பயணம் :
நாள் : ௰ (10) கோலாலம்பூரிலே !புலவர் இளங்குமரனின் மார்சிலிங் வீட்டிலிருந்து மலையகம் (மலேசியா) காலை ௭ மணி அளவில் நோக்கி புறப்பட்டோம். மலேசியா நாட்டின் நுழைவுசீட்டு பெற்று தலைநகராம் கோலாலம்பூர் செல்லும் பேருந்தில் தேடினோம். ஓட்டுநர் ஒருவர் தம் வண்டிக்கு அழைத்தார். எமது வருகையை மலையகத் தமிழர் இளந்தமிழ் அவர்கட்குத் தெரிவிக்கத் தொலைபேசியைத் தேடினோம். ஓட்டுநர் மீண்டும் எம்மை நாடி வந்து பொதுத்தொலை பேசியை இயக்கும் முறை, குறியீட்டு எண் முதலியவற்றைத் தெரிவித்து உதவினார் .
அவரது வண்டியிலேயே ஏறிப் பயணம் தொடர்ந்தோம். வழியெல்லாம் வானுயர்ந்த பலமாடிக் கட்டடங்களும், இருபுறமும் புல்வெளிகளும் அடர்ந்த மரங்களும் பறவைகளின் ஒலிகளும் பின்புலமாக முன்னேறினோம்.
கண்ணில் ஆடு மாடுகளோ வீடுகளோ கண்ணில் படவில்லை. ஆனால் வழியெல்லாம் அழகுதமிழில் பெயர்ப் பலகைகள் கண்ணில் பட்டன. தம்பா நிலை , நிலை, சேனை, அய்யர் குரோ முதலிய ஊர்ப் பெயர்களில் தமிழைக் கண்டோம்.
ஓட்டுநர் சுரேஷ் அன்போடு மலையகத்தமிழர் நிலை பற்றியும், புலம் பெயர்ந்து வந்துள்ள தம்போன்ற தமிழர்கள் தாய் நாட்டுத் தொடர்பு அறவே அறியாது வாழ்வது பற்றியும் ஆங்கிலச்சொல் கலவாது நல்ல தமிழில் உரையாடிக்கொண்டு வந்தார்.
கோலாலம்பூர் வந்தடைந்ததும், தாமே தொலைபேசியிட்டு இளந்தமிழ் அவர்களுக்கு நாங்கள் இறங்கிய இடம் பற்றிக் கூறினார்.
வந்து சேர்ந்தார் இளந்தமிழ் ! வேகமெடுத்தது எங்கள் வரலாற்றாய்வுப் பணி ! மின்னலென உணவகம் சென்றோம். உணவு முடித்த உடனே மலேசிய பல்கலைக் கழகத்தின் சிறப்பு நிலைப் பேராசிரியர் முனைவர் ச.சிங்காரவேலு அவர்களிடம் அழைத்துச் சென்றார் . இவ்வளவு இணைப்பு ஏற்பாடுகளையும் தொலைபேசி வழியே அமெரிக்க நாட்டிலிருந்தே செய்த ஆல்பர்ட் அவர்களை நன்றியுடன் நினைந்தோம்.
பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்த்துறையில் பேரா.சிங்காரவேலு அவர்கள் மிக்க ஆர்வத்துடன் கடாரம் பற்றிய செய்திகளை கட கடவென்று பொழிந்தார். தமிழ் நாட்டு வணிகர்களின் வணிக எல்லை கடல் கடந்து கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முன்னரே பரந்து விரிந்து கிடந்தது. அதே போல யவனர்கள், கிரேக்கர், அராபியர் என வணிகத்தொடர்பு தமிழ் நாட்டுடன் மிகச் சிறப்பாக வைத்திருந்தனர். அதனைப் பதிவும் செய்தனர்.
கிரேக்கப் புவியியலாளர் ஏரடோஸ்தெனிசு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழ்நாட்டின் குமரித்தெய்வத்தை பற்றியும் தமிழர் அத்தெய்வத்தை வழிபட்ட முறை பற்றியும் தன் நூலில் குறிப்பிடுகிறார். கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிரேக்க வணிக வழிகாட்டு நூலிலும் இதைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டு வணிகர்களின் சிறப்பைப் பற்றி அளவளாவினோம் . சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தமிழக வணிகர்களின் கடல் கடந்த வணிகத்தைப் பற்றி நம்மால் அறியமுடிகிறது. கப்பலில் கடற்பயணம் செய்து மணிபல்லவம் ,சாவகம், போன்ற தீவுகளுக்குச் சென்று பசிப்பிணி அகற்றிப் புத்தமதத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது.
கடார நாட்டு திரு விஜய மன்னர்களிடம் தமிழக வணிகர்கள் நல்லுறவு கொண்டார்கள். வாணிகத்தைப் பெருக்க திரு விஜய மன்னர்களும் விரும்பித் தமிழக வணிகர்களுக்கு நல்லாதரவும் கொடுத்தார்கள். அவர்கள் சீனர்களுடனும் வணிக உறவு கொண்டிருந்தனர். அவர்கள் வழியேதான் சீனருடன் தமிழகவணிகர்கள் வாணிகஞ் செய்திடவேண்டிய சூழல் இருந்தது. அதனைத் தமிழ் வணிகர் விரும்பாது சீனருடன் நேரடித் தொடர்பு கொள்ள விரும்பி தம் மன்னர் சோழப் பெருவேந்தன் இராஜ இராஜனிடம் தங்கள் பிரச்சினை குறித்து முறையிட்டனர்.
மன்னனும் ஒற்றர்களை அனுப்பி கடார நாட்டு நிலை அறிந்து படைகளை இளவரசர் இராஜேந்திர சோழன் தலைமையில் அங்கு அனுப்பி எதிர்பாராமல் திடீரென்று தாக்கி திரு விஜய மன்னரை நிலைகுலைய வைத்துத் தோற்கடித்தார். கடாரத்திலிருந்து சோழநாட்டுக்குப் பெரும்பொருள் கொண்டுவந்து சேர்த்தார் இராஜேந்திர சோழன்.
தமிழ் நாட்டு வணிகரும் மகிழ்ச்சியுடன் சீனருடன் நேரடி வணிகத்தில் ஈடுபட்டனர். சோழப் பெருவேந்தரிடம் தமிழ் நாட்டு வணிகர்களின் பெரும் செல்வாக்கு இதன் வழியே நமக்குப் புலனாகிறது.
சீனாவில் உள்ள தக்கு-ஒ-பாவில் தமிழ்க்கல்வெட்டுக்களில், ஐநூற்றுவர், எண்ணூற்றுவர், ஆயிரத்து ஐநூற்றுவர் என்னும் வணிகர் குழுக்களைப் பற்றிய குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன.
அப்படிப் பல நாடுகட்கும் சென்ற தமிழ் வணிகர்கள் தம்முடன் வடமொழி தெரிந்த சிற்பிகளையும், கடவுள் வழிபாட்டுக்குத் துணையாக புரோகிதர்களையும் அழைத்துச்சென்றனர். சென்ற இடங்களில் கோயில்கள் கட்டினர். பல கல்வெட்டுக்களைத் தமிழிலும், பிராகிருத மொழியிலும் பதிவு செய்தனர்.
இவ்வளவு செய்திகளையும் பேரா. சிங்கார வேலனாரிடம் அறிந்து கொண்டு அவருடைய ஆய்வுக் கட்டுரையையும் பெற்றுக் கொண்டு புறப்பட்டோம் !
ஒரு வினாடி கூட தாமதியாது கடாரம் (இன்றைய கெடா மாநிலம்) நோக்கி கூலிம் செல்லும் பேருந்தில் நாங்கள் சென்றமர்ந்தோம். சிங்கப்பூரிலிருந்து வரும்போது வழியெங்கும், இங்கு மலையகத்திலும் கடைகளின் பெயர்ப் பலகைகளில் நல்ல தமிழைக் கண்ட போது , தமிழ் நாட்டில் கடைகளில் தமிழ்ப் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டுமென்று தமிழக அரசு கூறுவதை தமிழ்த்திணிப்பு என ஊளையிடும் குள்ளநரிகளின் கூட்டத்தை எண்ணி எண்ணி சிரித்துக் கொண்டோம்.
கூலிம் கல்வியியல் கல்லூரியின் மொழியியல் பேராசியர் மணியரசன் பேருந்து நிலையம் வந்து எங்களை கூலிம் விடுதியில் தங்கவைத்த போது இரவு
மணி ௰ (10) ! சிறிது கடாரங் கொண்டானைப் பற்றி உரையாடிவிட்டு உறங்கச்சென்றோம் .
- கோ.கண்ணன் , பா.இறையரசன், தா.இளங்குமரன்
No comments:
Post a Comment
தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்: