Monday, November 28, 2011


இணையத்தில் வடமொழிக் கலப்பை எதிர்த்த

அமெரிக்கத்தமிழ்ச் சங்கத் தலைவருக்குச்
சென்னையில் பாராட்டு விழா!


சென்னை, அக். 25- எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை,  தமிழ் எழுச்சிப்பேரவை ஆகியவற்றின் சார்பில்  கரோலினா தமிழ்ச் சங்கத் தலைவர் சுந்தர் செயபாலனுக்குச் சென்னையில் வரவேற்பு தரப்பட்டது.

விரிவான செய்திக்குப் பார்க்க : https://groups.google.com/forum/?hl=ta#!topic/aaiviththamizh/5iJ1z2saaW8

தமிழ் எழுச்சிப்பேரவையின் செயலர் முனைவர் பா. இறையரசன் வரவேற்றார். அமெரிக்காவிலுள்ள யுனிகோடு கன்சார்ட்டியம் என்கிற  ஒருங்குகுறி சேர்த்தியத்தில் அன்றைய தமிழக அரசு உறுப்பினர் கட்டணம் கட்டிப் புதுப்பிக்கவில்லை; சுந்தர் செயபாலன் தாமே உறுப்பினர் ஆகி காஞ்சி மடத்தைச் சேர்ந்த இரமண சர்மா கோரிக்கையின்படி தமிழில் கிரந்த எழுத்துகள் சேர்க்கப்பட்டபோது, உலகத் தமிழர்களின் சார்பில் அதை எதிர்த்து ஒருங்குகுறி சேர்த்தியத்தில் பதிவு செய்தார் என்று இறையரசன் பாராட்டினார்.

திரைப்படக் கவிஞர்கள் அண்ணாமலை, பூவை வாலறிவன், சித்த மருத்துவர் கவிஞர் பொ.அ.அரசக்குமரன் (ராஜ் குமார்), உணர்ச்சிக் கவிஞர் தஞ்சை கோ. கண்ணன், வத்திரா இருப்பு தெ.சு. கவுதமன், கவிஞர்கள் எழில் வேந்தன்.தனித்தமிழ் வேங்கை மறத்தமிழ் வேந்தன்   முதலியோர் கவிதை படித்தனர்.

அழகிய தமிழ் மொழியில் தூய சொற்கள் பல உள்ளபோது பிறமொழிச் சொற்களைக்  கலக்க வேண்டியதில்லை; அறிவியல் தொழில் நுட்பம்  சார்ந்த பிற மொழிச் சொற்கள் தேவைப்படின் மொழிபெயர்த்து வழங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்று மறைமலை அடிகளாரின் பெயரன் மறை திருநாவுக்கரசு கூறினார்.

சித்த மருத்துவர் தெ.வேலாயதம் உரையாற்றும்போது தமிழ் மொழியில் 75 விழுக்காட்டுக்கு மேல் சித்த மருத்துவச் சுவடிகளும் நூல்களும் உள்ளன என்றார். ஓய்வுபெற்ற கூட்டுறவுத்துறைப் பதிவாளர் பத்மநாபன் தம் வெளிநாட்டு அனுபவங்களையும் அமெரிக்காவில் தமிழுக்கும் தமிழருக்கும் உரிய இடமும் உரிமைகளும் தரப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

இராமச் சந்திரா மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் வேங்கடாசலம், அமெரிக்க அறிவியல் அறிஞர்  விசுவநாதன், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கந்த சாமி,                                     முதலியோரும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கணினி வல்லுநர்களும் கலந்து கொண்டனர்.

தியூக் பல்கலைக்  கழக அறிவியல் அறிஞர் முனைவர் திருமதி இரமாமணி செயபாலன் “கசப்பும் இனிப்பும்” என்ற தலைப்பில் சர்க்கரைநோய் பற்றிப் பேசினார்.

அமெரிக்காவிலுள்ள கரோலினா தமிழ்ச் சங்கத் தலைவரும் கணினி வல்லுநரும் ஆகிய சுந்தர் செயபாலன் சிறப்புரை ஆற்றினார். கரோலினா தமிழ்ச்சங்கம், உலகதமிழர்கள் அமைப்பு,தமிழர்கள் கூட்டமைப்பு முதலியன தமிழக முதல்வர் செயலலிதா, கச்சத்திவை மீட்கவும் ஈழத்தமிழரைக் காக்கவும், மூவர் உயிர் காக்கவும்  கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்களைப் பாராட்டியதைத் தெரிவித்தார்.    சரவணன் நன்றி கூறினார்.
                                                           நன்றி : மாலை முரசு (25.10.2011 பக்கம் 10)

--------------------------------------------------------------------

Sunday, November 13, 2011

அண்ணா நூலகத்தை மாற்றாதே!

தென்மொழி இதழ் 2042, நளி (நவம்பர்,2011)
அண்ணா நூலகத்தை மாற்றாதே!

றிவின் ஊற்றாகத் திகழ்வன நூலகங்கள். தனிப்பட்டமனிதர்களின் நூலகங்களை விட பொதுமக்களுக்குப் பயன்படும் நூலகங்கள் பலரையும் பல தலைமுறைக்குச் சென்றடையும். பழங்காலத்தில் அரசர்களும் துறவிகளும் புலவர்களும் ஆசான்களும் சுவடிகளைச் சேர்த்து வைத்திருந்தனர்; மடங்களும் கோயில்களும் நூலகங்களாக விளங்கின. தனியார் சேர்த்துவைத்த புத்தகங்களும் வீட்டில் அமைத்துக் கொண்ட நூலகங்களும் கூடப் பிற்காலத்தில் பொதுச் சொத்தாகிப் பலருக்கும் பயன்படுகின்றன. தஞ்சை சரபோசி மன்னர், மறைமலை அடிகள், பாகனேரி ஆறுமுகம் செட்டியார், குளித்தலை கா.சு.பிள்ளை, புதுக்கோட்டை உரோசா முத்தையா நுலகங்கள் இன்றைக்குப் பொதுமக்களுக்கு உரியவையாகிப் பயன்பாட்டில் உள்ளன.  இன்னும் எண்ணற்றோர் தாம் சேர்த்த அறிவுச் சொத்தாம் நூல்களைப் பொது நூலகங்கள் ஆக்கிப் பொதுச்சொத்தது ஆக்கியுள்ளார்கள். அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் முதலிய அறச் செயல்களை விட  ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் மிக  உயர்ந்த அறம் என்பார் பாரதியார்.

இளம் மாணவர்கள் கல்வி கற்கக் கல்விக்கூடங்களில் சேர்ந்தோர் மட்டுமே – பெரும்பாலும் பணம் கொடுத்துப் – படிக்கக் கூடியவர்களுக்கு மட்டுமே  கல்விச் சாலைகள் பயன்படுகின்றன; ஆனால் இலவயமாக எல்லோரும் – எல்லா அகவையினரும் (வயதினரும்) படிக்க- அறிவைப் பெருக்கிக் கொள்ள உதவுவன பொது நூலகங்கள். கல்விக்கூடங்களில் இடம் கிடைக்காதவர்களும், வாய்ப்பில்லாதவர்களும், ஏழைகளும்,முதியோர்களும் படிக்க நூலகங்கள் உதவுகின்றன. ஆய்வாளர்களும்,  மாணவர்களும் கல்விச்சாலைகளில் படித்தற்கும் மேலாகத் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ள நூலங்களைத்தான் நாடுகிறார்கள். ஒரு கல்விக்கூடம் திறக்கப்பட்டால்  ஒரு சிறைச் சாலை மூடப்படும் என்பார்கள்; ஒரு நூலகம் திறக்கப் படுவதால் பல சிறைச் சாலைகள்  முடப்படும்.

அறிஞர் அண்ணா கன்னிமாரா நூலகத்தில் படித்துத் தாம் உயர்ந்ததைப் பெருமையாகச் சுட்டுவார். அப்படிப்பட்ட அறிஞர் அண்ணாவின் பெயரால் அமைக்கப்பட்ட நூலகம் முந்தைய அரசு கட்டியது என்பதற்காக, இன்றைய அரசு அந்த நூலகத்தை மாற்ற நினைப்பதோ ஒடுக்க நினைப்பதோ தவறானதாகும். கலைஞர் கட்டியது என்பதற்காகத் தலைமைச் செயலகத்துக்காகக் கட்டிய புதியகட்டடத்தை உயர் சிறப்பு மருத்துவ மனையாக மாற்றுவேன் என அறிவித்துப் பழைய கட்டடத்திலேயே – கோட்டையிலேயே ஆட்சிப்பொறுப்பை ஏற்று அங்கேயே தலைமைச் செயலகத்தை நடத்திவருகிறார் இன்றைய முதல்வர் செயலலிதா . முந்தைய ஆட்சியில் நடந்த சீகேடுகளை மாற்றினால் – போக்கினால் – தவறில்லை.

சமச்சீர் கல்வியில்  முதல்வர் செயலலிதா பின்பற்றிய முறையை அனைவரும் எதிர்க்கவில்லை; மாணவர்களின் படிப்புக் காலம் வீணாகிறதே என்றுதான் அனைவரும் வருத்தப்பட்டனர். சமச்சீர்கல்வி உண்மையில் பாடத்திட்ட அளவில்தான்  சமச்சீர்கல்வியே தவிர உண்மையான முழுமையான சமச்சீர் கல்வியில்லை என்று கல்வியாளர்கள் முந்தைய அரசு கொண்டுவந்ததில் குற்றம் சொல்லத்தான் செய்தார்கள். மேலும் பாடத்திட்டத்தில் மட்டுமல்லாமல் பாடங்களில் கலைஞர் புகழ் பாடும் தன்மை மிகுந்து இருந்ததைக் கல்வியாளர்கள் ஏற்கவில்லை. மேலும் சமச்சீர் கல்வியை ஏற்பதாகவும் பிறகு நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் முதல்வர் செயலலிதா கூறியிருந்ததைப் பலர் வரவேற்றார்கள்.


சமச் சீர்கல்விப் புத்தகங்களின் அட்டையில்  இருந்த கலைஞர் பாடிய செம்மொழிப்பாடல் நீக்கப்பட்டது தவறு என்பதற்கில்லை; ஏனென்றால் அப்பாடலே தவறுடையது. ஆனால் தமிழ் செம்மொழி என்ற    செய்தியும், தமிழ்ப்புத்தாண்டு பற்றிய பாடமும், திருவள்ளுவர் சிலைப் படமும்  நீக்கப்பட்டன என்பது தமிழறிஞர்களுக்கு வருத்தம் தந்தது. செம்மொழி என்ற தகுதியைத் தமிழுக்கு நடுவண் அரசு அறிவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சி நூறு ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்தால் வென்றதாகும். திருவள்ளுவர் ஆண்டு, தமிழர் திருநாள் என்ற முயற்சியும் அவ்வாறே நூறாண்டு கடந்த முயற்சியின் வெற்றியாகும்.  மறைமலை அடிகள், கா.நமச்சிவாய முதலியார், தேவ நேயப் பாவாணர் முதலியோரின் கருத்தாக்கங்களே இவை.

கலைஞர் ஆட்சியில் நடந்த தவறுகளும் ஊழல்களும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றாமல் கைவிட்டதும் அவரை ஆட்சியிலிருந்து நீக்கின. சிங்கள அரசு  பயங்கரவாதத்தை ஒழிக்கும் உள்நாட்டுப்போர் என்று கூறி ஈழத்தில் பொதுமக்களை அமில குண்டுகள் வீசிக் கொன்றழித்தபோது, தமிழ் நாட்டில் இருந்த கலைஞர் ஆட்சி ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை என்ற வருத்தம் உலகத்தமிழர்களின் நெஞ்சில் ஆழப்பதிந்ததால்தான், அடுத்து புதிய ஆட்சி செயலலிதா தலைமையில் வரவேண்டும் எண்று விரும்பினர். அதன்படி மிகப்பெரும்பான்மையான வெற்றியை செயலலிதா பெற்றார். இப்போது உள்ளாட்சியிலும் பெற்றுள்ளார். அதைத் தக்கவைத்துகொள்ள வேண்டியது அவர் கடமை.

செயலலிதா பதவியேற்றவுடன் ஈழத்தமிழர்களுக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க இரு தீர்மானங்களைக் கொண்டு வந்து உலகத்தமிழ் மக்களின் நன்மதிப்பினைப் பெற்றார். கச்சத்தீவினை மீட்க வேண்டும் என்பதும் தமிழக மீனவர்களைக் காக்க வேண்டும் என்பதும் முதல்வர் செயலலிதா அவர்களின் மிகப்பெருங்குரலாக ஒலித்ததால் உலத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் அவரைப் போற்றினர். தமிழக மீனவர்களைச் சிங்களர்கள் தாக்கிக் கொன்றுவருவதைச் சுட்டிப் பேசுகையில் ,” தமிழக மீனவர்கள் என்று பார்க்காதே! இந்திய மீனவர்களாகப் பார்!” என்று மைய அரசிடம் துணிந்து பேசியபோது தமிழக வீரப்பெண்ணாகப் பார்த்துத் தமிழர்கள் மகிழ்ந்தனர்.

ஆனால், மூவர் தூக்குதண்டனை நீக்க முதலில் மறுத்துப் பின் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததும், 29-10-2011 அன்று நடந்த வழக்கு உசாவலில் நடுவண் அரசு சார்பில் சொல்லப்பட்டது போலவே,  தூக்கு தண்டணை நீக்க வேண்டலை (கருணைமனுவை) ஒதுக்கித் தள்ளலாம் (அதாவது தூக்கு தண்டனை தரவேண்டும்) என்று தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் கருத்தளித்துள்ளதும் முதல்வர் செயலலிதா தமிழ் இன நலத்திற்கு உண்மையில் ஏதும் செய்ய மாட்டாரோ என்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் இன நலன் சிங்கள அரசாலோ நடுவண் அரசாலோ கேடுற்றால் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழக முதல்வரைச் சார்ந்ததே! அதே போல தமிழ் மொழி நலனும் பாதுகாக்கப்பெற வேண்டும் என்று எதிபார்க்கிறோம்.  சென்ற முறை செயலலிதா ஆட்சியில்தான் கண்ணகி சிலை அகற்றப்பட்டது; மீண்டும் கலைஞர் ஆட்சியில் கண்ணகி சிலை சென்னை கடற்கரையில் அமைக்கப்பெற்றது.  தலைமைச் செயலகம் அமைக்க இராணி மேரி கல்லூரியை இடிப்போம் என்று முன்பு முதல்வராக இருந்தபோது செயலலிதா முற்பட்டு, மாணவர்கள் எதிர்த்ததால் கைவிடப்பட்டது. மொழி, பண்பாடு, கல்வி முதலியவற்றில் கைவைத்தால் வலிமையான ஆட்சி வலுவிழந்து போகும்.
”ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை அழி” என்றோர் ஈரானியப் பழமொழி உண்டு; இட்லர் யூதர்களின் நூலகங்களைக் கொளுத்தினான்; சிங்களக் காடையர்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரித்து அழித்தார்கள். எனவே நூலகம் என்பது இன்றைய மாணவர்கட்கு - மக்கட்கு மட்டுமல்லாமல் எதிகாலத்தில் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டக்கூடிய மொழி பண்பாட்டு இன வரலாற்றுக் கருவூலம் ஆகும். தலைமைச் செயலகத்தில் இருந்த செம்மொழி நூலகத்தை மாற்றிக் கொண்டுபோனதால், அது இன்றுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை; தெற்கு ஆசியாவிலேயே பெரியது என்ற பெருமைக்குரியதும் மாணவர்கள் பேராசியர்கள் வீடு வீடாகச் சென்று திரட்டிய 5 இலக்கத்துக்கு மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டதும், விரைவில் 40 இலக்கம் புத்தகங்களைத் திரட்ட உள்ளதும் ஆகிய  ஆகிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றம் செய்து 5000 புத்தகங்கள் கூட வைக்க இயலாத பொதுக் கல்விக் கட்டட வளாகத்துக்கு மாற்றுவது கூடாது; மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் அனைவரும் இந்நூலகத்தைப் பயன்படுத்தும் பயன்பாட்டுநிலையில் இந்நூலகம் இருப்பதால் இந்நூலகத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டாம்.

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers