Wednesday, July 10, 2013

தமிழ் மகளின் துயர் துடைப்போம்!


இனிய உதயம்- ஜூன் மாத இதழில் வெளி வந்த என் கட்டுரை:

இனிய உதயம்

01-06-2013



           ண்களில் உப்புக் கண்ணீரும் நெஞ்சத்தில் இரத்தக் கண்ணீரும் வழிய இக்கட்டுரையை எழுதுகிறேன். செம்மொழியாம் தமிழ் மகளின் துயர்கண்டு கண்கள் ஆறாய்ப் பெருகுகின்றன. ஆரியப் படையெடுப்பு, உருது, அரபு, போர்ச்சுகீசு, ஆங்கில மொழியாளர்களின் படையெடுப்பு ஆகியவற்றாலும் மணிப்பிரவாள நடையாலும் சமஸ்கிருதக் கலப்பாலும் இந்தித் திணிப்பாலும் தமிழ்மொழியின் நலம் மாற்றாரால் சிதைந்தது. ஆனால் அதைவிடக் கொடுமை தமிழர்களால் நாளும் தமிழுக்குத் தமிழில் நேரும் குறைகள் மிகுதியாகி வருகின்றன. தமிழ் படிப்படியே மெல்ல மெல்ல தன் வளமும் வாழ்வும் குறைந்து வருகின்றது. இதைத் தடுக்க வேண்டாமா?

மேடை ஏறி வாய் கிழிய முழங்குகின்ற சில தமிழர்களைப் பார்த்ததும் சிரிப்புத்தான் வருகிறது. முழங்குகின்ற இந்த வாயர்கள் முழுங்குவது நிறைய! எழுவாய், பயனிலை, ஒருமை, பன்மை, ஒற்றுகள், சாரியை, சந்தி, சொற்கள் என பலவற்றை முழுங்கிவிடு கிறார்கள். "நிதி அமைச்சர் வரி கட்ட வேண்டும் என்றார்கல், உடனே சட்டசபையில் சிரித்தார்கல், இதை நான் ஆனித்தரமாகப் பதிவு செய்ய விரும்புகிறோம், மக்கல் கவனிப்பார்கல்' என்று தொலைக்காட்சி நேர்காணலில் எதிர்க்கட்சிப் பேச்சாளர் முழங்குகிறார். "என் தமிள் சமுதாயமே' "அரசாங்கத்துக்குச் சொள்வேன்', "கேட்டுக் கொல்கிறேன்'- என்று பேசும் இவர்கள் தமிழின் ஒலிகளை, எழுத்துகளைக் கொல்கிறார்கள்.

ஒலியும் ஒளியும்!

வானொலி தொலைக்காட்சிகளில் கேட்கவே வேண்டாம்.

"அரிவிக்கப்பட்டுல்லது', "கோரிக்கை வைத்துல் லார்கல்', "திறுமனம் ஆனதும் ஓரிறு குழந்தை மட்டுமே பெற்றுக்கொல்லவேண்டும்'. "சூறாவலி'- இப்படி நாள்தோறும் தமிழ்க் கொலை செய்யும் அறிவிப்பாளர்களையும் நடிகர்களையும் ஏற்றுக்கொண்ட தமிழனை என்ன சொல்வது? ""தமிழனுக்கு இரும்புக்காது'' என்றாரே பாரதியார். உண்மைதான்!

தெரியாத தமிழ்


"பாட்டன் தமிழை வீட்டிலாவது பேசுவோம்' என்று வெளிநாட்டுத் தமிழர்கள் தங்கள் வீடுகளில் எழுதிவைத்துக் கொண்டார்கள். இன்று தமிழ்நாட்டில் அதுவும் கெட்டது. தமிழ்மொழியை விட்டுவிட்டுப் பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் என்று பிறமொழிகள் தமிழன் தமிழச்சி பெற்ற குழந்தைகளுக்குத் திணிக்கப்படுகின்றன.

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! - அதைத் தொழுது படித்திடடி பாப்பா!' என்றார் பாரதியார்.

ஆனால் தமிழர்களின் பிள்ளைகள் தமிழ்நாட்டில் தமிழ் தெரியாமலே வளர்கின்றனர். 

சிற்றூர்களில் உள்ள குழந்தைகளுக்குக்கூட தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை; தமிழ் படிக்கத் தெரியாது. "குமுதம்', "விகடன்', "ராணி', "தினத்தந்தி', "மாலைமுரசு' என்று தமிழ் இதழ்களின் பெயர்களைப் படிக்கக்கூடத்தெரியாது. அதனால்தானோ என்னவோ "குமுதம்', "விகடன்' முதலிய இதழ்களில் ஆங்கிலச் சொற்றொடர்கள் ஆங்கில எழுத்துக்களில் இடம்பெறுகின்றன. இன்னும் சில காலத்தில் இவை இருமொழி (இண்ப்ண்ய்ஞ்ன்ஹப்) இதழ்கள் ஆகிப் பிறகு இந்தி கலந்த ஆங்கில இதழ்களாகி விடலாம். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களால் மட்டுமே இந்தத் தமிழ் வார, நாள் இதழ்களைப் படிக்கமுடியும் என்ற நிலை உருவாகி வருகின்றது.

உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குடியேறிய- குறிப்பாக மொரீசியசு, சீசெல்சு, தென் ஆப்பிரிக்கா முதலிய பல நாடுகளில் உள்ள தமிழர்களின் வீட்டுக் குழந்தைகள் தமிழ் அறவே 
தெரியாமல், அறியாமல் வளர்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ்ப்பாடப் புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டபோது, இந்தி(ய) அரசு உடனே கப்பலில் ஏற்றி ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகள் படிப்பதற்கு உரிய இந்திப் பாடப் புத்தகங்களை அனுப்பியது.

தமிழக அரசும் இந்திக்கு எதிர் என்று கூறி ஆங்கிலத்தை வளர்த்து வருகிற போக்கில் தமிழை மறந்துவருகிறது. மாநகராட்சி முதல் ஊராட்சி வரை ஆங்கில வழிப் பள்ளிகளை/வகுப்புகளைத் தொடங்கி வருகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு ஆங்கில அகராதி வாங்கித் தருகிறது. தமிழ் அகராதி ஒரு பள்ளியிலும் கிடையாது; பிள்ளைகளுக்கும் சரி, தமிழ் ஆசிரியர்களுக்கும் சரி பல அருஞ்சொற்களுக்குப் பொருள் தெரியாது.

தமிழ் தண்டம்


தமிழ் தவிர பிற படிக்கத் தகுதியற்றவர்களும், மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் இளங்கலை (பி.ஏ.) தமிழ் படிக்கிறார்கள்; பிற பாடம் படித்தவர்களும் மலையாளிகளும் தெலுங்கர்களும் முதுகலை (எம்.ஏ) தமிழ் படிக்கிறார்கள்; இந்த ஆசிரியர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் தமிழ்ப்பாடத்தை நடத்துகிறார்கள். தனியார்பள்ளி நிருவாகங்கள் ஆங்கிலத்தில்தான் நடத்தவேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன. குழந்தைகள் நிலைமையும் தமிழ் அறவே தெரியாத நிலை என்பதால் "அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா' என்பதை ஆங்கிலத்தில் எழுதிவைத்துத்தான் படிக்கின்றன. தமிழை "டமில்' என்றுதான் சொல்லவேண்டும் என்பது இப்பள்ளிகளில் உள்ள சட்டம்; "தமிழ் டீச்சர்' என்றால் அடிவிழும், "டமில் டீச்சர்' என்றுதான் கூறவேண்டும்.

ஆங்கிலப் பள்ளிகளில் பள்ளி நேரத்தில் குழந்தைகள் தமிழில் பேசினால் தண்டனை. ஒரு பள்ளியில் குழந்தையின் கழுத்தில் "இனி தமிழில் பேச மாட்டேன்' என அட்டையில் எழுதி மாட்டிவிட்டனர்; 

சில பள்ளிகளில் "தண்டம்' கட்டவேண்டும். குழந்தைகள் வீட்டிலும் ஆங்கிலத்தில் பேசவேண்டும்; பெற்றவர்களும் மற்றவர்களும் குழந்தையுடன் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி வருகிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் வீட்டில் தமிழில் பேசும் பெற்றோர்களுக்குத் "தண்டம்' விதிக்கும் நிலை வரலாம்.

தமிங்கிலம்


இந்தியை எதிர்க்கும் தமிழர்களுக்கு இந்தி மட்டுமில்லை, ஆங்கிலமும் தெரியவில்லை தமிழும் தெரியவில்லை என்னும் நிலைமை. பள்ளிக்கூடப் பிள்ளைகளிடம் "வலது புறம்' "இடது புறம்' என்றால் தெரியாது. தமிழில் எண்கள் எழுதத் தெரியாது (பல தமிழாசிரியர்களுக்கும்கூட!). "பதினெட்டு' என்றால் தெரியாது, "எய்ட்டீன்' என்று ஆங்கிலத்தில் சொல்லவேண்டும். "நன்றி மறந்த தமிழர்கள்' என்று கமலஹாசன் கூறினார். ஆம், "நன்றி' என்று கூறமாட்டார்கள், "தேங்க்ஸ்' என்பார்கள். பேருந்து நிலையம், போக்குவரத்து, பொதுப்பணித்துறை, காவல்நிலையம், மாவட்டக் கருவூலம், மருத்துவமனை, திரையரங்கம் முதலிய பல நல்ல தமிழ்ச்சொற்கள் புழக்கத்திற்கு வர மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கமும் பின்வந்த திராவிட இயக்க ஆட்சியும் காரணம் ஆகும். ஆனாலும் "பேருந்து நிலையம் எங்கே இருக்கிறது.' என்று கேட்போமா?

""பேருந்தா, பருந்தா? போக்குவரத்து என்றால் போகவும் வரவும் சீட்டு பயன்படுமா?'' என்றெல்லாம் முதலமைச்சராக இருந்த தமிழர் ஒருவரே கிண்டல் செய்தார். பேருந்தில் "எழும்பூர்', "திருவல்லிக்கேணி', "மருத்துவக்கல்லூரி' என்று கேட்டால் நடத்துநர் விழிப்பார்; இவ்வளவுக்கும் பேருந்தின் முன் பலகையில் தமிழில் எழுதியிருக்கும்; "எக்மோர்', "டிரிப்லிகேன்', "மெடிக்கல் காலேஜ்'  என்றால்தான் உடனே புரியும். ஆக, தமிழில் பேசுவது இழிவு, அவமானம் என்று நினைக்
கும் தாழ்வு மனப்பான்மை உள்ளவன் தமிழனே!

தஞ்சாவூரை இன்றும் ஆங்கிலத்தில் "டேஞ்சூர்' என்று எழுதுபவர்கள் உள்ளனர். சென்னை இன்னும் பலபேருக்கு "மெட்ராஸ்' என்றால்தான் புரிகிறது. "மெட்ராஸ் யூனிவர்சிட்டி' (சென்னைப் பல்கலைக்கழகம்), "மெட்ராஸ் ஐகோர்ட்' (சென்னை உயர்நீதி மன்றம்) என்றால்தான் சிலருக்கு இனிக்கிறது! சென்னை உயர்நீதி மன்றம் மட்டுமில்லை மதுரைக் கிளையும் இந்தி(ய) தில்லிக்கு அடிமையாம்; எனவே இந்தியில் இன்னும் முழுமையாக வடநாட்டு நீதிமன்றங்களே மாற முடியாததால் ஆங்கிலத்தில்தான் பெயர்ப்பலகை வைத்திருக்கிறார்கள். அண்டை மாநிலங்களில்கூட அவரவர் தாய்மொழியில் எழுதியுள்ளார்கள் என்பது தெரியாத கண்ணிருந்தும் குருடர்கள் தமிழர்கள்தானே!

சுருக்கு இறுக்கு!


திரைப்படத்திற்குத் தமிழில் பெயர்வைத்தால் வரிவிலக்கு என்றதால் ஓரளவுக்குத் தமிழில் பெயர்வைத்தார்கள்; ஆனால் ஆங்கிலத்தில் துணைத் தலைப்பு, விளம்பரங்கள், விளக்கங்கள் எல்லாம்! படங்களின் தமிழ்ப்பெயர்களைச் சுருக்கி "எம்கேடி', "ஒபிபி', "ஓகே ஓகே' என ஆங்கில எழுத்துகளில்! அட! தமிழனே உன் தமிழை ஒலிக்க உனக்கு நேரமில்லையா? தமிழ் செறிவான மொழி என்பதே உனக்குத் தெரியாதா? குழந்தையைத் தொட்டிலில் இடுவதற்கு மாறாய்க் குப்பைத்தொட்டியில் திணிக்கலாமா? அம்மா அப்பாவை "மம்மி', "டேடி' என்று கூறி, மேலும் சுருக்கி, "மம்', "டே' 

எனச் சுருக்கும் தமிழனே! தாயைக் கூடத் தாய்மொழியில் அழைக்க முடியாத குறையுடைய மொழியா உன்மொழி?

தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகள் பெயரில் அமைந்த "மறைமலை அடிகள் நகர்' என்பதை "எம்எம்ஏ' நகர் என்று சுருக்கியவன் தமிழனே! சுந்தரபாண்டியன் பட்டினம் "எஸ்பி பட்டினம்' ஆகியது. கே.கே.நகர், ஜே.ஜே.நகர், என்.எஸ்.கே நகர், எம்.கே.பி நகர் என்றெல்லாம் சுருக்கிப் பயன்படுத்துவதால் தமிழ்ப்பெயர்கள் மறைந்து வருகின்றன. மறைமலைநகர் தொடர்வண்டி நிலையத்தின் பெயரை மறைமலை காமராஜர் நகர் என்று வைத்தவர்கள் வடநாட்டார் இல்லை; தமிழ்நாட்டுப் பேராய (காங்கிரசு)க் கட்சியினரே! "கஸ்தூரிபா நகர்' என சமஸ்கிருதப் பெயரைச் சரியாக எழுதவேண்டும் என்று கூறும் இவர்கள் எழும்பூரை "எக்மோர்' என்றும் சென்னை என்பதை "மெட்ராஸ்' என்றும் ஆங்கிலத்தில் வற்புறுத்தி எழுத வைக்கிறார்கள். 
பெயர்கள் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இதழ்களிலும் தலைப்புகள் பாதி ஆங்கிலம் பாதி தமிழ் அல்லது முழுவதும் ஆங்கிலச் சொல் என்றே உள்ளன. பாரதியார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலத் தலைப்பு இட்டு எழுதுவது தவறு என்று எழுதினார். இன்றும் திருந்தாதது யார் குற்றம்? "ஞானசாகரம்' என்ற தம் இதழின் பெயரை "அறிவுக் கடல்' என மாற்றினார் மறைமலை அடிகள். ஆனால் இன்றோ ஜுனியர் விகடன், அடையாறு டைம்ஸ், நாவல் டைம், இந்தியா டுடே என்று ஆங்கிலச் சொற்களால் ஆகிய பெயர்களைக் கொண்ட தமிழ் இதழ்கள் வருகின்றன. வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பெயர்களும் தலைப்புகளும் இவ்வாறே ஆங்கில மயமாக உள்ளன. மேலும் ஆங்கில எழுத்துக்களையும் கலந்து எழுதுகின்றனர்.

ஆங்கிலம் அல்லது சமஸ்கிருதத்திலேயே நகர்ப்பெயர்கள், தெருப் பெயர்கள் அடுக்ககங்களின் பெயர்கள், வீட்டுப் பெயர்கள், கடைப்பெயர்கள் வைக்கப் பெறுகின்றன. ஆங்கில எழுத்துகளிலேயே இந்தப் பெயர்கள் பெயர்ப்பலகைகளில் எழுதப் படுகின்றன. தமிழக அரசின் வீட்டுவசதி வாரியமும் வடநாட்டு அல்லது வெளிநாட்டு வீடுகட்டும் நிறுவனங்களும் தமிழைப் பற்றியோ தமிழ்ப்பெயர்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. ஆங்கிலம் அல்லது பிறமொழியில் அமைந்த பெயர்கள் உள்ள வீடுகளை, கடைகளை, வணிக வளாகங்களை, மருத்துவமனைகளை, பள்ளிகளைத் தேடி ஓடும் தமிழினின்   அயல்மொழி நாட்டத்தை என்ன சொல்வது? தம் வீட்டுக்குழந்தைகளின் பெயர்களைக்கூட- சமஸ்கிருதத்தில் வைப்பதைக்கூட புரியாததாகவும் சுருக்கியும் வைத்துக்கொள்ளும் புதுமை நாட்டம் (மோகம்) பெருகியுள்ளது. விவேகானந்தன் என்ற சமஸ்கிருதப் பெயரைக்கூட "விவேகானந்த்' எனச் சுருக்கி மேலும் "விவேக்' என வைத்துக் கொள்கின்றனர். வடநாட்டு நடிக நடிகையர் பெயர்களையும் கிரிக்கெட் வீரர் பெயர்களையும் சூட்டிக்கொள்ளும் இவர்கள் அவற்றையும் தமிழ் மரபுக்கு மீறிப் பொருந்தாத ஒலிகள் வரும்படிப் பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.

வானெலி


இந்தி(ய) அரசின் வானொலியும் தொலைக்காட்சியும் தமிழுக்கான நேரத்தைக் குறைக்கின்றன; நடுநடுவே இந்தி சமஸ்கிருதச் செய்திகளை ஒலி/ஒளிபரப்பி  மகிழ்கின்றன; கலையின் மூலம் ஏமாற்ற இந்தித் திரைப்பட பாடல்களைச் சிறிது சிறிதாக அதிகமாக்கி இந்தித் திணிப்பில் முன்னேறி வருகின்றன. அரசு வானொலி அதிகம் இந்தியைப் பரப்பவே வணிக (வர்த்தக) ஒலிபரப்பை வைத்திருக்கிறது. ஒருகாலத்தில் ஏறத்தாழ 1970களில் தாங்கள் இந்தி(ய) அரசின் அடிமைகள் என்பதை உணர்த்துவதற்காகத் தமிழ் நிகழ்ச்சிகளைச் சுவையற்றதாக்கி இந்தி, சமற்கிருத நிகழ்ச்சிகளை மொழிபெயர்த்தோ அப்படியேவோ தந்தன தமிழக வானொலி தொலைக்காட்சி நிலையங்கள்; எனவே தமிழகத் தமிழர்கள் இலங்கை வானொலியையும் தொலைக்காட்சி (ரூபவாகினி)யையும் பார்த்தார்கள்; இலங்கை வானொலியின் அழகு தமிழ் அறிவிப்பாளர்களையும் சுவையான நிகழ்ச்சிகளையும் பாராட்டினார்கள். தமிழக அறிவிப்பாளர்களும் குறிப்பாகத் தில்லியிலிருந்து வரும் செய்தியை வாசிப்பவர்களும் சமற்கிருதம் போலவும் ஆங்கிலம் போலவும் தமிழை ஒலித்துச் சிதைப்பதால் குறை கூறப்பட்டார்கள்; இந்திய(ய) அரசைப் பின்பற்றி இன்றைக்குச் சிங்கள அரசு தன் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் சிங்களத்தை தமிழுக்கு நடுவே படிப்படியே அதிகமாக்கித் திணித்து வருகிறது.

தமிழ்நாட்டில் இப்போது பெருகியுள்ள பண்பலை வரிசை என்னும் வானொலிகளில், பண்பற்ற சில செய்திகள் வருவதை நாம் காது குளிர கேட்கத்தான் செய்கிறோம்; மொழிக்கொலையையும் ஏற்கத்தான் செய்கிறோம். பாதி தமிழ் பாதி ஆங்கிலம் என்று கலப்படத் தமிழ் பேசுகின்றனர்; தமிழ்ச் சொற்களை ஆங்கிலம் போல் ஒலிப்பதாகக் கருதி மென்று துப்பி "லகர ளகர'க் கலவரம் புரியும் "லகர பாண்டி'களாகி, "இதுதான் ஊடகவியல் திறமை' என்கின்றனர். 

தமிழின் சிறப்பெழுத்தாகிய "ழ' என்பதை ஒலிக்க முடியாமல் "தமில் வால்க!' என்பவர்களைக்கூட மன்னிக்கலாம். வேண்டுமென்றே தமிழில் உள்ள மடிநா ஒலியாகிய "ள' என்பதை ஒழித்துக் கட்டுவதுபோல் "ல்' என்று நுனிநாக்குத் தமிழ் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள முடியுமா? அவர்கல், வந்தார்கல், சொன்னார்கல், பெயர்கல் என்று ஒலிக்கின்றனர்.

இது தொலைக்காட்சித் துறையையும் பாதித்துள்ளது. "வணக்கம்'! என்னும் இனிய தமிழ்ச் சொல்லைக்கூட சிதைத்து ஒலித்து மகிழ்ந்த ஒரு வாசிப்பாளர் உண்டு. நேர்காணலில் (பேட்டியின்போது) பிற மொழியாளரோ மேடைப் பழக்கம் இல்லாதவரோ ஆங்கிலம் கலந்து பேசுவதைக்கூட விட்டுவிடலாம்; நேர்காணல் புரியும் தொகுப்பாளரே ஆங்கிலத்தில் பேசுவதும் கலந்துபேசுவதும் கொடுமை. பேச்சுவழக்கில் உள்ள கொச்சைச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் எழுத்தில், திரைப்பாடலில் பதிவு ஆக்குவதும் பரப்புவதும் மொழிக்குச் செய்யும் பெரும் தீமை. 

அறிவியலையோ பிற வெளிநாட்டுப் புதுமைச் செய்திகளையோ தருவதிலா ஆங்கிலச் சொல் கலக்கின்றனர்? அன்றாடப் பேச்சுத் தமிழையே தமிங்கிலமாக மாற்றிப் பேசுகின்றனர். "பிரேக் பாஸ்ட், ஆயிடுச்சா?' "உங்க லவ்வர் கல்யாணம் ஆனவரா?', "என்ன சாங் வேணும்?' - என்கின்றனர். பாட்டன் தமிழில் பாட்டை இழந்து தமிழை வாழச் செய்வது தகுமா?

விளம்பரங்கள் செய்யும் பண்பாட்டுக்கேடு, பெண்ணிய எதிர்ப்பு, குழந்தை மனவியல் முறிப்பு, கூட்டுக் குடும்பச் சிதைப்பு - இவற்றுக்கு மேலாக அவை தமிழ் மொழிக்குக் கேடு செய்வது பெருகியுள்ளது. பொடுகு, சொரிசிரங்கு முதலிய தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது, பலருக்கும் தெரியாத "டேண்ட்ரஃப்', "சோரியாசிஸ்' என ஆங்கிலச் சொற்களைத் திணிக்கின்றனர். பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்த புதிய கலைச்சொற்களைத் தமிழில் பயன்படுத்துவதை எதிர்க்கின்றனர் சிலர்; ஆனால் அனைவருக்கும் தெரிந்த தமிழ்ச்சொற்களைப் புறந்தள்ளிக் கடினமான ஆங்கிலச் சொற்களைக் கொண்டுவந்து திணிப்பதற்கு ஆங்கில அடிமை மனப்பான்மைதானே காரணம். தண்ணீர், சோறு என்ற எளிய அன்றாட தமிழ்ச் சொற்களையும் ஜலம், சாதம் என சமஸ்கிருதமாக்கிய காலம், இன்று வாட்டர், ரைஸ் என மாறி அனைத்தையும் ஆங்கிலச் சொற்களாகத் திணிப்பதாகவும் கலப்படம் செய்வதாகவும் மாறியுள்ளது.

இந்தி(ய) இந்துஇந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் ஊழியம் செய்வதும் தமிழைத் தாழ்த்துவதுமே இந்திய தேசியப் பற்று என்பது இந்தி(ய) தேசியமும் இந்துத்துவமும் பேசும் சமற்கிருதப் பற்றாளர்கள், ஆங்கில அடிவருடிகள் ஆகியோரின் கொள்கை. "சைக்கிளைப் பிரித்துப் போட்டால் தமிழில் சொல்ல முடியுமா? காப்பியைக் குளம்பி என்றால்தான் குடிப்பீர்களா?' என்று குசும்பு பேசினார் பேராயக் (காங்கிரசு) கட்சியின் அமைச்சர் ஒருவர். "தமிழ் அறிஞர்கள் குறுகிய மனப் பான்மை உடையவர்கள்' என்று தொலைக்காட்சித் தொகுப்பாளராகிய ஒரு பெண்மணி தாக்கிப் பேசினார். 

"ஆங்கிலம் போலப் பிறமொழிச் சொற்களைக் கடன் வாங்கினால்தான் தமிழ் முன்னேறும்' என்று சில அரசியல்வாதிகளும் எழுத்தாளர்களும் பேசிவருகின்றனர். 

ஆங்கிலம் போலவோ, வட இந்திய மொழிகள் போலவோ வளமற்ற மொழி இல்லை தமிழ்! மொழி வளர்ச்சி பற்றிப் பேசுவவோர் மொழி அறிஞர்களையும் தமிழ்ச்சான்றோர்களையும் கேட்டுச் செயற்பட வேண்டுமே தவிர, அவர்களைக் கிண்டல் செய்வது தவறு. தமிழாசிரியர்களையும் நல்ல தமிழ் பேசுவோரையும் வேடிக்கையாக்கும் திரைப்படமும் இதற்கு ஒரு காரணம்.

கட்சியையும் மதத்தையும் தாண்டி அரசியல் வாதிகளும் மதத்தலைவர்களும் சிங்கள மொழியைப் போற்றுவதால்தான் அங்கே அவர்கள் ஒற்றுமையாக இருக்கமுடிகிறது. சாதி, மத, கட்சி வேறுபாடுகளுக்கு ஆளாகிய தமிழர்கள் வீழ்ந்தார்கள்; வீழ்கிறார்கள். கன்னடஅறிஞர்களையும் கன்னட இயக்கத்தவர்களையும் கருநாடகத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் கட்சிகளும் சாதியினரும் மதிக்கின்றனர்; பதவி ஏற்கும் முன் முதலமைச்சரிலிருந்து அனைவரும் தம் மொழியின் மிகப்பெரிய கவிஞரைச் சென்று, கண்டு, வணங்கி வருகின்றனர்.

தமிழகத்திலோ சாதி, மதம், கட்சி ஆகியவற்றால் பிளவுபட்டு காவிரி முதலிய பொதுச்சிக்கல்களிலும் ஒன்றுபடாமல் தமிழ்ப்பணி களையும் தடுக்கின்றார்கள்.

தமிழ்க் கொலைவெறி

தமிழனைக் கொல்லவேண்டும், தூக்கில்போடவேண்டும் எனச் சிங்களனுக்கோ பிறருக்கோ வெறி இருக்கிறதோ இல்லையோ, தமிழைக் கொல்லும் இழிவு தமிழனிடம் உள்ளது. மக்கள் இலக்கியமாக விளங்கும் திரைப்படப் பாடல்களில் ஒலியையும் சொற்களையும் கெடுத்துப் பிறமொழி கலந்து கேடு செய்கிறார்கள். மெட்டுக்குப் பாட்டெழுத ஆங்கில சமற்கிருதச் சொற்களை மிகுதியாகக் கலந்து எழுதுகின்றனர். மறு கலவை (ரீமிக்ஸ்) என்று பழைய நல்ல தமிழ்ப்பாடல்களிலும் நடுவில் ஆங்கிலவரி (பாப்) பாடல்வரிகளை இணைத்துப் பாடுகின்றனர்.

தமிழக அரசு அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் பள்ளிகளும், ஏன், மழலைப் பள்ளிகளும் ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றன. இந்தியை எதிர்த்துப் போராடி உயிர்விட்ட தமிழ்நாட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளிலும் வானொலி தொலைக் காட்சிகளிலும் கொடிகட்டிப் பறக்கிறது. அண்டை மாநிலங்களில் அவரவர் மொழி எண்களைப் பயன்படுத்தும்போது, தமிழன் தன் எண்ணை - எண் முறையை- இழந்து நிற்கிறான். காசு, பணம், வழக்கு, அரசு, 

கடவுள், அறிவியல் தொடர்பானவை இந்தி(ய) அரசு தொடர்பானவை தமிழில் இருந்தால் செல்லுபடியாகாது என்ற தாழ்வு மனப்பான்மை தமிழனுக்கு இருக்கிறது. "ஹேப்பி பொங்கல்' "ஹேப்பி பர்த் டே' என்று தன் அடையாளத்தையே மாற்றி இழந்து வருகிறான். உலகம் முழுதும் பரந்த தமிழன், தமிழ்நாட்டிலும் தன் மொழியையும் அடையாளத்தையும் இழந்து வருவதைத் தடுக்கத் தாய்மொழியாம் தமிழை மீட்டெடுக்க வேண்டும்.

""பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் -என்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் -வாழ்வு
கெட்டு நடுத்தெருவொடு கிடந்து
கீழ்நிலை உற்றாலும்- மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ் மகளின் துயர்
துடைக்க மறப்பேனா.''


-காசி ஆனந்தன்

6 comments:

  1. நல்ல கட்டுரை! மிகுந்த பாராட்டுகள்! பல்லாயிரக்கணக்கானவர்கள் இதனைப் படித்துப் பார்த்தாவது தங்களைத் திருத்திக்கொள்ள முயல வேண்டும். முதற்கண் தமிழாசிரியர்கள் குழந்தைகளுக்குச் சரியான ஒலிப்பைச் சொல்லித்தரவேண்டும். கல்வியின் முதல் அடையாளம் தெளிவாகத் தமிழ் பேசத்தெரிதல்.

    ReplyDelete
  2. அன்புசால் பேரசிரியர்க்கு,
    வணக்கம். பலரது எண்ணக்கிடக்கைகளைத் தாங்கள் உணர்ச்சிக்கரமான கட்டுரையாக வடித்துள்ளீர்கள். தாய்தமிழின்பால் நிகழ்ந்துவரும் தாக்குதல்களை முறியடிக்கத் திட்டமிட்டப் பணிகளை மேற்கொள்ளல் காலத்தின் கட்டாயமாகும். தமிழில் பெயர் சூட்டுதல், தலையெழுத்தைத் தமிழில் எழுதுதல் போன்ற சிறு சிறு முயற்சிகளில் முதலில் ஈடுபடுவோம். இந்தப் பணியினை மலேசியாவில் யான் ஓரளவு ஆற்றி வருகின்றேன். மேலும் ஆக்ககரமாகத் தமிழ்ப் பணியாற்ற தங்களது கட்டுரை அருமருந்தாக அமைந்துள்ளது. வாழ்த்துகள்.
    ம. மன்னர் மன்னன், விரிவுரையாளர், மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியா

    ReplyDelete
  3. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...

    //ஒரு கோடி ரூபாய்க்கு ஆங்கில அகராதி வாங்கித் தருகிறது. தமிழ் அகராதி ஒரு பள்ளியிலும் கிடையாது; பிள்ளைகளுக்கும் சரி, தமிழ் ஆசிரியர்களுக்கும் சரி பல அருஞ்சொற்களுக்குப் பொருள் தெரியாது.//

    இதற்கு தமிழக அரசுதான் வெட்கித் தலைகுனிய வேண்டும் ஐயா...

    ReplyDelete
  4. நம்மால் முடிந்தது என்ன ? நாம் என்ன செய்ய வேண்டும் ?

    ௧.முதல் நிலையாக நம் வீடுகளில் நல்ல தமிழில் பேசுவோம் என முடிவெடுப்போம்.

    ௨. நம் வீட்டுக் குழந்தைகளை ,வீடுதோறும், ஆத்திச் சூடி , நாலடியார், கொன்றைவேந்தன் போன்ற நீதி நூல்களை கற்றுத்தருவோம்.

    ௩.தமிழ் மறையாம் திருக்குறளை ஓதுவோம்.

    ௪.சந்தக் கவிகளைத் தேர்ந்தெடுத்து தமிழின் இனிமையைப் பருகி மகிழ்வோம்.

    ௫. நாத்திகம்,சாதி, மதம், எனப் பாராது எங்கிருந்தாலும் நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடிப் பரவுவோம்.

    ௬. கவிஞர்களை நல்ல தமிழில் எழுத வைப்போம்.

    ௭. இறை வழிபாடு செய்வோர் நல்ல தமிழில் அவரவர் முறையிலும், தொடர்புடையோரைத் தீந்தமிழில் உள்ள திருமுறைகளும், திருவாய்மொழிகளும், ஓதச் செய்து, ஓதவும் செய்வோம்.

    ௮.சாதி மத மோதல்களை நல்லிணக்கத்துடன், சட்டத்திற்கு உட்பட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு ஊதி ஊதி பெரிது படுத்தாமல் சமூகக் கடமையாக அனைவரும் கூடித் தீர்த்துவைப்போம்.

    ௯. அரசியலில் இருந்து சாதி, மதங்களை விரட்டி அடித்து, அவைகளைத் தனிப்பட்ட முறையில் அவரவர் வீட்டில் விட்டு அரசியல் கலவாது நமக்குள் , ஒருவரை ஒருவர் அன்புடன் சமமாக நடத்தி வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.

    ௧௦. பல இனங்கள் , பல மொழிகள், பலவேறு பண்பாடுகள் நிறைந்த நாட்டை அண்ணல் அம்பேத்கர் கட்டி எழுப்பிய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குத் தந்த அனைவரும் சமம் என்ற அடிப்படை உரிமைகளை போராடிக் காப்போம். இந்த அரசியல் அமைப்புச் சட்ட உரிமைகளை முன்னிறுத்தி சமூகப் பண்பாடாக, தமிழ் நாட்டையும், இனத்தையும் தமிழையும், ஒன்றுபட்டு காப்போம்.

    ௧௧ . குடிகெடுக்கும் அரசாக இல்லாமல் குடிகளைக் காக்கும் அரசாக மாற்றி, ஏழை எளிய மக்களை அழிக்கும் மது அரக்கனை ஒழிக்கும் அரசைத் தேர்ந்தெடுப்போம்.

    ௧௨ . தரமான கல்வியை எளிய மக்களும் பெற வழி செய்வோம் .

    ௧௩ . அண்டை மாநிலங்கள் காட்டும் வழியில் கல்வியில் தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்குவோம்.

    ௧௪ . இவைகளை ஏற்கும் நல்ல தலைவர்களை உருவாக்குவோம். அவர்களைமட்டும் ஏற்போம்.


    நம் இழி நிலையால் நமது மலைகள், கடற்பரப்பு, ஆறுகள், நீர்நிலைகள், நிலத்தடி நீர் உள்ளிட்ட எல்லா இயற்கை வளங்களும் அழிக்கப்பட்டு, தண்ணீர் பஞ்சம் , மின்வெட்டு, இன்னும் எண்ணிக்கையற்ற கேடுகளால் நாமோ அழிவை நோக்கி .....

    நமக்கு வரவேண்டிய ஆற்று நீர், மின் சக்தி, அடிப்படை உரிமைகள் கூட நமக்கு மறுக்கப்படுகின்றன .

    மிக விரைவில் தமிழ்நாடு நீரற்ற பாலைவனமாக நாமே மாற்றி அழித்துக் கொண்டும் இருக்கிறோம்.
    இப்படி பல்வேறு அழிவுகளிலும் ஒருவரைஒருவர் அடித்துக்கொண்டு பிரிந்து கிடக்கும் இனம் உலகில் தமிழ் இனம் மட்டுமே.

    நுனி மரமேறி அடிமரம் வெட்டும், இம்மாக்கள் தன்னை, மொழியை, இனத்தை அழிப்பதில் முன் நிற்கிறார்கள்.

    அழிவின் விளிம்பில், அழிவின் நடுவில் வாழும் நாம் இப்போதாவது விழித்தால் பிழைத்தோம். இல்லையெனில் .......

    நமது வருங்கால சந்ததிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.

    எனவே இதுவே நம் மக்களுக்கு வேண்டிய அரசியல் ஆகும். இதுவே நமது அரசியல் வாதிகளின் மறந்துபோன கடமையாகும்.

    நமது அரசியல் கட்சிகளும் , அரசியல்வாதிகளும் தனது கட்சிகளின் அடிப்படை அரசியல் கொள்கைகளாக ஏற்கவைப்போம்.
    நாம் அனைவரும் ஒன்று பட்டுத் தலைவர்களை நேரில் சந்தித்து நினைவுபடுத்தி இவைகளை அரசியலாக முன்னெடுக்க வேண்டுகோள் விடுப்போம்.

    நமக்கு நாம்தான் தீர்வு. வெளியில் இருந்து அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

    ReplyDelete
  5. செந்தமிழில் கூடஅன்று, கிராமத்து மக்கள் பேசும் இயல்பான தமிழில் பேசினால் கூட நகையாடும் தமிழன் திருந்தினால் தன் தவறுகளைத் தமிழன் உணர்ந்தால் மட்டுமே தமிழும் தமிழனும் வாழமுடியும் .ஊர்கூடி
    தேர் இழுத்தால் மட்டுமே தேர் நிலை வந்து சேரும் .பாரதிதாசன் முழ்ங்கியது போல் எம் மொழியைக் கற்றாலும் தமிழை உயிராய்க் கொள்வோம் .தமிழைத் தேனே என நினை அது தாலாட்டும் உனை.

    ReplyDelete

தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers