ஆடம்பரத் திருமணங்களும் விழாக்களும்
-
தஞ்சை இறையரசன்
அன்றாடம் செய்யும் இயல்பான வாழ்க்கை நடைமுறைகளையும்
கடமைகளையும் செய்து செய்து அலுத்துப் போகிற மனிதனுக்கு விழாக்கள் மகிழ்ச்சியைத்
தருகின்றன. குடிபுகுவிழா, திருமணம் முதலிய
குடும்பவிழாக்களும் பொங்கல், திபாவளி, முதலிய வீடுசார்ந்த பொது விழாக்களும் கோயில் திருவிழா,தீமிதிவிழா
முதலிய ஊர்த் திருவிழாக்களும் பள்ளி கல்லூரி, விடுதி, நிறுவன ஆண்டுவிழாக்களும்
பேருந்து/தொடர்வண்டி நாள் விழாக்களும் குடியரசுவிழா,சுதந்திர தின விழா முதலிய நாட்டு
விழாக்களும் சங்கம், கட்டு, நிறுவனம்,கல்வி நிலையம், தொழிலகம் அரசு ஆகியன நடத்தும்
விழாக்களும் மிக அதிகச்செலவில் ஆடம்பரமாக இன்று நடத்தப்படுவது
பெருகிவருகிறது. இவை மகிழ்ச்சி தருவது
உண்மைதான் என்றாலும் பல சிக்கல்களும் தருகின்றன.
இன்பத்துக்கு உரியவற்றையும் துன்பமாக்கிக் கொள்ளும் மனிதர்களை என்ன சொல்வது
?
ஆடம்பர அலை:
குடும்பவிழாக்களில்
காது குத்து, பூணூல்கலியாணம், பூப்புநீராட்டுவிழா, மணஉறுதி (நிச்சயதார்த்தம்), திருமணம் முதலியவற்றைத் தத்தம் பொருள் வசதிக்கேற்ப எளிமையாகக் குறைந்த
செலவில் செய்வதுதான் வழக்கமாக இருந்தது.
ஆனால் இப்போது குடும்ப விழாக்களே மாநாடுகள் போல் நடத்தப்படும் நிலை
வளர்ந்து வருகிறது. வருகிறவர்களுக்கு
சாப்பாடு 100 உரூபாய் என்றால் அழைப்பிதழ் 200 உரூபாய், பதாகை (பேனர்) விளம்பரம்
10,000 உரூபாய்; ஊரெல்லாம் தூங்கமுடியாதவாறு ஒலிபெருக்கியை
அலறவிடுவதும் இரவெல்லாம் காணொளியில் (‘வீடியோ’-வில்) திரைப்படங்களைக் காண்பதும் பெருகி உள்ளன. உணவில்,
நகையில்,சிக்கனம் பிடித்தாவது மாமனார் கடனில் கறந்தாவது திருமண நிகழ்ச்சியைப்
படம் (‘வீடியோ’) எடுக்க
வேண்டும் என நடுத்தரக்குடும்பங்களும் அலைமோதுகின்றன.
குழந்தைகளுக்கும் ஆடம்பரம்:
குழந்தைகளின் பிறந்த நாளில்
பலூன்கட்டி ‘கேக்’ வெட்டி ‘ஹேப்பி பர்த் டே டு யூ’ பாடி ஆங்கிலேயராகும் மகிழ்ச்சி பல வீடுகளில் பரவியிருக்கிறது. குழந்தைகள் பள்ளியிலும் தம் பிறந்த நாளைக் கொண்டாடித்
தம் பணக்காரத் தன்மையை வெளிப்படுத்த மற்ற குழந்தைகள் ஏங்குகின்றன. பிறந்தநாளுக்கு மிக அதிக விலையில் உடையணிந்து
விலை உயர்ந்த மிட்டாய் அல்லது இனிப்பு வழங்கும் குழந்தைகளால்
போட்டி, பொறாமை, ஆடம்பரம் முதலியற்றை அடுத்த குழந்தைகள் மனத்திலும் வேறுபாட்டை
ஆசிரியர்கள் மனத்திலும் ஏற்படுத்துகின்றன.
இப்போது பெரியவர்களும் தம் பிறந்த நாளைக் கொண்டாடுதல்,
திருமண நாளைக் கொண்டாடுதல் என வளர்ந்துள்ளது. சுவரொட்டிகள்வைத்தும் கஞ்சி காய்ச்சி ஊற்றியும் ‘கட்அவுட்’வைத்துஅதன்மேல் பாலை ஊற்றியும் சாராயத்தை ஊற்றியும் தலைவர்களின் பிறந்த நாளையும் நடிகர்களின் பிறந்த
நாளையும் ஆடம்பரமாகக் கொண்டாடுகின்றனர்.
ஓலையா? வலையா?
மணப் பெண்ணையும் மணமகளையும் உறுதி
செய்து ஓலை எழுதுதல்(நிச்சயதார்த்தம்) மிகச்சிறிய அளவிலிருத்து பெரிய திருவிழா
அளவுக்குச் செய்யப்படுகிறது. இன்னார்க்கு இன்னார் என்று முடிவு செய்வதை மிக நெருங்கிவர்கள் சிலர்
இருந்து முடிவு செய்து ஓலை எழுதினால் போதாதா? பெரியோர்கள் முடிவுசெய்தபின்
சடங்காக இது தேவையில்லை என்பதால்
நிச்சயதார்த்தம் இன்றியே நேரடியாகத் திருமணம் செய்வோர் உண்டு.
நிச்சயதார்த்தத்தைத் திருமணத்தின் முதல்நாளில் பெயருக்குச் சடங்காகச் செய்வோரும்
உண்டு; 10 கல்யாணத்துக்கு நிகராகச் செய்வோரும் உண்டு.
மணமா? மாநாடா?
திருமண அழைப்பிதழில் மணமகன்
மணமகள் பெயர்கள் எவை என்று தெரியாதபடி மாமன்,மச்சான், மச்சானின் மச்சான் என உறவினரின்
பெயர்கள் – குறிப்பாகப் பெரிய பெரிய பதவிகளில் உள்ளவர்கள் பணக்காரர்கள் அரசியல்வாதிகள்
பெயர்கள் – பெரும் பட்டியலாக இடம் பெறும்.
திருமணத்தின் போது வாழ்த்துரையாளர்கள் ‘வாழ் வாழ்’ என்று கத்த குழந்தைகள் ‘வாள் வாள்’
என்று கத்த உறவினர்கள் தமக்குள் குசலம் பேச, பிறர் அரசியல், திரைப்படம் பற்றிப்
பேச ஏன் இப்படிக் கூச்சல்குழப்பம்? ஒருபக்கம் அய்யரோ, அரசியல் வாதியோ
அலறிக்கொண்டிருக்க மறுபுறம் சோற்றுக்கடை சந்தடி வேறு.
பணம் நிறைய இருக்கிறது, நிறைய
அறிமுகம் இருக்கிறது என்பவர்கள் பெரும் மாநாடு போல் ஊரையே கூட்டித் திருமணம்
செய்கின்றனர்; எனினும் இது தவறான எடுத்துக் காட்டாகிக் கொள்ளையடித்துச் சேர்த்த
பணத்தில் எலும்புத்துண்டு போடுவது போல் மக்களைக் கூட்டவும் வழிவகுக்கிறது. இத்தகைய புதுப் பணக்காரர்களின் சமுதாய
மதிப்புக்காகவும் அவர்கள் முகம் தாம் பெற்ற அல்லது பெற நினைக்கும்
ஆதாயத்துக்காகவும் ஆட்டுமந்தை போல் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அந்தப்
பணக்காரர்களுடைய பணத் தகுதியைக் கருதித் தம் தகுதிக்கு மீறிப் பலர் மொய்
(அன்பளிப்பு) செய்கின்றார்கள்.
அலுவலக விழாவா ?
திருமணங்கருக்கும்
குடும்பவிழாக்களுக்கும் செல்ல வேண்டும் என்று அலுவலகங்களிலும் கல்வி நிலையங்களிலும்
தொழிற்சாலைகளிலும் ஒரே நாளில் பலர்
விடுப்பு அல்லது அனுமதி கோருவதால் எவ்வளவு பணிகள் முடங்குகின்றன? நன்கு
அறிமுகமானவர்களும் நெருங்கிப்பழகியவர்களும் மட்டும் போனால் போதாதா ? நூற்றுக்
கணக்காகப் பலர் பணியாற்றும் நிறுவனத்தில் அறிமுகம்கூடக் குறைவாக இருக்கும். முகம்
தெரியாத அல்லது பழகாத ஒருவரின் திருமணத்திற்கு எல்லோரும் போக வேண்டுமா? உடன்
பணியாற்றுபவர் அல்லது கட்சித்தலைவர் குடும்பநிகழ்ச்சிகளுக்கு மட்டும் அல்லாமல்
அவரது நெருங்கிய உறவினர் இல்ல நிகழ்ச்சிகளுக்கும் மொய் திரட்டுவது, அன்பளிப்பு
வாங்குவது, பேருந்தில்/லாரியில்/ டிரெய்லர்
வண்டிகளில் செல்வது
பெருகிவருகிறது.
கண்டவனும் கொடுத்தவனும்
முகூர்த்த நாள் குறிப்பிட்ட ஒரே
மாதத்தில் ஒரே நாளில் பலர் விடுப்பு எடுப்பது, பலர் செல்வது எவ்வளவு பாதிக்கும்? ஒரே
நாளில் பல திருமணங்கள், பல ஊர்களில் என்றால் எப்படிச் செல்வது? இதனால்
போக்குவரத்து நெரிசல், திடீர்ச்செலவு, உடல் நலிவு, பணிப்பாதிப்பு, குழந்தைகளின் கல்விப்பாதிப்பு, குடும்பக் கடமைகளில் சிக்கல் எல்லாம் ஏற்படுகின்றன. “கண்ட
பயலும் அழைப்பிதழ் கொடுக்கிறான்” என்று திட்டிக் கொண்டே செல்கின்றனர், கண்டவர்களையும் முன்பு தான் அழைத்துத் தன் வீட்டுக்கு வந்தவர்கள் என்பதால் ! இருநூறு ரூபாய்
செலவு செய்து கொண்டுபோய் இருபது ரூபாய் ‘மொய்’ எழுதிவருவர். வாழ்த்து மடலுடன் ரூபாய்
அனுப்பியிருந்தால் அலைச்சலும் பிறவும் மிச்சம்.
அவர்களுக்கும் கடன் வாங்கிச் செலவு செய்து விட்டு
மொய்ப் பணம் வந்ததில் கடனுக்கு வட்டி அளித்துக்
கொண்டிருக்க வேண்டியதில்லை.
அழைப்பு கொடுத்து சண்டை வாங்கி
என்னைக் கூப்பிடவில்லை,என்னை
முதலில் கவனிக்கவில்லை, எனக்கு மரியாதை தரவில்லை என்றெல்லாம் சிறு சண்டைகளில்
தொடங்கி சாராயம் அடிதடி அரிவாள் வரைக்கும் வளரும். மகிழ்ச்சிக்கு மாறாகக்
கூச்சலும் குழப்பமும் சண்டையும் பகையும் ஏன்? அழைப்பிதழ் அச்சடித்தல்,கொடுத்தல்,
அலைச்சல, பணம் புரட்டல், செலவு, மளிவு, காய்கனி
வாங்குதல், மண்டபச் செலவு, வரவேற்றல், தொழிலாளிகளைக் கெச்ஞிக் கூத்தாடி அழைத்து
வருதல், வேலை வாங்குதல், ஏமாறுதல், திருட்டு, இவை எல்லாவற்றுக்கும் உள்ளாகிக்
கடைசியாக இவைதான் பயனா? மகிழ்ச்சிக்கு மாறாகக் கூச்சலும் குழப்பமும் சண்டையும்
பகையும் ஏன்? அகலக்கால் வைப்பதும் ஆடம்பரமும்தானே காரணம்.
பணம் சாப்பிட்ட செலவு
விழாக்கால உணவு மிக அதிகமான
பேருக்குச் செய்யப்படுவதால் தூய்மைக்குறைவும், சுமையின்மை, சூடு இன்மை, ‘டால்டா’
முதலிய ஒவ்வாத பண்டங்களின் சேர்க்கை, வேகாத நிலை முதலியன கொண்டுள்ளது. உடல் நலம் உள்ளவர்களையும் வயிற்றுக் கோளாறு,
பலநாள் நோய் உள்ளவர்களையும் ஒவ்வாதவற்றை உண்ணச் செய்கிறது. வீட்டில் நல்ல உணவு இருக்கப் பொது இடத்தில்
காத்திருக்க, இருபடி, மரியாதை இழக்க காரனமாகிறது. ஆயிரம் பேருக்கு உணவு
இருந்தும் நூறு பேர் முண்டியடித்து
நுழைகிற இழிவு.
பட்டினியாய்ப் பிச்சைக்காரர்களும்
ஏழைகளும் மண்டபத்துக்கு வெளியே பந்தலுக்கு அப்பால் குப்பைக் கூளங்களுக்கு அருகில் மிச்சம் மீதிக்குக்
காத்திருக்க, உள்ளே வசதியானவர்களும் வயிறு புடைத்தவர்களும் புளிச்சேப்பக்காரகளும்
பசிமாத்திரைக்காரர்களும் கூடிப் பலவகைத் தின் பண்டங்கள், காய்கனிகள், உணவுமுறைகள்,
சுவை நீர் வகைகள் ஆகியவற்றைக் கண்டு களிக்கவும் உண்டு கழிக்கவும் விருந்து. எச்சிலாக்கி வீணாக்குவது பாதி; ஆடம்பரமாகக்
காட்டிக் கொள்ள மிச்சம் வைப்பது மீதி எனப் பெரும் உணவுக்குவியல்
வீணாக்கப்படும். எல்லாவகை ஆடம்பரங்களிலும்
பணத்தைக் கொட்டிவிட்டு சமையலறையில் சிக்கனம் பிடிப்பவர்களின் விழாக் கூடங்களில்
இரண்டாவது பந்தியிலேயே காய்கறி, பாயசம் இல்லையென்றாகி வரவர ரசம் தண்ணீர் ரசமாகி
கடைசிபந்தி தண்ணீர் மட்டுமே என்றாவதும் உண்டு.
துணிவான செலவு
பொங்கல், திபாவளி அல்லது கிறித்துமஸ்
அல்லது ரம்சான் முதலிய விழாக்காலங்களில் எடுக்கப்படும் உடை (துணிமணி) வெடி (வானம்)
போதாதென்று பிறந்தநாள், திருமணம், காதுகுத்து முதலிய குடும்பவிழாக்களிலும் துணிமணி
வாணவேடிக்கை என்று துணிவான செலவு செய்கின்றனர்.
மாமன் மச்சான் வீட்டு விழாக்களில் மொய் எழுதி அல்லது அன்பளிப்பு செய்தும்
அவர்கள் திரும்பச் செய்யும் ‘மரியாதை’ துணிமணி (உடை) வரும்.
‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ (புறநானூறு)
என்பதை மறந்து, பீரோ நிறைய உடைகளை அடுக்கி வைப்பது பெருகிவடுறது. ஆயிரக் கணக்கில்
பணத்தை அள்ளிக்கொட்டி உடையில் – பட்டுப்புடவைகளில் - முடக்குவதில் என்ன பயன்?
சிறுகுழந்தைகளுக்கு எடுக்கப்படும் எண்ணற்ற வகைவகையான உடைகள் அவர்கள் மிக விரைவாக
வளர்வதால் – வளரவளரப் - பயனற்றுப் போகின்றன.
திபாவளி அன்று குழந்தைகள் ஏதோ சிறிது மத்தாப்பு, வெடி கொளுத்தினார்கள்
என்று இல்லாமல், எப்போதும் எதற்கெடுத்தாலும் வெடியும் வாண வேடிக்கையும் விட்டுக்
காசைக் கரியாக்குதல் தவறு.
ஒட்டாத சுவரொட்டிகள்
மிகப்பெரிய
நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் திரைப்பட அரங்குகளும் செய்யும் சுவரொட்டி
விளம்பரம் இன்று குடும்பத்திலும் நுழைந்துவிட்டது. குடும்பவிழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்துச்
சுவரொட்டி ஒட்டும் பழக்கம் மிக மிகுதியாகப் பரவி விட்டது. இவ்விழாவுக்கு வருகை தரும் அரசியல் தலைவர்களை
வரவேற்றும் சுவரொட்டிகள் பெருகுகின்றன.
ஆயிரம் ரூபாயில் முடிக்கும் கிராமத்துத் திருமணங்களில் கூட ஆயிரம் ரூபாய்க்கு
மேல் செலவு செய்து சுவரொட்டி அச்சடித்துக் கிராமங்களிலும் பக்கத்து நகரத்திலும் ஒட்டி
மகிழுகின்றனர். சுவரொட்டிக்கு செலவு
செய்து விட்டு விருந்துக்குச் செலவு செய்வதில்லை; விருந்தை கவனிப்பதில்லை; விருந்தினரைக் கவனிப்பதில்லை,
சுவரொட்டிச் செலவை வரதட்சணைக் கணக்கில் வைப்பவர்கள் உண்டு; நண்பர்கள் அல்லது கீழே
வேலை செய்பவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு இந்த வாழ்த்துச்
சுவரொட்டிகள் வருவதுண்டு.
விழாவா? விழவா!
குடும்பவிழாக்களிலும் அரசியல்
விழாக்களிலும் மிகுதியான மக்களை அழைப்பதால் குறிப்பிட்ட ஒரே நாளில் போக்குவரத்து
நெரிசல் ஏற்படுதிறது. டிராக்டர், லாரி
ஆகியவற்றிலும் பேருந்தின் மேலும் தொடர்வண்டிப் பெட்டியின் மேலும் பலர் பயணம்
செய்கின்றனர். இதனால் விபத்துகள்
நேருகின்றன. விழா மகிழ்ச்சியில் சாராயம்
குடித்துவிட்டு வண்டி ஒட்டுவதாலும் ஆடுவதாலும் விபத்துகள் சண்டைகள் ஏற்படுகின்றன.
ஆயிரக்கணக்கானோரை ஒரிடத்தில் திரட்டுவதைவிட இருமனங்களை ஒன்றாக இணைப்பதே உயர்ந்தது.
வலம் போனாலென்ன?
மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் கட்சி
ஊர்வலம் போல் சாலையை அடைத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக
நடைபெறுகிறது. பெண்கள் நகைக் கடையையே
கழுத்தில் அணிந்து வருவதும், சீர் எடுத்து வருவது என்று வரதட்சணைப் பொருள்களின்
கண்காட்சி ஊர்வலம் தடத்துவதும் நாட்டில் திருட்டையும் வரதட்சணைத் தீமையையும்
பரப்புவன அல்லவா? மாப்பிள்ளைய ஒரு காரில் அழைத்து வந்தது போக 100 கார் ஊர்வலம்
வருகிறது. பணம், பெட்ரோல், நேரம்,
போக்குவரத்து ஆகியவை இதனால் வீணாகின்றன.
அரசியல் கட்சிகளின் ஊர்வலம் என்றால் அடுத்த கட்சிக்காரர்களின் கடைகளை
உடைக்கப் பயன்படுகின்றது. மதவிழாக்களில்
ஏன் ஊர்வலங்கள்? சாமி புறப்பாடு, தேர், தெப்பம், தொழுகை, வேண்டல் என்று
உண்டு. இப்போது மிலாடி நபிக்கு ஊர்வலம்,
பிள்ளையார் சதுர்த்திக்கு ஊர்வலம், ரத ஊர்வலம், யாசம் செய்ய ஊர்வலம், கோயில் கட்ட
ஊர்வலம் என்று புறப்பட்டு வன்முறையை மதப் பகையை இனக்கலவரத்தை ஏற்படுத்துகின்றன.
கடமையா? கடனா?
‘கடனோட கடனா நெய்யூற்றிப்
பணியாரம் இடுவது’ என்பது பழமொழி. ‘என்கடன் கடன்வாங்கிப் பிணிப்பதே’ என்று தன்னையே
கடளில் பிணித்துக் கொள்வோர் உள்ளனர்.
திபாவளிக்குக் கடன் வாங்கித் துணியிலும் வெடியிலும் செலவழிக்க அரசாங்கமும்
கோ -ஆப்டைக்சும் துணிக்கடைகளும் தொலைக் காட்சியும் தூண்டுகின்றன, திருமணத்திற்குப் பணம் சேருங்கள்
என்று வங்கினார் விளம்பரம் செய்கின்றன; வாழ்நாளில் சேமித்ததை ஒரே நாளில் செலவு
செய்யவா? ஆடம்பரச் செலவு செய்யும் தொகைக்கு ஏதேனும் நகைகள் வாங்கினால்
வாழ்க்கையில் பொருளாதார இடர் இல்லாமல், இடர் நேர்கிற காலங்களில் யாரிடமும்
கடனுக்குக் கையேந்தாமல் நகையை அடகுவைத்தோ விற்றோ சரிசெய்து கொண்டு - வாழ
முடியும். ஏராளமாக்க் கடன் வாங்கிச் செலவு
செய்த மணப்பெண்ணின் பெற்றோர் அடுத்த பெண்ணைக் கட்டிக் கொடுக்க வழி இல்லாமல், பட்ட
கடனையும் அடைக்க முடியாமல் துன்பப்படுகின்றனர்.
விழாவே கூடாதா?
திருமணம் போன்ற குடும்ப விழாக்களையும், திபாவளி
போன்ற மதம் சார்ந்த குடும்ப விழாக்களையும், மதவிழாக்களையும், அரசியல்
விழாக்களையும் எளிமையாகவும் சிக்கனமாகவும் சமுதாயத்திற்குப் பாதிப்பு இல்லாமலும்
கொண்டாட வேண்டும். ஊர்வலம், வாணவேடிக்கை,
சுவரொட்டி, வீடியோ, கட்அவுட் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும் நம்மிடம் பணம் இல்லை
என்றாலும் கடன் வாங்கியாவது செலவு வாரி இறைக்க வேண்டும் என்றோ, நம்மிடம்
இருக்கிறது என்றோ - பெரும் ஆடம்பரச் செலவு செய்வது நம் பணத்தையும் மன அமைதியையும்
கெடுப்பது மட்டுமல்லாது சமுதாய நலத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும்
கெடுக்கும். மிகவும் நெருங்கிய உறவினர்கள்,
நண்பர்கள் அழைக்கப்பட்டால் போதும்; மற்றவர்கள் தொலைவிலிருந்தோ இயன்றபோது வந்தோ
வாழ்த்தினால் போதும் என்னும் மனநிலை வளர வேண்டும். சுட்டி என்னும் சிற்றிதழ் திருமணம் செய்து கொண்டு திருமண அறிவிப்பை மட்டும் அனுப்பு மணமக்களுக்கும்
பாராட்டுத் தெரிவித்துத் தம் இதழை ஒராண்டு இலவசமாக அனுப்பியது. நமக்குத் தேவை- ஆடம்பரச் செலவுகளும் வறுமையான வாழ்க்கையும்
வெறுமையான சிந்தனைகளும் வீழ்ச்சியான கொள்கைகளுமா?
உயர்ந்த
சிந்தனைகளும் எளிமையான வாழ்க்கையும்
வளமையான
நாடும் எழுச்சியான சமுதாயமுமா?
எது தேவை? வீட்டு வழாக்களும் ஊர் விழாக்களும் மதவிழாக்களும் நாட்டுவிழாக்களும்
எளிமையான செலவில் உயர்ந்த சிந்தனையில் அமையட்டும்!
*****************************************
No comments:
Post a Comment
தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்: