துணைவேந்தர் பொன்னவைக்கோ வற்புறுத்தல்
-----------------------------------------------------
எழுத்தேணி அறக்கட்டளை, எண்ணம் அறக்கட்டளை, தமிழ்
எழுச்சிப் பேரவை ஆகியன இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டுவிழா 01/12/2012 காலை 10
மணிக்குச் சென்னை திருவல்லிக்கேணி அரசு அலுவலர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.
சென்னை வருமானவரித்துறை ஆணையர்
செந்தாமரைக்கண்ணன் தலைமையில் விழா நடைபெற்றது.
வரலாற்றறிஞர் தஞ்சை கோ.கண்ணன் வாழ்த்துகிறார் |
பாவைபதிப்பகம் வெளியிட்ட தஞ்சை இறையரசன் எழுதிய “செம்மொழியும் சிவந்த
ஈழமும்“, “பாலியல்+வன்முறை=திரைப்படம்“ என்னும் இரண்டு
நூல்கள் வெளியிடப்பெற்றன.வரலாற்றறிஞர் கோ.கண்ணன் பேசுகையில் காலத்தால் அழியாத உயர்
தொழில் நுட்பத்தின் சொந்தக்காரர்கள்
தமிழர்களே என்பதைப்பற்றிப் பேசி மரபுசார் கட்டடக் கலை பற்றிய அரசுகல்லூரிப்
படிப்புகள் நலிவடைந்து வருகின்றன அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
தான் பிறந்த ஊராகிய
திருவண்ணாமலை அருகிலுள்ள தென்மாதி மங்கலம் என்ற ஊரில் அறக்கட்டளை மூலம் ஏறத்தாழ 20
இலட்சம் ரூபாய்க்கு பள்ளிக்கூடம் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் காவல் நிலையம்
ஆகியனவற்றைப் புதுப்பித்து நற்பணிகள் செய்துள்ள தொழிலதிபர் ந. இராமகிருட்டிணனையும்
அவர் மனைவி மருத்துவர் இரேணுகா இராமகிருட்டிணனையும் பாராட்டி தஞ்சை எழுத்தேணி
கல்வி தொண்டு அறக்கட்டளை நிறுவனர் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் தா.இளங்குமரன்
வாழ்த்தினார். மரபுசார் கட்டடக்கலைப் பட்டயப்படிப்பை எசு.ஆர்.எம்.
பல்கலைக்கழகத்தில் தொடங்கப் பெறவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மருத்துவர் இரேணுகா இராமகிருட்டிணன், தொழிலதிபர் இராமகிருட்டிணன், துணை வேந்தர் பொன்னவைக்கோ, ஆணையர் செந்தாமரைக்கண்ணன், இறையரசன் |
எசு.ஆர்.எம்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ பேசுகையில் பாவாணர் கூறிய
மொழியியல் உண்மைகள் உலகம் முழுவதும் உள்ள மொழிகளில் தமிழ்ச் சொற்கள் உள்ளதால்,
உறுதியாகின்றன. பிற மொழிக் கலப்பில்லாமல் பேசவேண்டும் என்றார். தாய் மொழியாம்
தமிழில்தான் படிக்கவேண்டும். பிற மொழிகளை மொழிக் கல்வியாகப் படிப்பதில் தவறில்லை
என்றார்.
முனைவர் பொன்னவைக்கோ
ஒவ்வொரு ஊரிலும் உள்ள செல்வந்தர்கள் தனியார் பள்ளிக்கு இணையாகவும் உலகத் தரம்
வாய்ந்ததாகவும் தமிழ் வழியிலான பள்ளிகளை நிறுவ வேண்டும் என்றார். தொழிலதிபர்
இராமகிருட்டிணன் தம் ஊர்ப்பகுதியில் தமிழ்ப்பள்ளி தொடங்குவதாக வாக்குறுதி
அளித்தார்.
எண்ணம் அறக்கட்டளை
நடத்தும் கவிஞர் தனசேகரன், தனித்தமிழ் வேங்கை மறத்தமிழ் வேந்தன், மறைமலையடிகள்
பெயரன் தி.தாயுமானவன், ஆரூர் தமிழ் நாடன் முதலியோர் பேசினர்.
அன்றில் பதிப்பகம்
இறையெழிலன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்: