்கு ஒருப் பெண்ணைக் குளிர்ந்த விழிகளால் பார்க்கத் தெரிய வில்லை போலும்!
        வீட்டுக்குள்ளே  பார்த்தாள்.  அவன் இல்லை! எங்கே போயிருப்பான்? விளையாட்டுப் பெண். மெல்லத் தூணைப் பற்றிக் கொண்டு வீட்டுக்குள்  எட்டிப் பார்த்தாள். அந்த வீரனின் தாய்தான் வீட்டினுள் இருந்தாள். உறுதியான உடலும் வீரம் செறிந்த உள்ளமும் கொண்ட அந்த காவற்பெண்டின்  தோற்றம் கற்பின் கனலி கண்ணகியைப்போல் இருந்தது. அவன் எங்கே?.
தாயே! அவன் எங்கே?.........உம்…..உன்  பிள்ளையைத்தான் கேட்கிறேன்……  எங்கே?..... எங்கே போனான்? என்  கண்ணில் படவில்லையே!’’
வீரத்தாய் பார்த்தாள் வெளியே…… அந்தப்பெண் ! சிறிய குடிலின் தாழ்ந்த  இறைவாணத்தைத்  தாங்கிக்கொண்டு  நிற்கும்  தூணின் பின்னாலே இருந்து அவள் முகம் முழுமதியாய் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.  வெள்ளையுள்ளம் கொண்ட அந்தச் சிறு பெண்ணின் கள்ளமில்லாச் சிரிப்பில் ஆழ்ந்த அந்தத் தாய்   புன்சிரிப்புடன்  அவளைப் பார்த்தாள்.
          “ ஏனடி  பெண்ணே! எதற்குக் கேட்கிறாய்?  ஊர்ப் பெண்களோடுதான் சண்டை போடுவாய்.  இப்போது அவனோடு சண்டை போடவா? அவன்  இருந்தால்தான் நீ வரமாட்டாயே!’’  
             “உம்…..அவன் ஆண்களோடுதான் நட்பு கொண்டிருப்பான் ;     ஆண்களோடுதான்  சண்டை போடுவான். அவனை  எப்போது  நான்
           சண்டைக்கு இழுத்தேன்.  உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். அவன் எங்கே?
           அதைச் சொல் !’’.
             “கள்ளி! அவன் எங்கே போயிருக்கிறானோ, அது எனக்குத் தெரியாது ! புலி உறங்கிய குகை போன்ற என் வயிறு  இங்கே இருக்கிறது. அவன் இருக்குமிடம் எனக்குத் தெரியாது! ஆனால் உறுதியாகச் சொல்வேன், அவன் இருக்குமிடம் ஓர் போர்க் களமாகத்தான் இருக்கும்.  அங்கே அவன் வீரதோடு வாளேந்தித் தோன்றுவான்!’’.
அவன் வீரத்தையும் பெருமிதத்தையும் கொண்ட உருவத்தைக் கண்ணுள் கண்ட அந்த இளம் பெண்ணின் முகம் சிவந்து, மனம்  காளையின் கட்டழகை நினைந்து மயங்கியது. தாயின் மனமோ மகனின் வீரத்தை எண்ணிப் பொங்கியது.
இதோ…. இந்தக் காட்சியைக் காட்டும் காவற்பெண்டின் புறநானூற்றுப் பாடல்……….....
                 “சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
                 யாண்டுளனோஎன வினவுதி; என்மகன்
                  யாண்டுளன் ஆயினும் அறியேன்; ஓரும்
                  புலிசேர்ந்து போகிய கல்லளை போல
                  ஈன்ற வயிறோ இதுவே!
                  தோன்றுவன்  மாதோ  போர்க்களத்  தானே!’’. 
                                                                                           -                                                                      காவற்பெண்டு  (புறநானூறு-86).
இவ்விளக்கத்தைக் காணொளியாகக் காண:
http://www.facebook.com/tamilargal/app_162891010412392

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers