Thursday, December 9, 2010

கல்வியும் மரக்கன்றும்

                           தெம்மாவூரில் சிங்கப்பூர் தெம்மாங்கு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையிலிருந்து உள்ளே 10 கல் தொலைவில் படு மோசமான சாலையில் இருக்கிறது தெம்மாவூர் என்கிற சிற்றூர். அந்த ஊரையும் தாண்டி வீடுகள் குடிசைகள் எதுவுமே கண்ணில் படாத இட்த்தில் ஐந்துஆறு இளைஞர்கள் சிறு மேடை அமைத்துக் கொண்டிருந்தனர். ஒரு வண்டியில் பெண்கள் வந்து இறங்கினர். வேலை செய்து கொண்டிருந்த இளைஞர்கள் கைகளில் சிறு இலையைக் கொடுத்து அதில் தயிர்சோறு அளித்தனர். அடுத்து வந்த வண்டியில் ரெட்டிப்பாளையம்  இசைக் கலைஞர்கள் 
சோறெல்லாம் வேண்டாம்மா என்று கூறிவிட்டு நெருப்பை மூட்டிப் பறைகளுக்குச் சூடேற்றினர். பறை ஒலிக்கு ஏற்ப அவர்கள் ஆடத்தொடங்கினர்.  தாரை, தப்பு, மேளம் 

என்று அவர்கள் அடித்த அடியில் சுற்று வட்டாரமே அதிர்ந்தது.





சிறிது நேரத்தில் அந்த மிகச்சிறிய சாலையில் ஒரு பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து  சீன மாணவர்கள் கிடுகிடுவென இறங்கி ஒடோடி வந்தனர். அடுத்து மலாய் மாணவர்கள் சிலர் வந்தனர். கடைசியாகத் தமிழ் மாணவர்கள் சிலர் வந்தனர். மொத்தம் இருபது பேர் இருக்கும்,  ஆட்டம்போடத் தொடங்கினர். ஆனால் ரெட்டிப்  பாளையம் குழுவினரின் ஆட்டத்தைப் பார்த்து வியந்து நின்றுவிட்டனர். சிறிது நேரத்தில் விழா தொடங்கியது.
      அறக்கட்டளையின்  செயலர் முனைவர் பா.இறையரசன் தலைமை ஏற்று எழுத்தேணி அறக்கட்டளை பற்றி விளக்கினார். பள்ளி, மாணவரில்லம் ஆகியவற்றுடன் இயற்கைஉழவு சார்ந்த விளைநிலம் என்னும் திட்டத்தில் இன்று மரக்கன்று நடும் விழா இங்கே நடைபெறுகிறது என்றும்,ம்முடைய மாணவர் சகாயராசு சிங்கப்பூர் ஃபூச்சூன் பள்ளியில் தமிழாசிரியர் ஆகி, இன்றைக்கு 20 மாணவர்களுடன் சுற்றுலா வந்துள்ளார்  என்றும் அவர் கூறியதும்தான் வந்துள்ள சீன மலாய், தமிழ் மாணவர்கள் சுற்றுலா வந்தவர்கள் என்று தெரிந்தது.

அறக்கட்டளையின் நிறுவனர் சகாயராசு வரவேற்றார். மாணவர்களிடமிருந்தோ, பெற்றோர்களிடமிருந்தோ, பொதுமக்களிடமிருந்தோ நன்கொடையோ கல்விக்கட்டணமோ பெறாமல் இலவயக்கல்வி தர, பள்ளி, விடுதி ஆகியவற்றுடன் அமைந்த விளைநிலத்தில் இயற்கை உழவு மேற்கொள்ளப்பெறும்; முதலில் ஆழிப்பேரலை (சுனாமி) முதலிய இயற்கை ஏதங்களால் உறவிழந்த (அனாதை) குழந்தைகள், தாழ்த்தப்பெற்ற ஊனமுற்ற ஏழை மாணவர்கள் சேர்க்கப்பெறுவர் என்று சகாயராசு கூறினார்.

              சென்னையிலிருந்து வந்திருந்த வரலாற்றறிஞர் கோ.கண்ணன் (முன்னாள் பாரத வங்கி அதிகாரி) தமிழகத்துக்கும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்பைச் சீனப்பயணிகள் பதிவு செய்துள்ளனர்; சுற்றுலா வந்துள்ள சீன, மலாய், சிங்கபுர மாணவர்களை வரவேற்கிறேன் என்றார்.
சென்னை மண்டலக் கல்லூரிக் கல்வித்துறையின் துணை இயக்குநர் திரு அ. மதிவாணன் சீன மலாய் மாணவர்களுக்காக ஆங்கிலத்தில் பேசினார். கல்வி, வரலாறு, இலக்கியம் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் சகாயராசை விட அவரது பெற்றோரைப் பாரட்டவேண்டும் என்று கூறி அவரது தந்தையார் திரு டேவிட் அவர்கள் கையை உயர்த்தி, அனைவரையும் கைதட்டிப் பாராட்டச் செய்தார்.  “தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்”  ஆகவும் “அவையத்து முந்தியிருப்பச்” செய்த தந்தையாகவும் நெகிழ்ந்தார் டேவிட். அவருக்கு ஃபூச்சூன் பள்ளி சார்பில் அப்பள்ளியின் ஆசிரியர் திரு வே. பச்சைப்பெருமாள் நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்பு செய்தார். இசை விய ஆசிரியர் எஃசுடீ லிம் தமிழகப்பயணமும் இவ்விழாவும் மறக்கமுடியாதவை என்று கூறினார். மாணவன் தௌபீக்கும் மாணவி துரியாட்சிணியும் தங்கள் பயண அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
கல்விப் பயிர் வளர்க்கும் இம்முயற்சிக்குத் தொடக்கத்தில் இருந்தே ஒத்துழைப்பு நல்கி வரும் இயற்கை உழவியல் இயக்க இளைஞர்கள் ஆனந்தராசும் பிரசன்னாவும்  மரக்கன்றுகளைக் கொண்டு வந்திருந்தனர். பள்ளிக்கட்டடம் கட்டவுள்ள நிலத்தின் நான்கெல்லையிலும் வந்திருந்த மாணவர்களும் விருந்தினர்களும் மரக்கன்றுகளை நட்டனர்.அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராகிய தங்கமணி ஆவார்.
வண்டியில் வந்து தயிர்சோறு அளித்த அந்த பெண்கள் மறுபடியும் வண்டியில் ஏதோ கொண்டு வந்தனர்; எல்லோருக்கும் அவர்கள் நெல்லிக்கனியும், சுக்குத்தண்ணியும் (காப்பியும்) கொடுத்தனர். கொடுத்தவர்கள் வேறு யாருமில்லை சகாயராசு என்னும் அந்த ஆசிரியரின்அக்கா, தங்கைகள்தான். வண்டியை ஓட்டிவந்தவர்கள் அவரது தங்கை கணவரும் தம்பிகளும்தான். குடும்பம் ஒரு கோயில் என்பார்கள். சகாயராசு குடும்பத்தினர் அனைவரும் ஒரு தென்னந்தோப்பாக இருந்து உலகத்தரமுடைய இலவயக்கல்வி, மாணவர் இல்லம், இயற்கைஉழவியல் உணவு உற்பத்தி ஆகிய ஆலமரத்தோப்புக்கு மரக்கன்று விழா நடத்தியுள்ளனர்.




விரைவில் செயற்கை உரமோ பூச்சிமருந்துகளோ இடாமல்  காய்கறிகளும் தானியங்களும், மூலிகைகளும் இங்கே விளையும்;  நல்ல கல்வி பெற்ற மாணவச்செல்வங்களும் தோன்றுவார்கள்.
                                         -செய்தியாளர்: அ.வள்ளி. 




No comments:

Post a Comment

தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers