Monday, November 28, 2011


இணையத்தில் வடமொழிக் கலப்பை எதிர்த்த

அமெரிக்கத்தமிழ்ச் சங்கத் தலைவருக்குச்
சென்னையில் பாராட்டு விழா!


சென்னை, அக். 25- எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை,  தமிழ் எழுச்சிப்பேரவை ஆகியவற்றின் சார்பில்  கரோலினா தமிழ்ச் சங்கத் தலைவர் சுந்தர் செயபாலனுக்குச் சென்னையில் வரவேற்பு தரப்பட்டது.

விரிவான செய்திக்குப் பார்க்க : https://groups.google.com/forum/?hl=ta#!topic/aaiviththamizh/5iJ1z2saaW8

தமிழ் எழுச்சிப்பேரவையின் செயலர் முனைவர் பா. இறையரசன் வரவேற்றார். அமெரிக்காவிலுள்ள யுனிகோடு கன்சார்ட்டியம் என்கிற  ஒருங்குகுறி சேர்த்தியத்தில் அன்றைய தமிழக அரசு உறுப்பினர் கட்டணம் கட்டிப் புதுப்பிக்கவில்லை; சுந்தர் செயபாலன் தாமே உறுப்பினர் ஆகி காஞ்சி மடத்தைச் சேர்ந்த இரமண சர்மா கோரிக்கையின்படி தமிழில் கிரந்த எழுத்துகள் சேர்க்கப்பட்டபோது, உலகத் தமிழர்களின் சார்பில் அதை எதிர்த்து ஒருங்குகுறி சேர்த்தியத்தில் பதிவு செய்தார் என்று இறையரசன் பாராட்டினார்.

திரைப்படக் கவிஞர்கள் அண்ணாமலை, பூவை வாலறிவன், சித்த மருத்துவர் கவிஞர் பொ.அ.அரசக்குமரன் (ராஜ் குமார்), உணர்ச்சிக் கவிஞர் தஞ்சை கோ. கண்ணன், வத்திரா இருப்பு தெ.சு. கவுதமன், கவிஞர்கள் எழில் வேந்தன்.தனித்தமிழ் வேங்கை மறத்தமிழ் வேந்தன்   முதலியோர் கவிதை படித்தனர்.

அழகிய தமிழ் மொழியில் தூய சொற்கள் பல உள்ளபோது பிறமொழிச் சொற்களைக்  கலக்க வேண்டியதில்லை; அறிவியல் தொழில் நுட்பம்  சார்ந்த பிற மொழிச் சொற்கள் தேவைப்படின் மொழிபெயர்த்து வழங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்று மறைமலை அடிகளாரின் பெயரன் மறை திருநாவுக்கரசு கூறினார்.

சித்த மருத்துவர் தெ.வேலாயதம் உரையாற்றும்போது தமிழ் மொழியில் 75 விழுக்காட்டுக்கு மேல் சித்த மருத்துவச் சுவடிகளும் நூல்களும் உள்ளன என்றார். ஓய்வுபெற்ற கூட்டுறவுத்துறைப் பதிவாளர் பத்மநாபன் தம் வெளிநாட்டு அனுபவங்களையும் அமெரிக்காவில் தமிழுக்கும் தமிழருக்கும் உரிய இடமும் உரிமைகளும் தரப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

இராமச் சந்திரா மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் வேங்கடாசலம், அமெரிக்க அறிவியல் அறிஞர்  விசுவநாதன், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கந்த சாமி,                                     முதலியோரும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கணினி வல்லுநர்களும் கலந்து கொண்டனர்.

தியூக் பல்கலைக்  கழக அறிவியல் அறிஞர் முனைவர் திருமதி இரமாமணி செயபாலன் “கசப்பும் இனிப்பும்” என்ற தலைப்பில் சர்க்கரைநோய் பற்றிப் பேசினார்.

அமெரிக்காவிலுள்ள கரோலினா தமிழ்ச் சங்கத் தலைவரும் கணினி வல்லுநரும் ஆகிய சுந்தர் செயபாலன் சிறப்புரை ஆற்றினார். கரோலினா தமிழ்ச்சங்கம், உலகதமிழர்கள் அமைப்பு,தமிழர்கள் கூட்டமைப்பு முதலியன தமிழக முதல்வர் செயலலிதா, கச்சத்திவை மீட்கவும் ஈழத்தமிழரைக் காக்கவும், மூவர் உயிர் காக்கவும்  கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்களைப் பாராட்டியதைத் தெரிவித்தார்.    சரவணன் நன்றி கூறினார்.
                                                           நன்றி : மாலை முரசு (25.10.2011 பக்கம் 10)

--------------------------------------------------------------------

Sunday, November 13, 2011

அண்ணா நூலகத்தை மாற்றாதே!

தென்மொழி இதழ் 2042, நளி (நவம்பர்,2011)
அண்ணா நூலகத்தை மாற்றாதே!

றிவின் ஊற்றாகத் திகழ்வன நூலகங்கள். தனிப்பட்டமனிதர்களின் நூலகங்களை விட பொதுமக்களுக்குப் பயன்படும் நூலகங்கள் பலரையும் பல தலைமுறைக்குச் சென்றடையும். பழங்காலத்தில் அரசர்களும் துறவிகளும் புலவர்களும் ஆசான்களும் சுவடிகளைச் சேர்த்து வைத்திருந்தனர்; மடங்களும் கோயில்களும் நூலகங்களாக விளங்கின. தனியார் சேர்த்துவைத்த புத்தகங்களும் வீட்டில் அமைத்துக் கொண்ட நூலகங்களும் கூடப் பிற்காலத்தில் பொதுச் சொத்தாகிப் பலருக்கும் பயன்படுகின்றன. தஞ்சை சரபோசி மன்னர், மறைமலை அடிகள், பாகனேரி ஆறுமுகம் செட்டியார், குளித்தலை கா.சு.பிள்ளை, புதுக்கோட்டை உரோசா முத்தையா நுலகங்கள் இன்றைக்குப் பொதுமக்களுக்கு உரியவையாகிப் பயன்பாட்டில் உள்ளன.  இன்னும் எண்ணற்றோர் தாம் சேர்த்த அறிவுச் சொத்தாம் நூல்களைப் பொது நூலகங்கள் ஆக்கிப் பொதுச்சொத்தது ஆக்கியுள்ளார்கள். அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் முதலிய அறச் செயல்களை விட  ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் மிக  உயர்ந்த அறம் என்பார் பாரதியார்.

இளம் மாணவர்கள் கல்வி கற்கக் கல்விக்கூடங்களில் சேர்ந்தோர் மட்டுமே – பெரும்பாலும் பணம் கொடுத்துப் – படிக்கக் கூடியவர்களுக்கு மட்டுமே  கல்விச் சாலைகள் பயன்படுகின்றன; ஆனால் இலவயமாக எல்லோரும் – எல்லா அகவையினரும் (வயதினரும்) படிக்க- அறிவைப் பெருக்கிக் கொள்ள உதவுவன பொது நூலகங்கள். கல்விக்கூடங்களில் இடம் கிடைக்காதவர்களும், வாய்ப்பில்லாதவர்களும், ஏழைகளும்,முதியோர்களும் படிக்க நூலகங்கள் உதவுகின்றன. ஆய்வாளர்களும்,  மாணவர்களும் கல்விச்சாலைகளில் படித்தற்கும் மேலாகத் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ள நூலங்களைத்தான் நாடுகிறார்கள். ஒரு கல்விக்கூடம் திறக்கப்பட்டால்  ஒரு சிறைச் சாலை மூடப்படும் என்பார்கள்; ஒரு நூலகம் திறக்கப் படுவதால் பல சிறைச் சாலைகள்  முடப்படும்.

அறிஞர் அண்ணா கன்னிமாரா நூலகத்தில் படித்துத் தாம் உயர்ந்ததைப் பெருமையாகச் சுட்டுவார். அப்படிப்பட்ட அறிஞர் அண்ணாவின் பெயரால் அமைக்கப்பட்ட நூலகம் முந்தைய அரசு கட்டியது என்பதற்காக, இன்றைய அரசு அந்த நூலகத்தை மாற்ற நினைப்பதோ ஒடுக்க நினைப்பதோ தவறானதாகும். கலைஞர் கட்டியது என்பதற்காகத் தலைமைச் செயலகத்துக்காகக் கட்டிய புதியகட்டடத்தை உயர் சிறப்பு மருத்துவ மனையாக மாற்றுவேன் என அறிவித்துப் பழைய கட்டடத்திலேயே – கோட்டையிலேயே ஆட்சிப்பொறுப்பை ஏற்று அங்கேயே தலைமைச் செயலகத்தை நடத்திவருகிறார் இன்றைய முதல்வர் செயலலிதா . முந்தைய ஆட்சியில் நடந்த சீகேடுகளை மாற்றினால் – போக்கினால் – தவறில்லை.

சமச்சீர் கல்வியில்  முதல்வர் செயலலிதா பின்பற்றிய முறையை அனைவரும் எதிர்க்கவில்லை; மாணவர்களின் படிப்புக் காலம் வீணாகிறதே என்றுதான் அனைவரும் வருத்தப்பட்டனர். சமச்சீர்கல்வி உண்மையில் பாடத்திட்ட அளவில்தான்  சமச்சீர்கல்வியே தவிர உண்மையான முழுமையான சமச்சீர் கல்வியில்லை என்று கல்வியாளர்கள் முந்தைய அரசு கொண்டுவந்ததில் குற்றம் சொல்லத்தான் செய்தார்கள். மேலும் பாடத்திட்டத்தில் மட்டுமல்லாமல் பாடங்களில் கலைஞர் புகழ் பாடும் தன்மை மிகுந்து இருந்ததைக் கல்வியாளர்கள் ஏற்கவில்லை. மேலும் சமச்சீர் கல்வியை ஏற்பதாகவும் பிறகு நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் முதல்வர் செயலலிதா கூறியிருந்ததைப் பலர் வரவேற்றார்கள்.


சமச் சீர்கல்விப் புத்தகங்களின் அட்டையில்  இருந்த கலைஞர் பாடிய செம்மொழிப்பாடல் நீக்கப்பட்டது தவறு என்பதற்கில்லை; ஏனென்றால் அப்பாடலே தவறுடையது. ஆனால் தமிழ் செம்மொழி என்ற    செய்தியும், தமிழ்ப்புத்தாண்டு பற்றிய பாடமும், திருவள்ளுவர் சிலைப் படமும்  நீக்கப்பட்டன என்பது தமிழறிஞர்களுக்கு வருத்தம் தந்தது. செம்மொழி என்ற தகுதியைத் தமிழுக்கு நடுவண் அரசு அறிவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சி நூறு ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்தால் வென்றதாகும். திருவள்ளுவர் ஆண்டு, தமிழர் திருநாள் என்ற முயற்சியும் அவ்வாறே நூறாண்டு கடந்த முயற்சியின் வெற்றியாகும்.  மறைமலை அடிகள், கா.நமச்சிவாய முதலியார், தேவ நேயப் பாவாணர் முதலியோரின் கருத்தாக்கங்களே இவை.

கலைஞர் ஆட்சியில் நடந்த தவறுகளும் ஊழல்களும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றாமல் கைவிட்டதும் அவரை ஆட்சியிலிருந்து நீக்கின. சிங்கள அரசு  பயங்கரவாதத்தை ஒழிக்கும் உள்நாட்டுப்போர் என்று கூறி ஈழத்தில் பொதுமக்களை அமில குண்டுகள் வீசிக் கொன்றழித்தபோது, தமிழ் நாட்டில் இருந்த கலைஞர் ஆட்சி ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை என்ற வருத்தம் உலகத்தமிழர்களின் நெஞ்சில் ஆழப்பதிந்ததால்தான், அடுத்து புதிய ஆட்சி செயலலிதா தலைமையில் வரவேண்டும் எண்று விரும்பினர். அதன்படி மிகப்பெரும்பான்மையான வெற்றியை செயலலிதா பெற்றார். இப்போது உள்ளாட்சியிலும் பெற்றுள்ளார். அதைத் தக்கவைத்துகொள்ள வேண்டியது அவர் கடமை.

செயலலிதா பதவியேற்றவுடன் ஈழத்தமிழர்களுக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க இரு தீர்மானங்களைக் கொண்டு வந்து உலகத்தமிழ் மக்களின் நன்மதிப்பினைப் பெற்றார். கச்சத்தீவினை மீட்க வேண்டும் என்பதும் தமிழக மீனவர்களைக் காக்க வேண்டும் என்பதும் முதல்வர் செயலலிதா அவர்களின் மிகப்பெருங்குரலாக ஒலித்ததால் உலத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் அவரைப் போற்றினர். தமிழக மீனவர்களைச் சிங்களர்கள் தாக்கிக் கொன்றுவருவதைச் சுட்டிப் பேசுகையில் ,” தமிழக மீனவர்கள் என்று பார்க்காதே! இந்திய மீனவர்களாகப் பார்!” என்று மைய அரசிடம் துணிந்து பேசியபோது தமிழக வீரப்பெண்ணாகப் பார்த்துத் தமிழர்கள் மகிழ்ந்தனர்.

ஆனால், மூவர் தூக்குதண்டனை நீக்க முதலில் மறுத்துப் பின் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததும், 29-10-2011 அன்று நடந்த வழக்கு உசாவலில் நடுவண் அரசு சார்பில் சொல்லப்பட்டது போலவே,  தூக்கு தண்டணை நீக்க வேண்டலை (கருணைமனுவை) ஒதுக்கித் தள்ளலாம் (அதாவது தூக்கு தண்டனை தரவேண்டும்) என்று தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் கருத்தளித்துள்ளதும் முதல்வர் செயலலிதா தமிழ் இன நலத்திற்கு உண்மையில் ஏதும் செய்ய மாட்டாரோ என்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் இன நலன் சிங்கள அரசாலோ நடுவண் அரசாலோ கேடுற்றால் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழக முதல்வரைச் சார்ந்ததே! அதே போல தமிழ் மொழி நலனும் பாதுகாக்கப்பெற வேண்டும் என்று எதிபார்க்கிறோம்.  சென்ற முறை செயலலிதா ஆட்சியில்தான் கண்ணகி சிலை அகற்றப்பட்டது; மீண்டும் கலைஞர் ஆட்சியில் கண்ணகி சிலை சென்னை கடற்கரையில் அமைக்கப்பெற்றது.  தலைமைச் செயலகம் அமைக்க இராணி மேரி கல்லூரியை இடிப்போம் என்று முன்பு முதல்வராக இருந்தபோது செயலலிதா முற்பட்டு, மாணவர்கள் எதிர்த்ததால் கைவிடப்பட்டது. மொழி, பண்பாடு, கல்வி முதலியவற்றில் கைவைத்தால் வலிமையான ஆட்சி வலுவிழந்து போகும்.
”ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை அழி” என்றோர் ஈரானியப் பழமொழி உண்டு; இட்லர் யூதர்களின் நூலகங்களைக் கொளுத்தினான்; சிங்களக் காடையர்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரித்து அழித்தார்கள். எனவே நூலகம் என்பது இன்றைய மாணவர்கட்கு - மக்கட்கு மட்டுமல்லாமல் எதிகாலத்தில் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டக்கூடிய மொழி பண்பாட்டு இன வரலாற்றுக் கருவூலம் ஆகும். தலைமைச் செயலகத்தில் இருந்த செம்மொழி நூலகத்தை மாற்றிக் கொண்டுபோனதால், அது இன்றுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை; தெற்கு ஆசியாவிலேயே பெரியது என்ற பெருமைக்குரியதும் மாணவர்கள் பேராசியர்கள் வீடு வீடாகச் சென்று திரட்டிய 5 இலக்கத்துக்கு மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டதும், விரைவில் 40 இலக்கம் புத்தகங்களைத் திரட்ட உள்ளதும் ஆகிய  ஆகிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றம் செய்து 5000 புத்தகங்கள் கூட வைக்க இயலாத பொதுக் கல்விக் கட்டட வளாகத்துக்கு மாற்றுவது கூடாது; மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் அனைவரும் இந்நூலகத்தைப் பயன்படுத்தும் பயன்பாட்டுநிலையில் இந்நூலகம் இருப்பதால் இந்நூலகத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டாம்.

Sunday, September 11, 2011

“இன்றே போல்க நும் புணர்ச்சி”


                     
                        பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நீக்கக்கோரி கடந்த 28 ஆம் தேதியன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு மக்கள்மன்றத்தைச் சேர்ந்த இளம்பெண் செங்கொடி தீக்குளித்து இறந்தார். ஊர்வலமாக 7 மணி நேரம் சென்று, செங்கொடியின் சொந்த ஊரான மேல்கதிர்பூர் மங்கல்பாடியில்   பூங்காவில் செங்கொடியின் வீர உடல் நல்லடக்கம் செய்யப்பெற்றது. குற்றவாளிகள் அல்லாத மூவர் மேல் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை நீக்கக் கோரி சென்னை கோயம்பேட்டில் சாகும்வரை உண்ணாநிலைப்போராட்டம் நடத்திய மூன்று பெண் வழக்கறிஞர்கள் அங்கயற்கண்ணி என்கிற கயல்விழி, வடிவு, சுசாதா  ஆகிய மூவரும்  வந்திருந்த மகளிரும் ஆர்வலர்களும் கண்ணீர் விடுக் கதறி அழுதனர்.

                 செங்கொடியின் நினைவை போற்றும் வகையில் மங்கல்பாடியில் உருவச் சிலையும் திறக்கப்பட்டது. வீரவணக்க இரங்கல் கூட்டத்தில் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான், நல்லக்கண்ணு, பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசப் பொது உடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் மணியரசன், அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி ஐசக், இயக்குர் அமீர், சேரன்,மணிவண்ணன், நடிகர் சத்தியராசு உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், மனித உரிமை அமைப்பினர்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

                 அரசியல் கட்சித்தலைவர்கள் ஆளுக்கொரு  நாள் உண்ணாநிலைப்போராட்டம், மனிதச்சங்கிலி, மறியல் எனப் பிரிந்து செயல்பட்டு வந்த நிலையச் செங்கொடி தன் உயிரீந்து மாற்றினாள் என்று தமிழின ஆதரவாளர்கள் பேசினர். எல்லா வகையிலும் தான் விட்டுக்கொடுத்துத் தமிழர் நலனுக்காகப் போராடவருவதாகத் திருமாவளவன் கூறியதையும், எவ்விடத்திலும் கட்சிக் கொடியையோ முழக்கத்தையோ செய்யக்கூடாது என்று தடுத்துவைத்திருந்த வைக்கோவின் பெருந்தன்மையையும், ஒற்றுமையான களத்தை உருவாக்கிய சீமானையும்  அனைவரும் பாராட்டினர். கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து மக்களும் திரண்டு கண்ணீருடன் கூடியிருந்ததைக் கண்டபோது, அரசியல் தலைவர்களும் ஒன்றுபட்டு மேடையில் இருந்ததைப் பாராட்டி, “இதே போல் ஒற்றுமையாக இருந்தால், இராச பக்சேயை ஐ.நா.குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியும்; இரண்டு மாதத்திற்குப் பின் வழக்கு நடக்கும் போது தூக்குத்தண்டனையிலிருந்து மூவரையும் காப்பாற்றி விடுதலை பெறச் செய்ய முடியும்; ஈழத்தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் காப்பாற்ற முடியும்; காவிரி பாலாறு உரிமைகளையும் பெற்றுவிட முடியும்” என்ற நம்பிக்கை துளிர்த்தது. தமக்குள் போரிட்டுக்கொண்டிருந்த மூவேந்தர்களையும் ஒன்றாகக் கண்ட பொழுது ஔவையார் மகிழ்ந்து,  “இன்றே போல்க நும் புணர்ச்சி” என்று வாழ்த்தினார் அல்லவா! அவ்வாறு நாமும் செங்கொடியை வணங்கி தன்னலம் மறந்து மக்கள் நலத்திற்காக ஒற்றுமையாகிய அனைத்துஅரசியல் தலைவர்களையும் வாழ்த்துவோம்! வாழ்த்துவோம்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, August 1, 2011

இலாரி கிளிண்டனுக்குத் தமிழர்களின் நன்றி!


ஈழத் தமிழர்களுக்குச் சம உரிமை கிடைக்கவேண்டும்

என்ற இலாரி கிளிண்டனுக்குத் தமிழர்களின் நன்றி!


                                    தமிழ் எழுச்சிப் பேரவையின் தலைவர் கோ.கண்ணன் அவர்களும் செயலர் முனைவர் இறையரசனும் 
இலாரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து ஈழத் தமிழர்கள் சிங்களர்களுக்குச் சமமான உரிமையுடன் வாழவேண்டும் என்றும் முதற்கட்டமாக விரைவில் நல்லமுறையில் குடியமர்த்தப்பெற வேண்டும் என்றும் கூறியதற்கு உலகத் தமிழ் இனத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அவ்வறிக்கையில்,
                                     அமெரிக்கப்பெருநாட்டின் வெளியுறவுத் துறைசெயலராக விளங்கும் பெருமைக்குரிய இலாரி கிளிண்டன் தமிழக முதல்வரை அவரது அலுவலகத்துக்கே சென்று சந்தித்தது தமிழர்களுக்குச் செய்த பெருமையாகும் என்றும், இது இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த இராசபக்சேயைப் போர்க்குற்றாவாளியாக அறிவிக்க வேண்டுமென்றும், இலங்கையின் மேல் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்ட மன்றத்தில் செயலலிதா கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.

                                    வடக்கு மாநிலத்தின் பெரும்பான்மைப் பகுதிகளில் சிங்கள இராணுவம் இன்னும் உள்ளது; முள்வேளி முகாம்களில் உள்ள தமிழர்கள் இன்னும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்; வீடு வாசலற்ற அவர்கள் உடமைகளை இழந்து உண்ண உணவின்றி,குடிக்க நீரின்றி மருத்துவ வசதிகளின்றி, எந்நேரம் வேண்டுமானாலும் விசாரணை என்ற பெயரில் கொல்லப் படலாம் என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளனர்.; அவர்களுடைய வீடுகளில் சிங்கள இனத்தவர் குடியேற்றப்பட்டுள்ளனர்.


 இந்நிலையில் அங்கே தேர்தல் நடத்துவதாக நாடமாடி வருகின்றனர். 

இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்கள், சிங்களர்களுக்குச் சமமான உரிமைகளுடன் வாழ வழி செய்ய வேண்டும் என்று இலாரி கிளிண்டன் கூறியுள்ளது நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துகிறது. இராச பட்சே நடத்திய இனப்படுகொலையை- போர்க்குற்றங்களை அமெரிக்கப்பாராளு மன்றத்தில் திரைப்படமாகப் பார்த்த உறுப்பினர்கள் கண்ணீர் விட்டுள்ளனர்.தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் நிறவேற்ற்ப்பட்ட தீர்மானத்தை அடியொற்றி இந்திய அரசும் இராச பட்சேயின் போர்க்குற்றங்களை விசாரிக்க ஐ.நா.வை வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் இலாரிகிளிண்டன் வற்புறுத்த வேண்டுகிறோம்; சிங்கள் அரசின் மேல் பொருளாதாரத் தடை கொண்டுவரவும் வேண்டுகிறோம்.

போர்க்குற்றங்கள் நடந்துள்ள சூழ்நிலையில் உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்பட்டகுழந்தைகளையும் பெண்களையும் முதியோர்களையும் காக்க உடனடியாக உலக நாடுகள் அவை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் ஆவன செய்யவும் கண்காணிக்கத் துறவிகளாகிய அக்னிவேஷ், ஸ்ரீ ரவிசங்கர், தமிழக முதலமைச்சர் சார்பில் ஓர் அமைச்சர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழ் எழுச்சிப் பேரவையின் சார்பில் கோரியுள்ளனர்.

இலாரிகிளிண்டன் தமிழக முதல்வரைச் சந்திக்கும் செய்தியை முதலில் வெளியிட்டதுடன் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க ஆவன செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்திய மாலைமுரசு இதழுக்குத் தமிழ் எழுச்சிப் பேரவையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tuesday, March 8, 2011

கணினியில் ஆரியச் சூழ்ச்சி


கணினியில் ஆரியச் சூழ்ச்சி
-முனைவர் பா. இறையரசன்


தமிழ் எழுத்துகளே தாய்

குமரிக்கண்டத்தை அடுத்துத் தோன்றிய சிந்துநாடு (இந்தியா) முழுதும் குறிப்பாகத் தென்னாட்டின்  குகைகளிலெல்லாம் ஆசீவக அல்லது சமண அல்லது புத்த மத முனிவர்கள்  தங்கியிருந்தனர். தங்கியிருந்தவர்களின்  பெயர்களும், தங்கியிருந்தவர்களுக்கு உதவியவர்களின் பெயர்களும் , உதவிய வகையும் பிறவும் ஆங்காங்குள்ள கல்வெட்டுகளில் தமிழி எழுத்துகளில்  பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த எழுத்தை  வடநாட்டில் பிராமி எழுத்துகள் என்று குறித்தனர். எனினும் அசோகன் கல்வெட்டில் காணப்படும் பிராமி எழுத்துகளில் வடமொழியிலுள்ள வல்லின எழுத்து களுக்கான வருக்க எழுத்துக் குறியீடுகள் உள்ளதாலும், தமிழ் நாட்டிலுள்ள இந்தக் கல்வெட்டுகளில் அந்த வருக்க எழுத்துக் குறியீடுகள் யாண்டும் காணப்படாததாலும், மேலும், சிறப் பாகத் தமிழ் மொழிக்கே  உரிய ற,   ன, ழ, எ, ஒ   ஆகிய எழுத்துகள் காணப்படுவதாலும் இதனைத் தமிழி என்று பெயரிட்டு வழங்கி வருகின் றனர். 

இந்தத்  தமிழ் எழுத்து நிலை யிலும், காலத்தால் முந்தியவை  தாமிழி என்றும், திராவிடி என்றும், பிற்கால எழுத்தைத் தமிழி என்றும் வழங்கி வரு கின்றனர். ஆரியச் சார்பினர் தமிழ் அல்லது தமிழி எனக்குறிக்க விரும் பாமல் வடபிராமி, தென்பிராமி (திராவிடி) என்றே கூறிவருகின்றனர்.

வர்த்தமானர்  கி.மு.527  இல் கால மானார். அவருக்குப் பல ஆண்டுகட்குப் பிறகு  (கி.மு. 317 _ 297)  பத்திரபாகு முனிவர் தலைவரானார். இவர் மோரிய சந்திர குப்தரின் ஆசிரியராவார்.  இவர் மகத நாட்டில் 12 ஆண்டுகள்  வற்கடம் தோன்றுவதை முன்னறிவித்துத் தமது   மாணாக்கருடன் தென்னகம் வந்தார். கன்னட நாட்டில் சரவண வெள்ளைக் குளம்  (சரவண பெல கொலா) என்ற இடத்தில் தங்கினார். 

அவர் சீடரில் ஒருவர் விசாகர். இவர்  பாண்டிய நாட்டில் சமயம் பரப்பினார்.  கி.மு. 297 இல் பத்திரபாகு முனிவர் வடக் கிருந்து (சல்லேகனை  செய்து) உயிர் விட்டார். அரிசேனரின் பிருகத்கதாவி லும், தேவசந்திரரின் கன்னட இராஜா வளியிலும் இவ்வரலாறு சொல்லப்பட் டுள்ளது. சந்திரகிரியில் பத்திரபாகுவின் குகையும், சந்திரகுப்தரின் புதைவிடமும்  (சமாதியும்) உள்ளன. 

பாண்டி நாட்டி லுள்ள தமிழிக் கல்வெட்டுகள்  கி.மு. 3 ஆம் நூற்றாண்டின.  க என்னும் எழுத்து  அசோகன் கல்வெட்டிலும் தமிழ் நாட்டிலுள்ள  புகழூர்க்  கல் வெட்டிலும் சிலுவைக்குறி  அல்லது கூட்டல்குறி  வடிவில் செதுக்கப்பட்டி ருக்கும். 

மீனாட்சிபுரம் கல்வெட்டு,  அசோகர் கல்வெட்டைவிடக் காலத் தால் முந்தியது  என்னும்  உண்மை எல்லா  அறிஞர்களாலும் ஒப்புக் கொள் ளப்பட்டுள்ளது. இந்த மீனாட்சிபுரம் கல்வெட்டில் மேலே கண்ட கூட்டல் அல்லது சிலுவைக்குறி  காணப்படுமே யானால்,  அதனைக் க  என்று  படிக் காமல்  க்  என்று படிக்க வேண்டிய  நிலை உள்ளது. க என்று படிப்பதற்கு மீனாட்சிபுரம் கல்வெட்டு அமைப்பில் சிலுவைக்குறியின் உச்சிப் பகுதியை ஒட்டி  வலப்புறமாகச்  சிறுகோடு  போடப்பட்டிருக்கும்.   

இந்த  எழுத்து வடிவம்  அசோகன் கல்வெட்டிலோ,  புகழூர்க்  கல்வெட்டிலோ  காணப்படு மேயானால்  கா  என்று  நெடிலாகப் படிக்க வேண்டும்.  இந்த வேறுபாடு  நோக்கியும் இதனை  அசோகனுக்கு   முந்தைய எழுத்து  என உறுதி செய்ய லாம்.


வடநாட்டுத் தமிழி எழுத்துமுறை  மாகதி, அர்த்த மாகதி, கரோட்டி எனப் பல சிறுசிறு மாறுபாடுடைய எழுத்து களாக வழங்கின. தென்னாட்டில்  தமிழி எழுத்துமுறையும்  வட்டெழுத்து முறையும் வழங்கின.  

பனை ஓலையில் எழுத்தாணியால் தமிழி எழுத்துகளை மேலும் கீழும் சுழித்து வளைத்து எழுதி யவையே வட்டெழுத்துகளாகும். சமணர் களும் பவுத்தர்களும்  ஆரியர்களுடைய  பாகதமொழியைப் பின்பற்றிப் பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளைத்  தம் சமய மொழிகளாக உருவாக்கிக்  கொண்டனர்.   

வேதகாலத்து பாகத மொழி வழக்கற்றுப்  போனதால் பிரா கிருதத்தில் இருந்து   புதிதாகச் செய்யப் பட்ட மொழிதான் சமற்கிருதம்  (சமஸ்: செய்யப்பட்ட; கிருதம்: மொழி)  ஆகும்.  எழுத்து வழக்கற்ற இந்த மொழிகள்  தமிழி எழுத்துகளைக் கொண்டு   ஆரிய ஒலிகளுக்கான  சில குறியீடு களையும் சேர்த்து கிரந்தம் என்ற எழுத்து முறையை கி.பி.மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் உருவாக்கிக் கொண்டன. 

தென்னாட்டில் தமிழி எழுத்துகளைப் பனைஓலைகளில் எழுதிவந்தனர்; வடநாட்டில் இலை அல்லது தோலில் எழுதியதால் இந்தக் கிரந்த எழுத்துகளை மேலே கோடிட்டு எழுதியதால் தேவநாகரி எழுத்துமுறை கி.பி.12ஆம் நூற்றாண்டு அளவில் தோன்றியது.

தமிழே தாய்மொழி

இந்தியா முழுவதும் பலுச்சித்தானம் வரை தமிழ் மொழியே வழங்கி வந்தது.  ஆப்கான் எல்லையோரம் உள்ள பலுசித்தானில் பேசப்படும் தமிழ் மொழிக் குடும்பத்துப் பிராகூய் வட இந்திய தமிழ்மொழிகளில் ஒன்று. அதைப்போல், வடஇந்திய தமிழ் மொழிக் குடும்பத்திலுள்ளவை ஒரோவன், முண்டா,இராசுமகால்,கூ அல்லதுகோந்த், பத்ரீ, மால்தோ முதலியவை.  

நடு (மத்திய) இந்திய கோலமி, நயினி, , பர்கி, ஒல்லாரி, கூய், கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, குரூக், மோசுரா முதலியவை. தென்னிந் தியாவில் தமிழின் கிளை மொழி களாகிப்போன தோடம் (துதம்) , கோத்தம், படுகு, கோண்டு, வடகோலமி, நயினி, இருளிகா போன்றவை உள்ளன. 

இவை எழுத்தில்லா மொழிகள். கன்ன டமும் துளுவும்கூட அண்மைக்காலம் வரை எழுத்தில்லாமல் இருந்தன. ஆகவே பர்மா பலுச்சித்தானம் வரை  விளங்கிய தொல்இந்தியா (சிந்து நாடு) முழுதும் தமிழும் தமிழ் எழுத்து முறையும், ஆரியப் படையெடுப்பால் சிதைந்த வட திரிபு (திராவிட) மொழிகளுமே இருந்தன.

வடநாட்டில் நந்தர்  மோரியர் களுக்குப் பிறகு அசோகன் காலத்தில் சமண புத்த மதங்கள் மட்டும்தான் செல்வாக்கோடு இருந்தன.  சங்கம் மருவிய காலத்தில் சமண புத்த மதங்கள் தமிழ் நாட்டினுள் நுழைந்தன. 

கி.பி. மூன்று முதல் ஏழு நூற்றாண்டுவரை இந்தியா முழுவதும் சமண புத்த மதங்கள்  செல்வக்கோடு இருந்ததால்  பாலியும் பிராகிருதமுமே  ஆட்சி மொழியாகவும் விளங்கின. வடநாட்டில்  சாதவாகனர்களும் தென்னாட்டில் பல்லவர் பாண்டியர் ஆகியோரும் சமண புத்த மதங்களை ஒடுக்கி சைவ வைணவ மதங்களையும் சமற்கிருதத் தையும்  வளர்த்தனர். 

எனவே கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல்  7ஆம் நூற்றாண்டு வரை  இந்திய அரசர்களுடைய ஆட்சி மொழியாக  சமற்கிருதமும் எழுத்து முறையாக கிரந்தமும் விளங்கின. கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பின் மக்கள்மொழியாகிய தமிழ்  புத்துணர்ச்சி பெற்றது. மதத்தின் பிடியில்  அரசர் களும் ஆட்சியும் இருந்ததால்  சமற் கிருதக் கல்வியே எங்கும் ஓங்கி இருந்தது. நாளந்தா, காஞ்சிபுரம், எண்ணாயிரம் போன்ற இடங்களில்  சமற்கிருதக் கல்வி நிலையங்களே விளங்கின. 

இவற்றை யெல்லாம் மீறி மக்கள் மொழிகளும் இலக்கியங்களும் வளர்ந்து கொண்டு தான் இருந்தன. கிறித்துவ மதத்தின் மொழியாக இலத்தின்  விளங்கியதையும் மீறி மேலை நாட்டு மொழிகள் வளர்ந் தன. ஆட்சி மொழியாகவும் வணிக மொழியாகவும் ஆங்கிலம் வளர்ந்ததால்  கிறித்துவ சமய மொழியாகவும்  ஏற்கப் பட்டு சமற்கிருதம்போல் இலத்தினும் உலகவழக்கு அழிந்து ஒழிந்தது.  மதப் பற்றின் காரணமாக  சமற்கிருத சொற்களையும் ஒலிகளையும் அதிகம் ஏற்றுக்கொண்ட  மொழிகள்  திரிந்து  திருந்தா  திராவிட மொழிகளாகவும்  வடநாட்டு மொழிகளாகவும் சிதைந்தன. 

தென்னாட்டில்  முதலில் தெலுங்கும்  பின் கன்னடமும்  அடுத்து மலையாள முமாகத் தமிழ் திரிந்தது.  ஆரியக் கலப் பால்  கி.பி.8ஆம் நூற்றாண்டுக்குள்ளாக வடநாட்டில் தமிழ் படிப்படியே திரிந்து  வடதிராவிட மொழிகள் ஆயின. கி.பி.9 வாக்கில்  தெலுங்கும் 10 நூ. வாக்கில் கன்னடமும் 12 நூ. வாக்கில் மலையாள மும் தமிழில் இருந்து பிரிந்து தனித்து இயங்கத் தொடங்கின. 

சேர  வேந்தர்  குடி அற்றபின், மலையாள நாட்டில் தலைமையாகவிருக்கும் நாயர் வகுப்பைச் சேர்ந்த மன்னரும் மக்களும் ஆரியத்திற்கு முற்றும் அடிமைப்பட்டுப்  போனதி னால், சேரநாட்டுச் செந்தமிழ் முன்பு கொடுந்தமிழாக மாறிப் பின்பு தெலுங்கு கன்னடம் முதலிய திரவிட மொழி களினுங் கேடாகச் சிதைந்து, மணிப் பிரவாள  மொழியாக  வழங்கி வருகின்றது (செந்தமிழ் சிறப்பு  பக்கம் 99) என்று 

பக்கம் 2

5-03-2011 ஞாயிறுமலர் பக்கம்2

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers