Sunday, September 11, 2011

“இன்றே போல்க நும் புணர்ச்சி”


                     
                        பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நீக்கக்கோரி கடந்த 28 ஆம் தேதியன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு மக்கள்மன்றத்தைச் சேர்ந்த இளம்பெண் செங்கொடி தீக்குளித்து இறந்தார். ஊர்வலமாக 7 மணி நேரம் சென்று, செங்கொடியின் சொந்த ஊரான மேல்கதிர்பூர் மங்கல்பாடியில்   பூங்காவில் செங்கொடியின் வீர உடல் நல்லடக்கம் செய்யப்பெற்றது. குற்றவாளிகள் அல்லாத மூவர் மேல் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை நீக்கக் கோரி சென்னை கோயம்பேட்டில் சாகும்வரை உண்ணாநிலைப்போராட்டம் நடத்திய மூன்று பெண் வழக்கறிஞர்கள் அங்கயற்கண்ணி என்கிற கயல்விழி, வடிவு, சுசாதா  ஆகிய மூவரும்  வந்திருந்த மகளிரும் ஆர்வலர்களும் கண்ணீர் விடுக் கதறி அழுதனர்.

                 செங்கொடியின் நினைவை போற்றும் வகையில் மங்கல்பாடியில் உருவச் சிலையும் திறக்கப்பட்டது. வீரவணக்க இரங்கல் கூட்டத்தில் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான், நல்லக்கண்ணு, பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசப் பொது உடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் மணியரசன், அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி ஐசக், இயக்குர் அமீர், சேரன்,மணிவண்ணன், நடிகர் சத்தியராசு உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், மனித உரிமை அமைப்பினர்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

                 அரசியல் கட்சித்தலைவர்கள் ஆளுக்கொரு  நாள் உண்ணாநிலைப்போராட்டம், மனிதச்சங்கிலி, மறியல் எனப் பிரிந்து செயல்பட்டு வந்த நிலையச் செங்கொடி தன் உயிரீந்து மாற்றினாள் என்று தமிழின ஆதரவாளர்கள் பேசினர். எல்லா வகையிலும் தான் விட்டுக்கொடுத்துத் தமிழர் நலனுக்காகப் போராடவருவதாகத் திருமாவளவன் கூறியதையும், எவ்விடத்திலும் கட்சிக் கொடியையோ முழக்கத்தையோ செய்யக்கூடாது என்று தடுத்துவைத்திருந்த வைக்கோவின் பெருந்தன்மையையும், ஒற்றுமையான களத்தை உருவாக்கிய சீமானையும்  அனைவரும் பாராட்டினர். கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து மக்களும் திரண்டு கண்ணீருடன் கூடியிருந்ததைக் கண்டபோது, அரசியல் தலைவர்களும் ஒன்றுபட்டு மேடையில் இருந்ததைப் பாராட்டி, “இதே போல் ஒற்றுமையாக இருந்தால், இராச பக்சேயை ஐ.நா.குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியும்; இரண்டு மாதத்திற்குப் பின் வழக்கு நடக்கும் போது தூக்குத்தண்டனையிலிருந்து மூவரையும் காப்பாற்றி விடுதலை பெறச் செய்ய முடியும்; ஈழத்தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் காப்பாற்ற முடியும்; காவிரி பாலாறு உரிமைகளையும் பெற்றுவிட முடியும்” என்ற நம்பிக்கை துளிர்த்தது. தமக்குள் போரிட்டுக்கொண்டிருந்த மூவேந்தர்களையும் ஒன்றாகக் கண்ட பொழுது ஔவையார் மகிழ்ந்து,  “இன்றே போல்க நும் புணர்ச்சி” என்று வாழ்த்தினார் அல்லவா! அவ்வாறு நாமும் செங்கொடியை வணங்கி தன்னலம் மறந்து மக்கள் நலத்திற்காக ஒற்றுமையாகிய அனைத்துஅரசியல் தலைவர்களையும் வாழ்த்துவோம்! வாழ்த்துவோம்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers