Sunday, October 21, 2012

மதுக்கடைகளை மூடுங்கள்!



              நாம்தமிழர் ஆட்சிமொழிப்பாசறை வேண்டுகோள்

சென்னை வியாசர்பாடி அருகில் கண்ணதாசன் நகரில் உள்ள எண்ணம் அறக்கட்டளை நடத்திவரும்   குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டோர் மறுவாழ்வுமையமும் நாம்தமிழர் ஆட்சிமொழிப் பாசறையும் இணைந்து   நடத்திய தன்னம்பிக்கைப் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. சிறப்புரை ஆற்றிய முனைவர் இறையரசன்  பேசுகையில்  ஏழைமக்களும் படித்தவர்களும்  மட்டுமல்லாது, மாணவர்களும் பெண்களும் கூட குடியால் அழிந்துவருகின்றனர்; அவர்களைக் காப்பாற்ற அரசு மதுக் கடைகளைப் படிப்படியே மூடவேண்டும் என்றார்.

மனந்திருந்தியோருடன் பேராசிரியர் இறையரசன் (நீலத்துண்டு அணிந்தவர்),கவிஞர் குணசேகரன், கவிஞர் தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்


குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டோர் மறுவாழ்வு மையத்தை நடத்திவரும்  கா. தனசேகரன் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அவர்,  இம்மையத்தில் மனநல மருத்துவர், பொது மருத்துவர் ஆகியோரும் இங்கு பணியாற்றுகின்றனர்;மருந்து மாத்திரைகள் ஆகியவற்றைவிட மன உறுதியே மாற்றம் தரும்; அதற்காக மனவளக்கலை, ஓகப் பயிற்சிகள் ஆகியன இங்கு  தரப்படுகின்றன என்றார். எண்ணம் அறக்கட்டளையின் சார்பில் குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டோர் மறுவாழ்வுமையத்தில் மூன்று மாதப் பயிற்சி அளித்து, இதுவரை 5000  பேர் மீட்கப்பட்டுள்ளனர்; மதுப்பழக்கத்திற்கு ஆளாகி இம்மையத்தால் திருந்தியவர்கள் 10 பேர், இங்கே ஊழியர்களாகப் பணியாற்றுகின்றனர். குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்கள், திருந்திப் பெரிய அறிவாளிகளாகவும் சிறந்தவர்களாகவும் புகழ்பெற்றுவிளங்குவதையும் கூறி,  மருந்தும் கொடுத்து உணவும் தந்து, தங்குமிடமும் அளிக்கப்படுகிறது என்றார்.

நாம்தமிழர் ஆட்சிமொழிப் பாசறைப் பொறுப்பாளர் தனித்தமிழ்வேங்கை  மறத்தமிழ்வேந்தன்  “தமிழ்மீட்சியும் தன்னம்பிக்கையும்” என்ற தலைப்பில் பேசுகையில்,    மது மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கும் மக்களுக்குத் தாம் தெருவில் விழுந்து மானம் இழந்து மதி இழந்து கிடப்பது புரியாது; மொழி மீட்பும் இன மீட்பும்  செய்ய அவர்களை மீட்பதே முதற் கடமை என்று பேசினார். 

“குடியை மறப்போம்! குடிகளைக் காப்போம்!” என்ற தலைப்பில் பேசிய இறையரசன், இன்று தமிழர்கள் தம் அறிவையும் உரிமைகளையும் பண்பாட்டையும் பொருளாதாரத்தையும் இழந்து வருகின்றனர் ; குடிப்பழக்கத்திற்கு ஆளாவது புற்றுநோயைவிடக் கொடியது; அந்நோய்க்கு உள்ளாக்குவதை  அரசே செய்யக்கூடாது; உடனடியாக மீளமுடியாத இத்தீய பழக்கத்திலிருந்து மதுக்குடிமக்களை மீட்கும் அதேவேளையில்,  விரைவில் படிப்படியே மதுக்கடைகளை மூடவேண்டும் என்று கூறினார்.

தமிழ்நாடு முழுதும் திருக்குறள் கூறும் கள்ளுண்ணாமையைப் பரப்பித் தமிழ்இனத்தையும் பண்பாட்டையும் மீட்டுவரும் நாம்தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமானைப் பாராட்டிய தனசேகரன்,  நாம்தமிழர் ஆட்சிமொழிப் பாசறையுடன்  இணைந்து இம்மையம் ஊர்தோறும் வகுப்புகள் நடத்தும் என்றார். இம்மையத்தின் ஊழியர் விசுவநாதன் நன்றி கூறினார்.  இக்கூட்டத்தில் இப்போது  மருத்துவம் பெற்றுவரும் 40 பேரும்  எண்ணம் அமைப்பின் ஊழியர்களும்  பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers