வங்காலைப் படுகொலை பற்றி தாயகக் கவிஞர் புதுவையின் வெளிப்பாடு:
ஏதுமறியாத எம் பிள்ளைகளை அமுக்கி
நித்திரையிற் கொல்.
நிலத்திற் காலுரசத் தூக்கிலிடு.
உரித்துச் சதையாக்கிப் பங்கிடு.
உறிஞ்சிய இரத்தம் கலந்து கறியாக்கி
எச்சமின்றி சுவைத்துச் சாப்பிட்டு ஏப்பமிடு.
பின்னர் பிள்ளைகளின் தாயைப்பிடி.
அவள் கணவன் முன்னே கவுணைத்தூக்கி
பிணத்தைப் புணருதலுக்கு ஒப்பாக
வெறி தீரும் வரையும் முயங்கு.
முடிந்ததும் பாதியுயிர் போயிருக்கும்
மீதியையும் வெளியேற்றி வீசிப்போ.
கணவனை மட்டும் ஏன் விடவேண்டும்?
பிடித்து மடக்கி முறி.
வதையின் வலியோலம் வெளியேறாதவாறு
சோறளித்த உளியாலேயே
தோண்டிசுவரோரம் எறிந்து செல்.
ஏனென்று கேட்கமுடியுமா உன்னையெவரும்?
உன் கனத்த சப்பாத்தின்
கீழே கசங்குவது தானேஎம் அடிமை ஜீவிதம்?
நேற்று நிலவெறித்த இரவில்
உன்னைப் பிடித்துலக்கிய உடற்பசி வடிந்திருக்கும்.
எங்கள் நெஞ்சில் கொதிப்புறும் நெருப்புக்குவடிகால் ஏது?
வெசாக் நாளில் மாடுரித்த ஒருவனுக்கு
பத்தாண்டு ஒறுப்பளித்த பௌத்த பூமியே!
என்ன தீர்ப்பு வழங்குவாய் இதற்கு?
நாளை நாடாளுமன்றம் கூடும்போது
கண்டனத் தீர்மானம் கொண்டு வருவர் சிலர்.
செங்கோலேந்திய சேவகன் முன்னேவர
சபாநாயகர் சபைக்கு வருவர்
வங்காலைக்கு மட்டும் பதில் வரமாட்டாது.
பனிஉறையும் தேசத்து குளிர் மலைச்சாரலுக்கு
பேசலாம் வருகவென அழைத்துச் சென்றவர்களுக்கும்
வங்காலையின் வலிக்குரல் கேட்டிருக்காது.
தங்கள் கதவுகளைச் சாத்தி
காற்றின் வழிகளை அடைக்கும் ஒன்றியமும்
இந்த உயிர் வதையைக் கணக்கிலெடுக்கப்
போவதில்லை.
எங்களை என்ன செய்யச் சொல்லுகின்றனர்
எல்லோரும்?
கண்காணிக்க வந்துள்ள
முன்னைய களமுனை அதிகாரிகளே!
பிணத்தின் முன்னே தொப்பி கழற்றவும்
மணக்கும் பிணக்குழி தோண்டி எடுக்கவும்
காய்ந்து கிடக்கும் கசங்கிய மலர்களை
கணக்கிலெடுக்கவும் தானா
நீங்கள் இங்கே காத்திருப்பது?
கதிர்காம அழகி “மன்னம்பெரி”யை
தென்னிலங்கைப் பேய்கள் குதறியபோது
எதிர்ப்புக்குரல் முதலில்
எங்களிடம் இருந்துதான் வந்தது.
“சூரியகந்த” புதைகுழிகளை
தோண்டியெடுத்து விசாரணையை தொடக்கு என்று
முதற்குரல் இங்கிருந்துதான் எழுந்தது.
மனிதம் சாகாது கொஞ்சமாயினும் எஞ்சியிருக்கும்
சிங்களத் தோழர்களே!
தோழியரே!
பதிலுக்கு எதிர்பார்க்கின்றோம் உங்களிடமிருந்து
ஒரு பதிலை.
தொடரும் எல்லாக் குற்றங்களுக்கும்
இங்கொரு சித்திரபுத்திரன் கணக்கெழுதுகிறான்.
எழுதும் குறிப்பேடு நிறைந்து வழிகிறது
குற்றங்களாக வங்காலை வரை.
நாளை கைகட்டிக்கொண்டு
தரும சபையிற் தலைகுனிந்து நிற்பீர்
வழங்கும் தண்டனைகளுக்காக.
ஒன்று மட்டும் உறுதி
தீர்ப்பெழுதும் கணம் வரை
உம்மைத் திருத்தவே முடியாது.
- தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை-
நன்றி: ஒருபேப்பர்
அன்புடன்
சிறீதரன்
Sunday, November 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
அன்புடன் ஐயாவுக்கு தங்களை இணைய உலகில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அரிய செய்திகளை அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா.
ReplyDelete