Thursday, August 27, 2020

திரு.விக. சீர்திருத்தங்களின் தாய்

”தமிழ் இந்து” இணைய இதழில்


 27.08.2020 திருவிக பிறந்தநாளன்று வெளிவந்த கட்டுரை


 -முனைவர் பா.இறையரசன்


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் அறிஞர்கள் தமிழ்ப்   புலவர்கள்;இதழாளர்கள் வரிசையில்  குறிக்கத் தக்கவர்கள் மறைமலை அடிகள் திருவிக பாரதியார்பாரதிதாசன் முதலியோர் ஆவர். மறைமலை அடிகளும்  திருவிக வும் சங்கத் தமிழ்நடையை எளிய தமிழாக்கி பேச்சிலும்  எழுத்திலும் கவிதையிலும் உரைநடையிலும்மேடைப் பேச்சிலும் அரசியலிலும் சமயத்துறையிலும் இதழியல் துறையிலும் உருவாக்கிப்

புதுமை  தந்தவர் மறைமலை அடிகளாரின் மாணவர் என்று கூறத்தக்க திருவிக ஆவார். 

              அடிகளாரின் நல்ல தமிழையும் சங்கத் தமிழையும் சமயப் பொதுமையையும்பின்பற்றிய அடிகளார் அரசியலுக்கு வரவில்லை;  ஆனால் திருவிக அவர்கள் இந்தியவிடுதலைப் போராட்ட அரசியலில் காந்திய நெறியில் நின்றவர்;  கதர் ஆடையையும்காங்கிரஸ் கட்சியையும் ஆதரித்தவர். ஆனாலும் புரட்சி மிகுந்த சீர்திருத்தக் கருத்துகளைஎழுத்திலும் பேச்சிலும்  தென்றல் என இனிமையாகப் பரப்பியவர்.  அன்பானஇனிமையான மெல்லிய பெண்மை சார்ந்த குரல், தூய வெண்ணிறக் கதர் ஆடை,சான்றாண்மை மிக்க  துணிவும் உறுதியும்  கொண்ட  அமைதியான  தோற்றம். ஆனால்அழுத்தமான மிகக் கடுமையான கொள்கைப் பிடிப்புள்ள  சரியான  கருத்துகளைச்

வரையறையோடு வற்புறுத்தி கூறக்கூடியவர்; தம்முடைய கருத்துகளைச் சிறிதும்  விட்டுக்கொடுக்காதவர்; மாற்றார் உடைய கருத்துகளை மாற்றிவிடக்கூடிய புரட்சித்தன்மைவாய்ந்தவர்: பழமைவாத மூட பழக்கவழக்கங்களைச் சார்ந்த தவறுகளை  நீக்கி,  உயர்ந்த

பண்புகள் கொள்கைகள் உடையவர்களாக  மாற்றக்கூடிய புரட்சியாளர் திருவிக ஆவார் 

                 பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், தொழிலாளர் நலம், உழைப்பாளர்ஊதியம் தமிழ் மொழி மேன்மை தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ்நாட்டின் தமிழர்களின்வாழ்வியல் முன்னேற்றம்,  தமிழ்க் கலைகள் பாதுகாப்பு முதலிய பல துறைகளில்பலமுனைகளில் பங்காற்றியவர் திருவிக ஆவார். தமிழ்த் தென்றல், இராயப் பேட்டை

முனிவர், சாது  என்ற பட்டங்களால்  பாராட்டப் பெற்றவர்;  என்றாலும் புரட்சித்தென்றலாகத் தமிழ் நிலத்தில் உலவியவர். ஆசியாவிலேயே முதன் முதல் தொழிற்சங்கம்ஏற்படுத்தியவர் திருவிக ஆவார். முதன்முதலாகத்  தொழிலாளர்களுக்காக அவர்கள் தந்த பங்குத்தொகை நிதியிலே “நவ சக்தி” என  இதழ் தொடங்கியவர். தென்றலெனஆன்மிகத்தில் இருந்தாலும் தொழிலாளர் நலனுக்கக்காகவும்  இந்திய விடுதலைக்காகவும்மென்மையான அதே நேரத்தில் சீறிப் பாயும் இதழியல் நடையைப் புரட்சிப் புயலாக வீசியவர் திரு விக. காந்தியடிகள்  மார்க்ஸ் ஆகிய இருவர் கருத்துகளிலும் பொதுமைகண்ட புரட்சித் தென்றல் திருவிக!     ஆத்திகராகிய  மறை மலை அடிகளாருடனும்நாத்திகராகிய   பெரியாருடனும் நட்பு பாராடியதுடன், நாத்திகம் என்பது தூய்மையானஅன்பு என்று புரட்சி முழக்கம் செய்து பொதுமையாகிய சித்தர் வழியைப்பரப்பினார். இந்திய தேசியம் பேசினாலும் வடவரின் ஏமாற்று வித்தைகளை எதிர்த்தார்;

திராவிட நாடு திராவிடருக்கே என்றும் தமிழ் நாடு தமிழருக்கே என்று புரட்சி முழக்கம்எழுப்பியவர்தான் தமிழ்த்தென்றல்!

             கடவுளின் பெயரால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்ட காலத்தில் வள்ளலாரும்வேதநாயகரும்  மறைமலை அடிகளும்  காட்டிய  சமயப் பொதுமை (சமரசசன்மார்க்கம்)  என்ற  வழியில் பொதுமை அருள்வேட்டல் பாடியவர் திருவி க. கொடுக்கும்காசுக்கு ஏற்ப கடவுளுக்கு அருச்சனை, வரும் பக்தர்களுக்கு மரியாதை என்பவற்றைஎதிர்க்கிறார் ; உடல் வலிமை மிக்க சாமியார்களுக்குப் பிச்சை போடுவது தவறு என்றும்புரட்சிக் குரல் எழுப்புகிறார் தமிழ்த்தென்றல் திருவிகலியாணசுந்தரனார். கோயில் என்பதுசுரண்டுவோரின் ஏமாற்றுவோரின் கூடாரமாக இருக்கக் கூடாது என்று புரட்சிபேசியவர்தான் திருவிக.  

             இவ்வுலகம் பெண் ஆண் வடிவாய் இலங்குகிறது; இயற்கைப் பொருள்களும்பறவை விலங்குகளும் மனிதர்களும் மட்டுமல்லாமல் கடவுளும் கூட பெண் ஆண்வடிவாய் பொலிகின்றனர்; எனவே,   பெண்ணு.ம் ஆணும் கூடி வாழும் வாழ்வே வாழ்வுஎன்று அடிப்படையான ஒரு கருத்தை அழுத்தமாக மனத்தில் பதிய வைக்கிறார் திருவிக. 

அதற்கு மேல்தான் தென்றலாய் நுழைந்து புயலாக ஓர் கருத்தைச் சிந்திக்க வைக்கிறார்.பெண் ஆண் இரண்டனுள் உயர்வு தாழ்வு இல்லை என்றாலும் பெண்ணிற்கு முதன்மைவழங்கவேண்டும் என்பது அறிவும் அன்பும் வாய்ந்தோர் கருத்து என்று முதன்மைதருகிறார்.  பெண்மை என்பது அடக்கம் பொறுமை தியாகம் இரக்கம் அழகு தொண்டுமுதலியன அமைந்த ஒன்று.  அடக்கம் பொறுமை தியாகம் இரக்கம் முதலியவற்றால்இன்பம் விளையும்.  அடங்காமை பொறாமை தன்னலம் வன்முறை ஆகியவற்றால்துன்பம் ஏற்படும்.  ஆகவே பெண்மை என்பது இன்ப நிலை! இன்பமும் மகிழ்ச்சியும்உலகில் ஏற்படுத்தவல்ல அழகும் ஆற்றலும்  பெண்களின் பண்பு;     எனவே பெண்கள்தெய்வம் என்று போற்றப்படுகிறார்கள்.  ஆண்களின் குணம் வீரம்  சினம்சீற்றம்,  முரட்டுத்தன்மை அவா   முதலியன. எனவே ஆண்கள் பெண்களின் நல்லகுணங்களைப் பெற்று வாழ வேண்டும் என்பது திருவிக. கூறும் புதுமையும் புரட்சியும்வாய்ந்த கருத்தாகும்.

                பெண்களுக்குக் கல்வியோ வீரமோ தேவையில்லை என்று அடிமையாக்கிவைத்திருப்பது மனித இனத்தில்தான் உள்ளது; விலங்குகளோ பறவைகளோ பெண்ணினத்தைத்  தாழ்வாகக் கருதவில்லை. நம் மக்களும் வேத காலத்திலும் சங்ககாலத்திலும் ஆழ்வார் நாயன்மார்களின் காலத்திலும்  பெண்களுக்கு மதிப்புஅளித்தார்கள்.  பெண்களை மதிப்புடன் நடத்தி அவர்கள்  கல்வி பெறவும் அறிவாற்றல்பெறவும் வழிவகை செய்ய வேண்டும்.  பெண் கல்வி மறுக்கப்பட்டுப் பெண்களுக்குச் சமஉரிமை இல்லை என்று இருந்த காலத்தில் காந்தியடிகளும் பாரதியாரும் வற்புறுத்தியபெண் கல்வியை திருவிக அவர்களும் வற்புறுத்திப் பேசியதுடன் பரப்பியும் வந்தார்.

ஆண் பெண் சம உரிமை என்பதை வற்புறுத்தி பேசியவர் திருவிக  ஆவார்.  மேலும் பெண்களுக்கு இழைக்கப்படும் தீமைகளை  எதிர்த்துக்  குரல் கொடுத்தவர் தென்றலாக விளங்கிய திருவிக ஆவார்.   இளமை மணம், விதவை  என்று அடிமைப்படுத்தி வைத்தல், பல பெண்களை ஒருவன் மணத்தல், மறு திருமணம் செய்து கொள்ளப் பெண்ணுக்கு மட்டும்உரிமை இல்லை;  தவறான நடத்தைக்குப்  பெண்ணுக்குமட்டும் தண்டனை,ஆனால் ஆணுக்கு தண்டனை இல்லை;  ஆடவன்  எச்சிலையில்  உண்ணுமாறு பெண்க

ளை வற்புறுத்தல் என்று சொல்லக்கூடியவற்றை எதிர்த்துப் புரட்சி குரல் எழுப்பினார்.  பெண்களின் கூடாஒழுக்கம் தவறுதான்; ஆனால் ஏன் ஆண்களின் தவறுக்கு தண்டனை இல்லை?  அதனால்தானே ஒரு பாதியாய் உள்ள பெண்களுக்கும் சிறுமை ஏற்படுகிறதுஎன்று தட்டிக் கேட்டார். ஆண்கள் ஒழுக்கத்தோடுஇருந்தால் வரைவின்மகளிர் விலைமகளிர் என்ற தோற்றத்திற்கு இடம் எது என்று வினா தொடுக்கிறார். ”மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று பாரதியாரின் புரட்சி முழக்கத்தைமுழங்குகிறார் திருவிக.  

          பெண் குழந்தைகளை வளர்ப்பது பற்றியும் திருவிக எழுதியுள்ளார். இளமையிலேயே கல்வி நல்க வேண்டும்; இளம் பெண்கள் தீய எண்ணங்களை ஊட்டக்கூடிய  களி கதைகளை போலிப் புதினங்களைநாடகங்களை படிக்க பார்க்கக் கூடாது; பெண் குழந்தைகளுக்கு உடற் கூற்று நூல்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதும் அவரது புரட்சியான கருத்தாகும். கடவுள் சமயம் ஆகியன பற்றியும்பெண்கள் அறிய

 வேண்டும்தம் உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ளவும் உடற்பயிற்சி செய்யவும் நல் உணவு சாப்பிடவும் கற்றுத்தர வேண்டும். தூய நல்ல அழகான உடைகளை அணிய வேண்டுமே தவிர,  நல்லஆண்கள் மனத்தையும் கெடுக்கக்கூடிய கவர்ச்சியான உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளை அணியக்கூடாது;  தலைமுடியை அலங்கோலமாகக் குறைத்துக்கொள்வது சில பெண்கள் செய்கிற தவறு ஆகும்:இயற்கையாக இருப்பதே அழகு. இயற்கை அழகுதான் ஆண்டவனின் அருள் ஒளி போன்றது என்பன திருவிக வின் கருத்துகள்.

          பெண்ணும் ஆணும் கூடி வாழும் திருமண வாழ்க்கையை  சம்சாரசாகரம் குடும்ப இருட்டு என்றும்,  பெண்களை மாயப் பிசாசு என்றெல்லாம் இழிவுபடுத்தி பெண்களை ஒதுக்கி விட்டு இறைவனைப்பற்றி எப்போதும் எண்ணுகிற துறவு தான் உயர்ந்தது;அதுவே வீடு மோட்சம் தரும் என்றும்  சொல்லப்பட்ட மதக் கருத்துக்களை மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்தவர் திரு விக.  இயற்கை அறம் என்பதேஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது;  இதனைத்தான் நம்முடைய ஆழ்வார்களும் நாயன்மார்களும் திருமூலர் முதலிய சித்தர்களும் திருவள்ளுவரும் கூறியுள்ளனர்.

இல்லற வாழ்க்கை என்பது வள்ளுவர்காட்டிய வழி. நீத்தார் பெருமை துறவு என்ற அதிகாரங்களில் பெண்ணை துறக்குமாறு திருவள்ளுவரோ  மற்ற பெரியோர்களோ கூறவில்லை.

 ”இல்லறமல்லது நல்லறம் அன்று” என்றார் அவ்வையார்;  “அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை” என்றார் திருவள்ளுவர்.  பெண்ணை வெறுப்பது துறவு இல்லை; தீமை பொறாமைஅழுக்காறு சினம் பண வெறி  பதவி வெறி இனி காமம் முதலிய தீமைகளை வெறுத்து ஒதுக்கிநீக்கிவிடுவதுதான் துறவு ஆகும்என்பது திருவிக காட்டும் புதுமை நெறி ஆகும்.

          இளமை ம ண மும்  பொருந்தா மணமும் இறுதியாக மிக மிகுதியாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நடைபெற்றன.  அவற்றை எதிர்த்துபொருந்திய வயதில் ஒத்த குண நலன் உடைய ஆண் பெண்ணை திருமணம் செய்து வைத்தால் தான் நல்லது குழந்தைப் பருவத்தில்திருமணம் செய்து வைப்பதால்தான் கைம்பெண்கள் (விதவைகள்)அதிகமாகிறார்கள்.

பதியிலார் தேவரடியார் என்று விலைமகளிர் தோன்றவும்,  ஓர் ஆண்மகன் பலரை மணக்கவும்,  தவறான நடத்தை மிகவும் இதுவே காரணமாகிறது. கைம்மை என்பது ஆணுக்கும்பொதுவானது. ஆனால் சிறு குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்து,குழந்தை  மணத்தால் கணவனை இழந்த கைம்பெண்களை மொட்டை அடித்துமூலையில் உட்கார வைப்பது தவறு; என்ற புரட்சிக் குரல்எழுப்பியவர் திருவிக.  


பெண்மை என்பது தாய்மையும் தூய்மையும் கொண்ட இறைமை ஆகும்,  பெண்களைக் கட்டுப்படுத்துதல் அடிமைப்படுத்துதல் கொடுமையாக  நடத்துதல்  அநாகரிகம்.பெண்மையைப்  போற்றுவதே நாகரிகம்;  தெய்வம்  எங்கே என்றுதேடி ஓடுகிறார்கள்.  

பெண்மை என்பதே  தெய்வம்  என்று புரட்சிக் குரல் எழுப்புகிறார் புரட்சித் தென்றல்திருவிக.  அவர் வழியைப்பின்பற்றிப்  பெண்மையைபோற்றுவோம் தாய் நாட்டையும் தாய் மொழியையும் போற்றுகிற பண்புடைய நாம் பெண்மையை தாய்மையைப் போற்றுவோம்! பெண்கல்வி, கலப்புமணம், கைம்பெண்மணம் முதலியவற்றைப் பேசியதுடன், “தமிழ் நாடு தமிழருக்கே!”

என்று முழங்கி, தமிழருக்கு என்பது தமிழ்க் கலைகளுக்கு என்று கூறியதுடன், 

சீர்திருத்தத்தின் தாய் நான் என்ற திருவிக., புரட்சித்தென்றல் ஆவார். 


**********************************************

Thursday, March 12, 2020

சீனி மொழி படியுங்கள்!

( தின செய்தி நாளிதழில் 10.03.2020 அன்று வெளிவந்த கட்டுரை.)

                                                            உலகில் மூத்த மொழிகள் என்றும் செம்மொழிகள் என்றும் கூறப்படும் ஆறு தலைமையான மொழிகளில் இன்றும் வாழும் பேசப்படும் சிறப்புடைய மொழிகள் தமிழும் சீனமும் மட்டுமே . ஆயினும் பழைய சீன மொழி இன்று இல்லை; மாண்டரின் என்ற திரிபுச் சீன மொழியே உள்ளது, அதுவும் வட, தென், கிழக்கு மேற்குச் சீன மொழிகளாக வட்டாரவழக்கு மொழிகளாக உள்ளது என்று மொழியியலாளர்கள் கூறுகின்றனர். பேச்சு வழக்கற்ற சமற்கிருதத்தின் வழிமொழியாகிய இந்தி உலகில் பெரும்பான்மை மொழி எனப்பட்டாலும் அதற்கும் இதே நிலைதான். சோனியா பேசும் இந்தி உத்தரகாண்டில் புரியாது, சு சாமி பேசும் இந்தி சரோஜ் நாராயண் சாமிக்குப் புரியாது. தமிழ் மட்டுமே தொல்காப்பியர்,திருவள்ளுவர், கபிலர் எழுதியதும் பேசியதும் பாரதியும் தாசனும் வைரமுத்தும் பேசிய எழுதிய ஒலிகள் அப்படியே உள்ளன. கிரேக்க நாடகங்களில் உள்ள தமிழும், சீன உரோம் நாட்டுக் கல்வெட்டு எழுத்துகளில் உள்ள தமிழும் சிந்துவெளி, மயிலாடுதுறை செம்பியன் கண்டியூர்,மாங்குளம் தமிழி எழுத்துத் தமிழும், மெச்சிகன், மாயன் தமிழும் உலகம் முழுதும் ஒன்றாகவே உள்ளன.

             கிரேக்கம், உரோம், (எகிபது, அரபு நாடுகள்) முதலிய மேற்கத்திய நாடுகளுடன் மட்டுமல்லாமல் கிழக்கே சீனம், சாவகம், சுமத்திரா முதலிய நாடுகளுடனும் தமிழ்நாட்டுக்குள்ள தொடர்பு பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ளது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் வெளி நாட்டாரை யவனர் என்றும் சோனகர் என்றும் குறிப்பிடுகின்றன.   
             
                   பல்லவர் காலத்தில் - கிமு 5, 6, 7 ஆம் நூற்றாண்டுகளிலும் பின்னும்  இந்த உறவு வலிமை அடைந்து தமிழ்நாட்டுக்கும் குறிப்பாகக் காஞ்சிபுரத்திற்கும் சீன நாட்டுக்கும் வணிகத் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் நிகழ்ந்துள்ளன. இதற்கு இணைப்பாகப் புத்த மதம் விளங்கியுள்ளது.  காஞ்சிபுரம், நாளந்தா ஆகிய இடங்களில்விளங்கிய மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள், புத்த மதம் பற்றிய சிந்தனைகளை விரிவாக ஆய்வு செய்து பரப்பி வந்தன.  இந்திய நாட்டின் தேசியக் கொடியில் அசோக சக்கரம் உள்ளது;  அசோகச் சக்கரத்தின் ஆரக் கால்கள் போல அசோகர் அனுப்பிய புத்தமதத் தூதர்கள் எங்கும் பரவினார்கள்.  தெற்கே  இலங்கையிலும் கிழக்கே சீனம் கொரியா, சாவகம் (ஜாவா), சிங்கபுரம் (சிங்கப்பூர்), மலையகம் (மலாயா, மலேசியா, கடாரம்/ கெடா), கம்போடியா, தாய்லாந்து, வியத்நாம், சுமத்திரா, பாலி, சுமத்திரா முதலிய நாடுகள்   வரை புத்த மதம் பரவியது.
             
                   தமிழ்நாட்டில் இருந்து மேற்கே கிரேக்கம் அரபு நாடுகள்,  கிழக்கே தென்கிழக்காசிய நாடுகள்  ஆகியவற்றுக்கும் தமிழக வணிகர்கள் கப்பலில் சென்று வந்துள்ளனர்.  அத்தகைய வணிகக் கப்பல் ஒன்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிமேகலை என்ற 18 வயதுப் பெண் கிபி 2 ஆம் நூற்றாண்டு அளவில் மணிபல்லவத் தீவு வரை  சென்று புத்த மத அறக் கருத்துகளைப் பரப்பி உள்ளார்.  பல்லவத் தலைநகராகிய காஞ்சி முதல் கம்போடியா வரையுள்ள நாடுகளில் கண்ணகியும் மணிமேகலையும் தெய்வமாகப் போற்றப்படுகின்றனர்..            
                   
                     சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ சமணம் ஏற்றுத் துறவியானது போலப்,  புத்தமதத்தை ஏற்றுத் துறவியாக மாறிய மணிமேகலை  மணிபல்லவம், சாவகம், கம்போடியா, சுமத்திரா முதலிய    கீழை ஆசிய நாடுகளுக்குக் கப்பலில் சென்றது போலப்,   கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டு அளவில் போதி தருமன் என்ற   பல்லவ இளவரசர் காஞ்சியிலிருந்து சீனம் சென்றுள்ளார். இவர் புத்த மதக் கருத்துகளையும் சித்த மருத்துவத்தையும் வர்மம் சார்ந்த  களரி என்ற போர் முறையையும் பரப்பிப் புகழ் பெற்று  இன்றும் வணங்கப்படுகிறார்.  போகர் என்ற சித்தர் பல ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னாலேயே சீனத்திற்குச்  சென்று சித்த மதக் கருத்துகளைப் பரப்பி உள்ளார்.
                      
                  ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னால் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் தமிழ் நாட்டுக்கும் சீன நாட்டுக்கு மிக நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இரண்டு நாட்டு அரசர்களும் தாங்கள் அரசவையில் தூதர்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.  வணிக உறவும் சிறப்பாக இருந்துள்ளது.
   
                தமிழ்நாட்டு அரசர்களும் வணிகர்களும் இந்து மதக் கோயில்களை கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கட்டியுள்ளனர்.  பேரரசன் முதலாம் இராசராசன் தன் அரசவையில்  இருந்து 12 அரசுத் தூதர்களைச் சீன அரசவைக்கு அனுப்பியுள்ளான்; இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரன் 30 அரசுத் தூதர்களை அனுப்பியுள்ளான்.  சீன நாட்டிலிருந்து சீன அரசின் சார்பாக அரசுத் தூதர்கள் சோழ அரசர்களின் அவையிலும் இருந்தார்கள். 
                
                 தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தின் ஒரு மாடத்தில் உள்ள வெளிநாட்டார் சிற்பத்தை  இராசராசனின் நண்பர் ஆகிய சீன அரசரின் அல்லது அவன்  அரசவையில் இருந்த சீன தூதரின் சிற்பமும் அவர் மனைவியின் சிற்பமும் ஆகும் என்று கருதுகின்றனர்.   தஞ்சாவூர்ப் பெரிய கோயிலில் புத்தரின் புடைப்புச் சிற்பங்கள் மூன்று உள்ளன.   
                 
                 இராசராசன் கடாரத்து அரசன்  விசயோத்துங்க வர்மனின்  தாய் வேண்டுகோளுக்கு இணங்க நாகப்பட்டினத்தில் புத்தருக்குக் கோயில் (விகாரம்) அமைத்து மானியமும் அளித்துள்ளான்.  தஞ்சை மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புத்த துறவிகள் வாழ்ந்துள்ளனர்; புத்தர் சிலைகள் நூற்றுக்கணக்கில் கிடைத்துள்ளன.
              
              தமிழ் நாட்டிலிருந்து  திசையாயிரத்து ஐநூற்றுவர் / எண்ணூற்றுவர், நானாதேசிகள்  முதலிய வணிக குழுக்கள் சீனா நாட்டுக்கும்  பிற கிழக்காசிய நாடுகளுக்கும் சென்றுள்ளன. சீனா தாய்லாந்து கம்போடியா இந்தோனேசியா முதலிய நாடுகளில் இவர்கள் கட்டிய கோயில்கள் உள்ளன; தமிழ்க் கல்வெட்டுகளும் உள்ளன. சீன நாட்டில் கிடைத்த மணி ஒன்றில் தமிழ் எழுத்துகள் உள்ளன.                 

           தமிழ்நாட்டைப் போலவே சீன நாட்டிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் பண்பாடும் பழக்கவழக்கங்களும் ஒத்து உள்ளன.  சல்லிக்கட்டு / மஞ்சுவிரட்டு, கோழிச்சண்டை, தாயம் விளையாடுதல், மற்போர், களரி, பொங்கல் வைத்தல் முதலிய பண்பாட்டுக் கூறுகள் தமிழ்நாட்டைப் போலவே சீன நாட்டிலும் தாய்லாந்து, கொரியா,  கம்போடியா, பாலி, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் உள்ளன. 

              மாமல்லை,  கடல்மல்லை என்று போற்றப்படும் மாமல்லபுரத்தில் இருந்தும் பூம்புகார் முசிறி தொண்டி முதலிய துறைமுகங்களில் இருந்தும் சீனா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகத்  தமிழ்நாட்டியிருந்து கப்பல்கள் (வங்கம் : கப்பல்) கீழை மேலை நாடுகளுக்குச் சென்றுள்ளன. அதனால்தான் தென் கிழக்குக் கடல் பகுதி "சோழ ஏரி" என்றும், "வங்கக்கடல்" (வங்காள விரிகுடா) என்றும் "சோழ மண்டலக் கடற்கரை  (ஆங்கிலத்தில் : Coromandel Shore/ Coromandel Coast))" என்றும், கடல்வழியில் இளைப்பாறிய இடம்  "வங்காளம் (பெங்கால்)" என்றும் பெயர் பெற்றன.

             காஞ்சிபுரம் என்னும் காஞ்சி புத்த மதப் பல்கலைக்கழகமாக விளங்கியது என்பதோடு நெசவிலும் புகழ்பெற்று விளங்கியது.  காஞ்சி என்பதற்குத்  துணி, உடை, பொன் என்றெல்லாம் பொருள் உண்டு.  காஞ்சிப் பட்டு  உலகப் புகழ் பெற்றது சீன வணிகர்களால்தான்.     காஞ்சிபுரத்தின் தலைசிறந்த பட்டு நெசவாளர்கள் இரண்டு பேர் சீனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். காஞ்சிப் பட்டு சீனம் சென்றது போல,  சீனத்துப் பட்டும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது. சீனத்துப் பட்டு, சீனத்துப் பொன், சீனத்து மதுக் கிண்ணம், கொள்கலன் (ஜார்) -முதலியன தமிழ்நாட்டில் புகழ் பெற்று விளங்கின. சீனத்து நாட்டிலிருந்து வந்தவை  சீனி வெடி,  சீனப்பட்டு, சீனத்துக்கிளி என்றும் வழங்கின. தொடக்கத்தில்   சீனத்து நாட்டிலிருந்து வந்ததால்  கரும்புச்சர்க்கரை சீனி என்று பெயர் பெற்று இப்போது வெண்ணிறச் சர்க்கரைக்குரிய பொதுப்பெயராக  தமிழ்நாட்டில் வழங்குகின்றது. மதுரையில் சங்கக் காலத்தில் சீனர் குடியிருப்பு இருந்துள்ளது; அண்மையில் சீன நாணயங்கள் மதுரையிலும் சார்ந்த பகுதிகளிலும் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. 
             
  சீனப் பயணிகள் யுவான் சுவாங் , பாகியான், முதலியோர் காஞ்சிக்கும் மதுரைக்கும் வந்துள்ளனர். தமிழ்நாட்டு மன்னர்களைப் பற்றியும் மக்களைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளனர்.  அதைப்போல சீன நாட்டில் இப்பொழுது கிடைக்கின்ற மிகத் தொன்மையான வணிகர்களின் / வரலாற்று ஆசிரியர்களின் நூல்கள் குறிப்புகள் முதலியவற்றில் தமிழக மன்னர்களைப் பற்றியும் வணிகம் பற்றியும் குறிப்புகள் உள்ளன. தமிழக வரலாற்று ஆய்வாளர்களும் மொழியியல் வல்லுநர்களும் சீன மொழி பயின்று  சீன வரலாற்று அறிஞர்கள் / அல்லது சீனப் பயணிகள் சீன (சீனி) மொழியில் எழுதி வைத்துள்ள ஆவணங்களைத் தமிழில் மொழிபெயர்த்தால் தமிழர் வரலாற்றின் மிகத் தொன்மையும் பழமையும் சிறப்பும் பற்றிய மிகப்பெரிய வரலாற்று உண்மைகளை வெளிக் கொணர முடியும்.
  **********        ************       ***********    

                                                      - முனைவர் பா. இறையரசன்.


                                                                                   
                                                                                      ( நன்றி:   தின செய்தி நாளிதழ் 10.03.2020 )

Thursday, July 7, 2016

சிந்து வெளியில் நுழைந்த குதிரைத் தின்னிகள்!
                                                                   
                                                                              …   முனைவர் பா.இறையரசன்
           
                        இந்தியா என்றாலே வேதமும் சமற்கிருதமும் என்று மேலை நாட்டார் எண்ணியிருந்த காலத்தில், தமிழும் அதனைச் சேர்ந்த மொழிகளும் ஆகிய திராவிட மொழிக்குடும்பம் என்ற ஒன்று உள்ளதை 1856-இல் இராபர்ட் கால்டுவெல் நிறுவி நூல் வெளியிட்டார்மிகத் தொன்மையான உலக நாகரிகங்கள் என எகிப்து கிரேக்க உரோமானிய நாகரிகங்கள் பேசப்பட்ட காலத்தில் சிந்துவெளி நாகரிகம் என ஒன்று உள்ளது என 1924-இல் சர் ஜான் மார்ஷல் நிறுவினார்மொகன்சதோரோ, ஆரப்பா, காளிபங்கன், லோத்தால் முதலிய இடங்களில் நடந்த அகழ்வாய்வுகளின் அடிப்படையில் அவர் எழுதிய சிந்துவெளி நாகரிகம் பற்றிய ஆய்வறிக்கைகள் உலக வரலாற்று ஆய்வறிஞர்களால் ஏற்கப்பெற்றது.
சர் ஜான் மார்ஷல்                         

                         ஆனாலும் ஆரியச் சார்பாளர்கள் அதனை ஏற்க விரும்பவில்லை. வேதத்தையும் இந்து மதத்தையும் சமற்கிருதத்தையும் இந்தியையும்  இந்தியாவின்  அடையாளங்கள் என்று கூறி வருகின்றனர். அந்த வகையில் குமரிக்கண்டம் என்பது தமிழ் உலகத் தாய்மொழி என்பதும் ஆரியச் சிந்தனையாளர்களால் மறுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சிந்து வெளி நாகரிகம்  தமிழர் நாகரிகமில்லை, சிந்துவெளி எழுத்துகள் தமிழ் (திராவிட) மொழி எழுத்துகள் அல்ல என மறுத்து வருகின்றனர்.

                        ஆரியக் கருத்துகளையும் வல்லாதிக்கம் (நாசிசம்) பரப்பிவரும் சிலரும் பிராமண / வருணாசிரம மேலாதிக்க / இந்துத்துவக் கருத்தினரும் சிந்துவெளி நாகரிகம் பற்றி ஐயம் எழுப்பி வருவதுடன், சிந்துவெளி எழுத்துகள் தமிழல்ல என்றும் கூறி வருகின்றனர்; மேலும் சிந்து வெளி நாகரிகத்தையே திரித்து வேத நாகரிகம், சரஸ்வதி நாகரிகம் என்றும் ஆரியருடையது என்றும் சிந்துவெளி எழுத்துகள் இந்தோ ஐரோப்பிய மொழியைச் சேர்ந்தவை என்றும் பரப்பி வருகின்றனர். மொழி சமயம் பண்பாடு ஆகியவை இல்லாத காட்டு விலங்காண்டிக் கூட்டமாக நடு ஆசியாவிலிருந்து புறப்பட்டுக்  கைபர் போலன் கணவாய் வழியாக நம் நாட்டுக்குள் நுழைந்த  ஆரியரால், சிந்துவெளியில் விளங்கிய தமிழர்களின் உயரிய நகர நாகரிகம் சிதைந்தது.

                        தமிழர் நாகரிகத்தை 4000 ஆண்டுகள் முன்னர் சிந்து கங்கைக் கரையில் சிதைத்த ஆரியர், இன்றைக்கும் தமிழர் நாகரிகத்தையும் மொழியையும் இனத்தையும் சிதைக்க முயல்கின்றனர். இந்தியாவிற்குள் 16 ஆம் நூற்றாண்டு அளவில் மேலை நாட்டார் வந்தபொழுது மேல்தட்டு மக்களாகவும் படித்தவர்களாகவும் பிராமணர்கள் மட்டுமே விளங்கினர்; அவர்கள் வேதம் படிக்கவில்லை என்றாலும் சமற்கிருதம் பேசுவதற்கு உரிய மொழி இல்லை என்றாலும் அவற்றையும் தம்மையும்  உயர்வாகப் பரப்பி வந்தனர். எனவே, இந்தியா என்றதுமே வேதமும் சமற்கிருதமும் மட்டுமே என்று அயல்நாட்டார் கருதினர். இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது வெள்ளையரையும் கிறித்துவ மதத்தையும் முகமதிய மதத்தையும் எதிர்க்க வேதத்தையும் சமற்கிருத்தையும் முதன்மைப் படுத்தினர். ஆங்கிலேயரையும் ஆங்கிலத்தையும் எதிர்க்க சமற்கிருதம் பேச்சு மொழியாக இல்லாததால் இந்தியை உருவாக்கி வளர்த்துக் கொண்டனர்.  

                        தமிழ் ஓர் செம்மொழி என்பதையும் மறுத்து  இந்தியாவின் ஒரே செம்மொழி சமற்கிருதம் என்றும் அதிலிருந்துதான் இந்தியாவில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் தோன்றின என்று கூறினர். மேலும் செம்மொழி ஆகிய தகுதி உடைய சமற்கிருதம் கட்டாயப்பாடம், தமிழ் உள்ளிட்ட உள்நாட்டு மொழிகள் கட்டயமில்லை என்று கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் விதிகள் செய்தனர். இதனால் 1911 வாக்கில் பல தமிழாசிரியர்கள் வேலை இழந்தனர்; மறைமலை அடிகள் இதனால் ஆசிரியப் பணி இழந்தார். ஆயினும் மறைமலை அடிகளின் இயக்கமும் பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச் சங்கமும் ஆங்கிலக் கல்வியும் மேலைநாட்டார் தமிழ்த் தொண்டும் தமிழின் பெருமையை உலகறியச் செய்துள்ளன.

                        சிந்து வெளி அகழ்வாய்வில் கிடைத்த பானை ஓடுகளிலும் செப்புத் தகடுகளிலும் கிடைத்த எழுத்துகள் திராவிட (தமிழ்) மொழி எழுத்துகள் என்று நிறுவப்பட்டன. தென்னிந்தியாவில் தமிழைத் தலைமையாகக் கொண்ட திராவிட மொழிகளும் வட இந்தியாவிலும் பாக்கித்தானத்தில் பலுச்சித்தான் வரையும் சிந்து வெளி அகழ்வாய்வுகளும்   திருந்தா திராவிட மொழிகளும் உள்ளமை இதனை உறுதி செய்தது. சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிடர் (தென்னிந்தியர்/ தமிழர்) நாகரிகம் என்றும் அக்காலத்தில் இந்தியா முழுதும் விளங்கிய மொழி திராவிடம் (தமிழ்) என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறினர்.
                       
                                      தென்னிந்தியா மட்டுமல்லாது பலுச்சித்தான் வரை பரவிய திராவிட மொழிக்குடும்பத்தின் தலைமை மொழி தமிழ் என்பதும், ஆரியரின் சமற்கிருத்திற்கு முந்தைய மொழி தமிழ் என்பதும் ஆரிய வேத நாகரிகத்திற்கு முந்தையது தமிழர் நாகரிகம் என்பதும் கால்டுவெலாரின் திராவிட ஒப்பிலக்கண நூலாலும் சர் ஜான் மார்ஷலின் சிந்து வெளி அகழ்வாய்வுகளாலும் உறுதி செய்யப்பட்ட நிலையில் குமரிக்கண்டம் பற்றிய அறிவியல் செய்திகள் வெளிவந்தன.

                        குமரி முனையில் (மலையில்) தோன்றிய தமிழர் நாகரிகம் வடக்கே கங்கை சிந்து இமயம் வரை பரவியது மட்டுமல்லாமல், கி.மு. 6000- இல் பலுச்சித்தான் (பாக்கித்தான்) வரையும் பரவியது. மேலும் பரவி சுமேரிய (கி.மு. 4000), சால்டிய, எகிப்திய  (கி.மு. 2800), கிரேக்க உரோமானிய (கி.மு. 800)  நாகரிகங்களுக்கு வழிகாட்டியது. சிந்துவெளி நாகரிக காலத்தில் (கி.மு.2500 – கிமு 1200) விளங்கிய தமிழ் எழுத்துகளும் மொழிக் கூறுகளும் அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களும் சுமேரிய உரோமானிய நாகரிக அகழ்வாய்வுகளில் கிடைத்த பொருள்களுடன் ஒத்துள்ளன. இதனை விரிவாக வடுவூர் துரைசாமி ஐயங்கார் தம் ஆங்கில நூலில் பதிந்துள்ளார்.

                        சிந்துவெளி அகழ்வாய்வுப் பொருள்கள் பலுச்சித்தான், பாக்கித்தான், ஈரான் முதலிய நாடுகளிலும் கிடைத்துள்ளன. அவை இந்தியாவில் மட்டுமல்லாமல் பாக்கித்தான், பலுச்சித்தான், ஈரான், ஆகிய நாடுகளில் அகழ்விடங்களில் உள்ள அருங்காட்சியகங்களிலும், வெளியே கொண்டு செல்லப்பட்டு பாரிசு போஸ்டன் அருங்காட்சியகங்களிலும் உள்ளன. சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது என்பதை நிறுவும் வண்ணம் சிந்து வெளி எழுத்துகள் தமிழாகவும் அமைந்துள்ளன. சிந்துவெளி எழுத்துகளும் தமிழகம் முழுதும் கிடைக்கும் தொல் பழங்கால அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன.

                        தமிழ்நாட்டில் விழுப்புரம் கீழ்வாலை, கோத்தகிரி காரிக்கையூர், இலங்கை ஆனைக் கோட்டை ஆகிய இடங்களில் கிடைத்த ஓவிய எழுத்துகளும்  மயிலாடுதுறை செம்பியன் கண்டியூர் கைக் கோடரி எழுத்துகளும்  சிந்துவெளி எழுத்துகள்  தமிழருடையவை என்று உறுதி செய்கின்றன. சிந்து வெளி அகழ்வாய்வில் கிடைத்துள்ள பொருள்கள் அருகன்மேடு ( அரிக்காமேடு), ஆதித்த நல்லூர் (ஆதிச்ச நல்லூர்), பொருந்தல் முதலிய ஊர்களில் கிடைத்துள்ள பொருள்களை ஒத்துள்ளன.
 





  
                        இந்திய நாகரிகம் என்பது குமரி முதல் சிந்து (வெளி) வரை பரவியிருந்த உலகின் மிகத் தொன்மையான  தமிழர் (திராவிடர்) நாகரிகமே! .சி.கந்தையாப்பிள்ளைதமிழ் இந்தியாஎன்றும் கில்பர்ட் ஸ்லேட்டர்   ‘இந்திய நாகரிகத்தில் திராவிடக் கூறுகள்என்றும் ஆங்கிலத்தில்  நூல்கள் எழுதியுள்ளனர். ஆரியர்களின் சிதைவு மொழியே பாகதம் (பிராகிருதம்) என்னும் வேத மொழி; அதுவே பிற்கலத்தில் சமற்கிருதம் எனச் செய்யப் பட்டது. அதில் தமிழ்ச் சொற்களும் தமிழ்  மொழிக்  கூறுகளும் உள்ளன என்பதை மொழியியல் வல்லுநர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். வேத நூல்களில் தொன்மையான இரிக்கு வேதத்தில் தமிழ்ச் சொற்கள் அதிகம் உள்ளன; அவ்வேதத்தில் பல பகுதிகள் அக்காலத்தில் இருந்த தமிழ் (திராவிட) முனிவர்கள் இயற்றியன. சிந்துவெளி எழுத்துகளால் அறியப்படும்  சொற்களில் சில இரிக்கு வேதத்தில் காணப்படுகின்றன என்று ஐராவதம் மகாதேவன் தம் ஆங்கில நூலில் கூறியுள்ளார்.

                        சிந்துவெளி எழுத்துகளில்  பூசெய் (பூசை) என்ற சொல்லும், பசுபதி என்னும் சிவனைச் சுற்றி விலங்குகளும் இடம்பெற்றுள்ளன. குதிரை, ஒட்டகம், பசு, பன்றி ஆகியவற்றைத் தீயிலிட்டுக் கொன்று பலியிட்டு உண்ணும் ஆரிய வழிபாட்டு முறைக்குத் தமிழர்களின் பூசெய் (பூசை) வழிபாடு முரணானது; முந்தையது. ஆரியர்கள் நடனத்தையும் நாடகத்தையும் இசையையும் வெறுப்பவர்கள்; ஆனால் சிவநெறி இவற்றைப் போற்றக் கூடியது;   சிந்துவெளியில் கிடைத்த நடனப் பெண்ணின் சிலைஅக்கால நடன நாடக இசைக்கலை உயர்வைக் காட்டும்; அப்பெண்ணின் கூந்தல் ஒப்பனை மதுரை மீனாட்சி அம்மனின் / ஆண்டாளின் / தென்னகப் பெண்களின் கொண்டையை ஒத்துள்ளது.
 
  


  
                        சிந்துவெளி அகழ்வாய்வில் அறியப்படுகிற நகர நாகரிகம், அக்காலக் கட்டடக் கலைச் சிறப்பையும், நகரக் கட்டுமான அமைவையும், நீர் மேலாண்மைத் தொழில் நுட்பத்தையும் வெளிப்படுத்துகிறது. மொகஞ்சொதோரோ ஆரப்பா, காளிபங்கன், லோத்தால், சந்துதரோ, ராக்கிகர்கி, மெகர்கர்  ஆகிய இடங்களில் காணப்படும் நகரமைப்பு முறைகளும் தெருக்களும் குளங்களும் அவற்றின் படிக்கட்டுகளும் கழிவுநீர் வெளியேற்றும் சாய்க்கடைகளும்  தமிழகத்தின் தொழில் நுட்பத்தை உடையன.

                        இவற்றைத் தமிழக மலைவாழ் பழங்குடியினர், நகரத்தார் என்னும் செட்டிமார்கள், ஆதி திராவிடர் என்னும் பழந்தமிழ்க் குடிகளின் ஊர் நகர் அமைப்புகளிலும் வீடு கட்டுவதிலும் வழிபாட்டு முறைகளிலும் ஒத்திருக்கக்  காணலாம்; ஏழை எளிய பழங்குடி தாழ்த்தப்பட்ட அல்லது அயற்காற்று வீசாமல் ஒதுங்கி வாழ்கின்ற தொல்குடியினர் தம் வீடுகளில் இறந்தோர்க்காகச் செய்யும் சடங்கில் / மூத்தோர் (தென்புலத்தார்) வழிபாட்டில் வரையும் குறியீடுகள் சிந்துவெளி எழுத்துகளின் எச்சங்களாகத் தோன்றுகின்றன.    

                        சிந்துவெளியில் கிடைத்துள்ள சிலைகள் சிற்பங்கள் ஆகியவற்றைக் கொண்டு அங்கு விளங்கிய சமயம் சிவநெறி என அறியலாம். முருகன், அறுமீன், ஐம்மீன்  முதலிய சொற்கள், சிவன், சத்தி (சக்தி) அல்லது பெண்தெய்வம், பசுபதிஇலிங்கம்  ஆகிய உருவ முத்திரைகள் சிற்பங்கள் ஆகியன சிவ மதத்தின. இச்சிவநெறி (சைவம்) ஆரியர் வரவுக்கு (கி.மு. 1200) முந்தையது என்று சர் ஜான் மார்ஷல்சர் சார்லஸ் எலியட், ஜி.யூ.போப், எம்..முர்ரே (M.A. Murray), டபிள்யூ.டி.விட்னி (W.D.Whitney),  கே.சுர் (K.Sur),  ஹாட்டன் (J.H.H.Hatton), பி.டி.சீனிவாச அய்யங்கார் ஆகிய வரலாற்று ஆய்வாளர்களும், அவர்களை அடியொற்றி விவேகானந்தர், அம்பேத்கார், சவகர்லால் நேரு, அமலானந்த கோஷ், .சி.கங்குலி ஆகியோரும் கூறியுள்ளனர்.

                        சர் ஜான் மார்ஷல் 1920 முதல் ஆய்வுசெய்து வெளிப்படுத்திய சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது (திராவிடருடையது) என்பதை எச்.ஆர்.ஹால், எச்.ஜி.வெல்ஸ், ஏர்னஸ்ட் ஹெக்கல், சர் ஜான் ஈவான்ஸ், ஸ்காட் எலியட், சர் ஜே.டபிள்யூ. ஹோல்டர்னஸ் முதலிய வெளிநாட்டு அறிஞர்களும்பி.டி.சீனிவாச அய்யங்கார், இராமச்சந்திர தீட்சிதர், கா. அப்பாதுரையார், .எல். பாஷாம், டி.ஆர்.பண்டார்கர், எஸ்.கே.இராமச்சந்திர ராவ், எஸ்.ஆர்.ராவ், தேவநேயப் பாவாணர் முதலிய நம் நாட்டு வரலாற்றாசிரியர்களும் வழிமொழிந்துள்ளனர்.

                        சிந்துவெளி எழுத்துகள் திராவிடருடையவை (தமிழருடையவை) என்பதை சர் ஜான் மார்ஷல் நிறுவியதை அடியொற்றி, ஈராஸ் பாதிரியாரும் (Rev. Fr. Heras)  அறிக்கைகள் வெளியிட்டார். தொல் பழங்கால / கற்கால ஆதிமனித மொழி ஓவியமாகவும் பின் சித்திர எழுத்துகளாகவும் உருவாயின என்பர் மொழியியலார். தமிழகக் குகைகளில் ஓவியங்களும் கிடைத்துள்ளன; அவற்றின் வளர்ச்சியாகத்தான் சிந்துவெளி எழுத்துகள் உள்ளன. சிந்துவெளி எழுத்துகள் திராவிட எழுத்துகளென்று மொழியியல் அறிஞர் சுனிதி குமார் சட்டஜி 1960-இல் அறிக்கை வெளியிட்டார். ஆயினும், இந்தோ ஆரிய மொழியாக இருக்கலாமோ, முண்டா மொழியாக இருக்கலாமோ என்றும், சிந்துவெளி எழுத்துகள் ஓவியக்குறியீடுகளே தவிர மொழி இல்லை; ஓவியமாகக் கிறுக்கிய தொல் கரட்டு மொழியாக இருக்கலாம்  என்றும் பலர் பலவாறு கருத்து தெரிவித்தனர்.  

                        முண்டா, பிராகூய் ஆகியன திருந்தா திராவிட மொழிகள். சிந்து நாகரிகம் பரவியுள்ள பலுச்சித்தானத்தில் உள்ள பிராகூய் மொழியும் பிராகூய் என்ற பெயரில் அமைந்த ஊரும் தமிழ் (திராவிட) தொடர்பையும் தமிழர் நாகரிகம் என்பதையும்   உறுதி செய்கின்றன என்று ஆர். பாலகிருட்டிணன், ... கூறுவார். மேலும்,

            “சிந்துவெளி மக்கள் பேசிய மொழி ஒரு தொல்மொழியாக இருக்க முடியாது. ஒரு வளர்ந்த மொழியாகத்தான் இருக்க           முடியும். ஏனென்றால், சிந்துவெளி மக்கள் சாதாரண மக்கள் அல்ல. அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சாக்கடை         கட்டியவர்கள்; சாரங்களை அமைத்தவர்கள்; நீச்சல் குளங்களை அமைத்தவர்கள்; பெரிய பெரிய வீடுகளில்            குடியிருந்தவர்கள்; நகர சபையை நடத்தியவர்கள்; துப்புரவுத் தொழிலாளர்களை நியமித்து வேலை வாங்கியவர்கள்;        வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்தவர்கள்; முத்திரைகளை வைத்திருந்தவர்கள்; ஒரே மாதிரியான         செங்கல்களை 1600 சதுர கிலோமீட்டரில் எல்லா நகரங்களிலும் பயன்படுத்தியவர்கள்; அப்படிப்பட்ட ஒரு     நாகரிகத்திற்குச் சொந்தமானவர்கள். கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை எனப் பல கலைகளில் தேர்ந்தவர்களாகிய  சிந்துவெளி மக்கள் மிகச் சிறந்த வளர்ந்த மொழியையும் பெற்றிருந்தார்கள்.
 -  என்று அவர் எழுதியுள்ளார்.

சிந்துவெளியில் ஏறத்தாழ 400 எழுத்துகள் கிடைத்துள்ளன; அவை தமிழ் (திராவிட) எழுத்துகள் என்பதை  ஐராவதம் மகாதேவன்அஸ்கா பர்போலாபசுவலிங்கம், சுப்பிரமணிய மலையாண்டி, பி.இராமநாதன், இரா.மதிவாணன்  ஆகியோர் ஆய்வுகளும் நூல்களும் நிறுவியுள்ளன

                        தோலவீரா என்னுமிடத்தில் கிடைத்த 3 செ.மீ உயரமுள்ள மிகப்பெரிய எழுத்துகளுடன் 3 மீட்டர் நீளமுள்ள பலகை பற்றி அறிஞர் அஸ்கா பர்ப்போலா பதிவு செய்துள்ளார். சிந்துவெளி அகழ்வில் கிடைத்துள்ள செப்புத்தகடுகளின் தொல்தமிழ் எழுத்துகள்  பற்றி வசந்த் ஷிண்டே, ரிக்வில்ஸ் ஆகிய இருவரும் ஆய்வறிக்கை அளித்துள்ளனர். இச்செப்பேடுகளுள் ஒன்று உலகின் மிக நீளச் செப்புத்தகடாகும்; இதில்  34 எழுத்துகள் உள்ளன; பாண்டியன், மாறன், வழுதி  முதலிய பாண்டிய குலப் பெயர்கள் உள்ளன; லோத்தால் மிகச் சிறந்த துறைமுகமாக விளங்கியிருக்க வேண்டும் என்று அவர்கள் குறித்துள்ளனர். பாண்டியர்கள் கப்பற்கலையில் தேர்ந்தவர்கள்; அவர்களில் ஒருவன் கப்பலில் வந்ததை ஒரு செப்பேடு கூறுகிறது.



புணையன் என்ற கப்பல் ஓட்டுபவனையும் காளண்ணன் என்ற கப்பல் கட்டுமானத் தொழில் செய்தவனையும் நக்கண்ணன் என்ற அக்கப்பலில் ஏறி (அதிலிருந்து) வந்தனையும் இச்செப்பேடு குறிப்பிடுகிறது.

                        குமரிக்கண்ட அழிவால் இருமுறை தெற்கே அழிந்து, வடக்கு நோக்கிப் பெயர்ந்து வந்து மதுரை தோன்றியது போலே, ஆழிப்பேரலையாலோ மணற்காற்றுப் புயலாலோ வீசிய மண்மேடிட்டு, ஆதிச்ச நல்லூர் இருமுறை புதையுண்டு முன்றாம் முறை நகரம் மேலெழுந்துள்ளது; மொகன்சதோரோ ஆறுமுறை புதையுண்டு ஏழாம் முறை நகரம் மேலே கட்டப்பட்டுள்ளது.  இத்தகைய மொழியியல், மானுடவியல், வரலாற்றியல், பண்பாட்டியல், புவியியல், அறிவியல் சான்றுகளால் சிந்து வெளி எழுத்துகளும் நகரமைப்பும் கலைகளும் சமயமும் பண்பாடும் நாகரிகமும் தமிழருடையவை என்று உறுதியாக அறியலாம்.
                       
 நன்றி: படங்கள்:
1.     Harappa Archaeological Research Project/Harappa.com
2.     Dept. of Archaeology and Museums, Govt. of Pakistan.
3.     தமிழர்கள் –இணைய தளம்.
4.     செம்மொழி நிறுவனக் காலாண்டிதழ், திசம்பர்,2009.


                                                 ********************************
தமிழரங்கம் ஆய்விதழில் வெளிவந்த கட்டுரை.

   

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers