Thursday, July 7, 2016

சிந்து வெளியில் நுழைந்த குதிரைத் தின்னிகள்!
                                                                   
                                                                              …   முனைவர் பா.இறையரசன்
           
                        இந்தியா என்றாலே வேதமும் சமற்கிருதமும் என்று மேலை நாட்டார் எண்ணியிருந்த காலத்தில், தமிழும் அதனைச் சேர்ந்த மொழிகளும் ஆகிய திராவிட மொழிக்குடும்பம் என்ற ஒன்று உள்ளதை 1856-இல் இராபர்ட் கால்டுவெல் நிறுவி நூல் வெளியிட்டார்மிகத் தொன்மையான உலக நாகரிகங்கள் என எகிப்து கிரேக்க உரோமானிய நாகரிகங்கள் பேசப்பட்ட காலத்தில் சிந்துவெளி நாகரிகம் என ஒன்று உள்ளது என 1924-இல் சர் ஜான் மார்ஷல் நிறுவினார்மொகன்சதோரோ, ஆரப்பா, காளிபங்கன், லோத்தால் முதலிய இடங்களில் நடந்த அகழ்வாய்வுகளின் அடிப்படையில் அவர் எழுதிய சிந்துவெளி நாகரிகம் பற்றிய ஆய்வறிக்கைகள் உலக வரலாற்று ஆய்வறிஞர்களால் ஏற்கப்பெற்றது.
சர் ஜான் மார்ஷல்                         

                         ஆனாலும் ஆரியச் சார்பாளர்கள் அதனை ஏற்க விரும்பவில்லை. வேதத்தையும் இந்து மதத்தையும் சமற்கிருதத்தையும் இந்தியையும்  இந்தியாவின்  அடையாளங்கள் என்று கூறி வருகின்றனர். அந்த வகையில் குமரிக்கண்டம் என்பது தமிழ் உலகத் தாய்மொழி என்பதும் ஆரியச் சிந்தனையாளர்களால் மறுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சிந்து வெளி நாகரிகம்  தமிழர் நாகரிகமில்லை, சிந்துவெளி எழுத்துகள் தமிழ் (திராவிட) மொழி எழுத்துகள் அல்ல என மறுத்து வருகின்றனர்.

                        ஆரியக் கருத்துகளையும் வல்லாதிக்கம் (நாசிசம்) பரப்பிவரும் சிலரும் பிராமண / வருணாசிரம மேலாதிக்க / இந்துத்துவக் கருத்தினரும் சிந்துவெளி நாகரிகம் பற்றி ஐயம் எழுப்பி வருவதுடன், சிந்துவெளி எழுத்துகள் தமிழல்ல என்றும் கூறி வருகின்றனர்; மேலும் சிந்து வெளி நாகரிகத்தையே திரித்து வேத நாகரிகம், சரஸ்வதி நாகரிகம் என்றும் ஆரியருடையது என்றும் சிந்துவெளி எழுத்துகள் இந்தோ ஐரோப்பிய மொழியைச் சேர்ந்தவை என்றும் பரப்பி வருகின்றனர். மொழி சமயம் பண்பாடு ஆகியவை இல்லாத காட்டு விலங்காண்டிக் கூட்டமாக நடு ஆசியாவிலிருந்து புறப்பட்டுக்  கைபர் போலன் கணவாய் வழியாக நம் நாட்டுக்குள் நுழைந்த  ஆரியரால், சிந்துவெளியில் விளங்கிய தமிழர்களின் உயரிய நகர நாகரிகம் சிதைந்தது.

                        தமிழர் நாகரிகத்தை 4000 ஆண்டுகள் முன்னர் சிந்து கங்கைக் கரையில் சிதைத்த ஆரியர், இன்றைக்கும் தமிழர் நாகரிகத்தையும் மொழியையும் இனத்தையும் சிதைக்க முயல்கின்றனர். இந்தியாவிற்குள் 16 ஆம் நூற்றாண்டு அளவில் மேலை நாட்டார் வந்தபொழுது மேல்தட்டு மக்களாகவும் படித்தவர்களாகவும் பிராமணர்கள் மட்டுமே விளங்கினர்; அவர்கள் வேதம் படிக்கவில்லை என்றாலும் சமற்கிருதம் பேசுவதற்கு உரிய மொழி இல்லை என்றாலும் அவற்றையும் தம்மையும்  உயர்வாகப் பரப்பி வந்தனர். எனவே, இந்தியா என்றதுமே வேதமும் சமற்கிருதமும் மட்டுமே என்று அயல்நாட்டார் கருதினர். இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது வெள்ளையரையும் கிறித்துவ மதத்தையும் முகமதிய மதத்தையும் எதிர்க்க வேதத்தையும் சமற்கிருத்தையும் முதன்மைப் படுத்தினர். ஆங்கிலேயரையும் ஆங்கிலத்தையும் எதிர்க்க சமற்கிருதம் பேச்சு மொழியாக இல்லாததால் இந்தியை உருவாக்கி வளர்த்துக் கொண்டனர்.  

                        தமிழ் ஓர் செம்மொழி என்பதையும் மறுத்து  இந்தியாவின் ஒரே செம்மொழி சமற்கிருதம் என்றும் அதிலிருந்துதான் இந்தியாவில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் தோன்றின என்று கூறினர். மேலும் செம்மொழி ஆகிய தகுதி உடைய சமற்கிருதம் கட்டாயப்பாடம், தமிழ் உள்ளிட்ட உள்நாட்டு மொழிகள் கட்டயமில்லை என்று கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் விதிகள் செய்தனர். இதனால் 1911 வாக்கில் பல தமிழாசிரியர்கள் வேலை இழந்தனர்; மறைமலை அடிகள் இதனால் ஆசிரியப் பணி இழந்தார். ஆயினும் மறைமலை அடிகளின் இயக்கமும் பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச் சங்கமும் ஆங்கிலக் கல்வியும் மேலைநாட்டார் தமிழ்த் தொண்டும் தமிழின் பெருமையை உலகறியச் செய்துள்ளன.

                        சிந்து வெளி அகழ்வாய்வில் கிடைத்த பானை ஓடுகளிலும் செப்புத் தகடுகளிலும் கிடைத்த எழுத்துகள் திராவிட (தமிழ்) மொழி எழுத்துகள் என்று நிறுவப்பட்டன. தென்னிந்தியாவில் தமிழைத் தலைமையாகக் கொண்ட திராவிட மொழிகளும் வட இந்தியாவிலும் பாக்கித்தானத்தில் பலுச்சித்தான் வரையும் சிந்து வெளி அகழ்வாய்வுகளும்   திருந்தா திராவிட மொழிகளும் உள்ளமை இதனை உறுதி செய்தது. சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிடர் (தென்னிந்தியர்/ தமிழர்) நாகரிகம் என்றும் அக்காலத்தில் இந்தியா முழுதும் விளங்கிய மொழி திராவிடம் (தமிழ்) என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறினர்.
                       
                                      தென்னிந்தியா மட்டுமல்லாது பலுச்சித்தான் வரை பரவிய திராவிட மொழிக்குடும்பத்தின் தலைமை மொழி தமிழ் என்பதும், ஆரியரின் சமற்கிருத்திற்கு முந்தைய மொழி தமிழ் என்பதும் ஆரிய வேத நாகரிகத்திற்கு முந்தையது தமிழர் நாகரிகம் என்பதும் கால்டுவெலாரின் திராவிட ஒப்பிலக்கண நூலாலும் சர் ஜான் மார்ஷலின் சிந்து வெளி அகழ்வாய்வுகளாலும் உறுதி செய்யப்பட்ட நிலையில் குமரிக்கண்டம் பற்றிய அறிவியல் செய்திகள் வெளிவந்தன.

                        குமரி முனையில் (மலையில்) தோன்றிய தமிழர் நாகரிகம் வடக்கே கங்கை சிந்து இமயம் வரை பரவியது மட்டுமல்லாமல், கி.மு. 6000- இல் பலுச்சித்தான் (பாக்கித்தான்) வரையும் பரவியது. மேலும் பரவி சுமேரிய (கி.மு. 4000), சால்டிய, எகிப்திய  (கி.மு. 2800), கிரேக்க உரோமானிய (கி.மு. 800)  நாகரிகங்களுக்கு வழிகாட்டியது. சிந்துவெளி நாகரிக காலத்தில் (கி.மு.2500 – கிமு 1200) விளங்கிய தமிழ் எழுத்துகளும் மொழிக் கூறுகளும் அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களும் சுமேரிய உரோமானிய நாகரிக அகழ்வாய்வுகளில் கிடைத்த பொருள்களுடன் ஒத்துள்ளன. இதனை விரிவாக வடுவூர் துரைசாமி ஐயங்கார் தம் ஆங்கில நூலில் பதிந்துள்ளார்.

                        சிந்துவெளி அகழ்வாய்வுப் பொருள்கள் பலுச்சித்தான், பாக்கித்தான், ஈரான் முதலிய நாடுகளிலும் கிடைத்துள்ளன. அவை இந்தியாவில் மட்டுமல்லாமல் பாக்கித்தான், பலுச்சித்தான், ஈரான், ஆகிய நாடுகளில் அகழ்விடங்களில் உள்ள அருங்காட்சியகங்களிலும், வெளியே கொண்டு செல்லப்பட்டு பாரிசு போஸ்டன் அருங்காட்சியகங்களிலும் உள்ளன. சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது என்பதை நிறுவும் வண்ணம் சிந்து வெளி எழுத்துகள் தமிழாகவும் அமைந்துள்ளன. சிந்துவெளி எழுத்துகளும் தமிழகம் முழுதும் கிடைக்கும் தொல் பழங்கால அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன.

                        தமிழ்நாட்டில் விழுப்புரம் கீழ்வாலை, கோத்தகிரி காரிக்கையூர், இலங்கை ஆனைக் கோட்டை ஆகிய இடங்களில் கிடைத்த ஓவிய எழுத்துகளும்  மயிலாடுதுறை செம்பியன் கண்டியூர் கைக் கோடரி எழுத்துகளும்  சிந்துவெளி எழுத்துகள்  தமிழருடையவை என்று உறுதி செய்கின்றன. சிந்து வெளி அகழ்வாய்வில் கிடைத்துள்ள பொருள்கள் அருகன்மேடு ( அரிக்காமேடு), ஆதித்த நல்லூர் (ஆதிச்ச நல்லூர்), பொருந்தல் முதலிய ஊர்களில் கிடைத்துள்ள பொருள்களை ஒத்துள்ளன.
 





  
                        இந்திய நாகரிகம் என்பது குமரி முதல் சிந்து (வெளி) வரை பரவியிருந்த உலகின் மிகத் தொன்மையான  தமிழர் (திராவிடர்) நாகரிகமே! .சி.கந்தையாப்பிள்ளைதமிழ் இந்தியாஎன்றும் கில்பர்ட் ஸ்லேட்டர்   ‘இந்திய நாகரிகத்தில் திராவிடக் கூறுகள்என்றும் ஆங்கிலத்தில்  நூல்கள் எழுதியுள்ளனர். ஆரியர்களின் சிதைவு மொழியே பாகதம் (பிராகிருதம்) என்னும் வேத மொழி; அதுவே பிற்கலத்தில் சமற்கிருதம் எனச் செய்யப் பட்டது. அதில் தமிழ்ச் சொற்களும் தமிழ்  மொழிக்  கூறுகளும் உள்ளன என்பதை மொழியியல் வல்லுநர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். வேத நூல்களில் தொன்மையான இரிக்கு வேதத்தில் தமிழ்ச் சொற்கள் அதிகம் உள்ளன; அவ்வேதத்தில் பல பகுதிகள் அக்காலத்தில் இருந்த தமிழ் (திராவிட) முனிவர்கள் இயற்றியன. சிந்துவெளி எழுத்துகளால் அறியப்படும்  சொற்களில் சில இரிக்கு வேதத்தில் காணப்படுகின்றன என்று ஐராவதம் மகாதேவன் தம் ஆங்கில நூலில் கூறியுள்ளார்.

                        சிந்துவெளி எழுத்துகளில்  பூசெய் (பூசை) என்ற சொல்லும், பசுபதி என்னும் சிவனைச் சுற்றி விலங்குகளும் இடம்பெற்றுள்ளன. குதிரை, ஒட்டகம், பசு, பன்றி ஆகியவற்றைத் தீயிலிட்டுக் கொன்று பலியிட்டு உண்ணும் ஆரிய வழிபாட்டு முறைக்குத் தமிழர்களின் பூசெய் (பூசை) வழிபாடு முரணானது; முந்தையது. ஆரியர்கள் நடனத்தையும் நாடகத்தையும் இசையையும் வெறுப்பவர்கள்; ஆனால் சிவநெறி இவற்றைப் போற்றக் கூடியது;   சிந்துவெளியில் கிடைத்த நடனப் பெண்ணின் சிலைஅக்கால நடன நாடக இசைக்கலை உயர்வைக் காட்டும்; அப்பெண்ணின் கூந்தல் ஒப்பனை மதுரை மீனாட்சி அம்மனின் / ஆண்டாளின் / தென்னகப் பெண்களின் கொண்டையை ஒத்துள்ளது.
 
  


  
                        சிந்துவெளி அகழ்வாய்வில் அறியப்படுகிற நகர நாகரிகம், அக்காலக் கட்டடக் கலைச் சிறப்பையும், நகரக் கட்டுமான அமைவையும், நீர் மேலாண்மைத் தொழில் நுட்பத்தையும் வெளிப்படுத்துகிறது. மொகஞ்சொதோரோ ஆரப்பா, காளிபங்கன், லோத்தால், சந்துதரோ, ராக்கிகர்கி, மெகர்கர்  ஆகிய இடங்களில் காணப்படும் நகரமைப்பு முறைகளும் தெருக்களும் குளங்களும் அவற்றின் படிக்கட்டுகளும் கழிவுநீர் வெளியேற்றும் சாய்க்கடைகளும்  தமிழகத்தின் தொழில் நுட்பத்தை உடையன.

                        இவற்றைத் தமிழக மலைவாழ் பழங்குடியினர், நகரத்தார் என்னும் செட்டிமார்கள், ஆதி திராவிடர் என்னும் பழந்தமிழ்க் குடிகளின் ஊர் நகர் அமைப்புகளிலும் வீடு கட்டுவதிலும் வழிபாட்டு முறைகளிலும் ஒத்திருக்கக்  காணலாம்; ஏழை எளிய பழங்குடி தாழ்த்தப்பட்ட அல்லது அயற்காற்று வீசாமல் ஒதுங்கி வாழ்கின்ற தொல்குடியினர் தம் வீடுகளில் இறந்தோர்க்காகச் செய்யும் சடங்கில் / மூத்தோர் (தென்புலத்தார்) வழிபாட்டில் வரையும் குறியீடுகள் சிந்துவெளி எழுத்துகளின் எச்சங்களாகத் தோன்றுகின்றன.    

                        சிந்துவெளியில் கிடைத்துள்ள சிலைகள் சிற்பங்கள் ஆகியவற்றைக் கொண்டு அங்கு விளங்கிய சமயம் சிவநெறி என அறியலாம். முருகன், அறுமீன், ஐம்மீன்  முதலிய சொற்கள், சிவன், சத்தி (சக்தி) அல்லது பெண்தெய்வம், பசுபதிஇலிங்கம்  ஆகிய உருவ முத்திரைகள் சிற்பங்கள் ஆகியன சிவ மதத்தின. இச்சிவநெறி (சைவம்) ஆரியர் வரவுக்கு (கி.மு. 1200) முந்தையது என்று சர் ஜான் மார்ஷல்சர் சார்லஸ் எலியட், ஜி.யூ.போப், எம்..முர்ரே (M.A. Murray), டபிள்யூ.டி.விட்னி (W.D.Whitney),  கே.சுர் (K.Sur),  ஹாட்டன் (J.H.H.Hatton), பி.டி.சீனிவாச அய்யங்கார் ஆகிய வரலாற்று ஆய்வாளர்களும், அவர்களை அடியொற்றி விவேகானந்தர், அம்பேத்கார், சவகர்லால் நேரு, அமலானந்த கோஷ், .சி.கங்குலி ஆகியோரும் கூறியுள்ளனர்.

                        சர் ஜான் மார்ஷல் 1920 முதல் ஆய்வுசெய்து வெளிப்படுத்திய சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது (திராவிடருடையது) என்பதை எச்.ஆர்.ஹால், எச்.ஜி.வெல்ஸ், ஏர்னஸ்ட் ஹெக்கல், சர் ஜான் ஈவான்ஸ், ஸ்காட் எலியட், சர் ஜே.டபிள்யூ. ஹோல்டர்னஸ் முதலிய வெளிநாட்டு அறிஞர்களும்பி.டி.சீனிவாச அய்யங்கார், இராமச்சந்திர தீட்சிதர், கா. அப்பாதுரையார், .எல். பாஷாம், டி.ஆர்.பண்டார்கர், எஸ்.கே.இராமச்சந்திர ராவ், எஸ்.ஆர்.ராவ், தேவநேயப் பாவாணர் முதலிய நம் நாட்டு வரலாற்றாசிரியர்களும் வழிமொழிந்துள்ளனர்.

                        சிந்துவெளி எழுத்துகள் திராவிடருடையவை (தமிழருடையவை) என்பதை சர் ஜான் மார்ஷல் நிறுவியதை அடியொற்றி, ஈராஸ் பாதிரியாரும் (Rev. Fr. Heras)  அறிக்கைகள் வெளியிட்டார். தொல் பழங்கால / கற்கால ஆதிமனித மொழி ஓவியமாகவும் பின் சித்திர எழுத்துகளாகவும் உருவாயின என்பர் மொழியியலார். தமிழகக் குகைகளில் ஓவியங்களும் கிடைத்துள்ளன; அவற்றின் வளர்ச்சியாகத்தான் சிந்துவெளி எழுத்துகள் உள்ளன. சிந்துவெளி எழுத்துகள் திராவிட எழுத்துகளென்று மொழியியல் அறிஞர் சுனிதி குமார் சட்டஜி 1960-இல் அறிக்கை வெளியிட்டார். ஆயினும், இந்தோ ஆரிய மொழியாக இருக்கலாமோ, முண்டா மொழியாக இருக்கலாமோ என்றும், சிந்துவெளி எழுத்துகள் ஓவியக்குறியீடுகளே தவிர மொழி இல்லை; ஓவியமாகக் கிறுக்கிய தொல் கரட்டு மொழியாக இருக்கலாம்  என்றும் பலர் பலவாறு கருத்து தெரிவித்தனர்.  

                        முண்டா, பிராகூய் ஆகியன திருந்தா திராவிட மொழிகள். சிந்து நாகரிகம் பரவியுள்ள பலுச்சித்தானத்தில் உள்ள பிராகூய் மொழியும் பிராகூய் என்ற பெயரில் அமைந்த ஊரும் தமிழ் (திராவிட) தொடர்பையும் தமிழர் நாகரிகம் என்பதையும்   உறுதி செய்கின்றன என்று ஆர். பாலகிருட்டிணன், ... கூறுவார். மேலும்,

            “சிந்துவெளி மக்கள் பேசிய மொழி ஒரு தொல்மொழியாக இருக்க முடியாது. ஒரு வளர்ந்த மொழியாகத்தான் இருக்க           முடியும். ஏனென்றால், சிந்துவெளி மக்கள் சாதாரண மக்கள் அல்ல. அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சாக்கடை         கட்டியவர்கள்; சாரங்களை அமைத்தவர்கள்; நீச்சல் குளங்களை அமைத்தவர்கள்; பெரிய பெரிய வீடுகளில்            குடியிருந்தவர்கள்; நகர சபையை நடத்தியவர்கள்; துப்புரவுத் தொழிலாளர்களை நியமித்து வேலை வாங்கியவர்கள்;        வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்தவர்கள்; முத்திரைகளை வைத்திருந்தவர்கள்; ஒரே மாதிரியான         செங்கல்களை 1600 சதுர கிலோமீட்டரில் எல்லா நகரங்களிலும் பயன்படுத்தியவர்கள்; அப்படிப்பட்ட ஒரு     நாகரிகத்திற்குச் சொந்தமானவர்கள். கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை எனப் பல கலைகளில் தேர்ந்தவர்களாகிய  சிந்துவெளி மக்கள் மிகச் சிறந்த வளர்ந்த மொழியையும் பெற்றிருந்தார்கள்.
 -  என்று அவர் எழுதியுள்ளார்.

சிந்துவெளியில் ஏறத்தாழ 400 எழுத்துகள் கிடைத்துள்ளன; அவை தமிழ் (திராவிட) எழுத்துகள் என்பதை  ஐராவதம் மகாதேவன்அஸ்கா பர்போலாபசுவலிங்கம், சுப்பிரமணிய மலையாண்டி, பி.இராமநாதன், இரா.மதிவாணன்  ஆகியோர் ஆய்வுகளும் நூல்களும் நிறுவியுள்ளன

                        தோலவீரா என்னுமிடத்தில் கிடைத்த 3 செ.மீ உயரமுள்ள மிகப்பெரிய எழுத்துகளுடன் 3 மீட்டர் நீளமுள்ள பலகை பற்றி அறிஞர் அஸ்கா பர்ப்போலா பதிவு செய்துள்ளார். சிந்துவெளி அகழ்வில் கிடைத்துள்ள செப்புத்தகடுகளின் தொல்தமிழ் எழுத்துகள்  பற்றி வசந்த் ஷிண்டே, ரிக்வில்ஸ் ஆகிய இருவரும் ஆய்வறிக்கை அளித்துள்ளனர். இச்செப்பேடுகளுள் ஒன்று உலகின் மிக நீளச் செப்புத்தகடாகும்; இதில்  34 எழுத்துகள் உள்ளன; பாண்டியன், மாறன், வழுதி  முதலிய பாண்டிய குலப் பெயர்கள் உள்ளன; லோத்தால் மிகச் சிறந்த துறைமுகமாக விளங்கியிருக்க வேண்டும் என்று அவர்கள் குறித்துள்ளனர். பாண்டியர்கள் கப்பற்கலையில் தேர்ந்தவர்கள்; அவர்களில் ஒருவன் கப்பலில் வந்ததை ஒரு செப்பேடு கூறுகிறது.



புணையன் என்ற கப்பல் ஓட்டுபவனையும் காளண்ணன் என்ற கப்பல் கட்டுமானத் தொழில் செய்தவனையும் நக்கண்ணன் என்ற அக்கப்பலில் ஏறி (அதிலிருந்து) வந்தனையும் இச்செப்பேடு குறிப்பிடுகிறது.

                        குமரிக்கண்ட அழிவால் இருமுறை தெற்கே அழிந்து, வடக்கு நோக்கிப் பெயர்ந்து வந்து மதுரை தோன்றியது போலே, ஆழிப்பேரலையாலோ மணற்காற்றுப் புயலாலோ வீசிய மண்மேடிட்டு, ஆதிச்ச நல்லூர் இருமுறை புதையுண்டு முன்றாம் முறை நகரம் மேலெழுந்துள்ளது; மொகன்சதோரோ ஆறுமுறை புதையுண்டு ஏழாம் முறை நகரம் மேலே கட்டப்பட்டுள்ளது.  இத்தகைய மொழியியல், மானுடவியல், வரலாற்றியல், பண்பாட்டியல், புவியியல், அறிவியல் சான்றுகளால் சிந்து வெளி எழுத்துகளும் நகரமைப்பும் கலைகளும் சமயமும் பண்பாடும் நாகரிகமும் தமிழருடையவை என்று உறுதியாக அறியலாம்.
                       
 நன்றி: படங்கள்:
1.     Harappa Archaeological Research Project/Harappa.com
2.     Dept. of Archaeology and Museums, Govt. of Pakistan.
3.     தமிழர்கள் –இணைய தளம்.
4.     செம்மொழி நிறுவனக் காலாண்டிதழ், திசம்பர்,2009.


                                                 ********************************
தமிழரங்கம் ஆய்விதழில் வெளிவந்த கட்டுரை.

   

1 comment:

  1. Thank you for your article. If time permits, please translate your articles to English and that reach the scholars who don't know Tamil.
    Bala G Thevar

    ReplyDelete

தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers