Sunday, July 7, 2013

ஆடம்பரத் திருமணங்களும் விழாக்களும்

ஆடம்பரத் திருமணங்களும் விழாக்களும்    
-       தஞ்சை இறையரசன்
அன்றாடம் செய்யும் இயல்பான வாழ்க்கை நடைமுறைகளையும் கடமைகளையும் செய்து செய்து அலுத்துப் போகிற மனிதனுக்கு விழாக்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன.  குடிபுகுவிழா, திருமணம் முதலிய குடும்பவிழாக்களும் பொங்கல், திபாவளி, முதலிய வீடுசார்ந்த   பொது விழாக்களும் கோயில் திருவிழா,தீமிதிவிழா முதலிய ஊர்த் திருவிழாக்களும் பள்ளி கல்லூரி, விடுதி, நிறுவன ஆண்டுவிழாக்களும் பேருந்து/தொடர்வண்டி நாள் விழாக்களும்  குடியரசுவிழா,சுதந்திர தின விழா முதலிய நாட்டு விழாக்களும் சங்கம், கட்டு, நிறுவனம்,கல்வி நிலையம், தொழிலகம் அரசு ஆகியன நடத்தும் விழாக்களும் மிக அதிகச்செலவில் ஆடம்பரமாக இன்று நடத்தப்படுவது பெருகிவருகிறது.  இவை மகிழ்ச்சி தருவது உண்மைதான் என்றாலும் பல சிக்கல்களும் தருகின்றன.  இன்பத்துக்கு உரியவற்றையும் துன்பமாக்கிக் கொள்ளும் மனிதர்களை என்ன சொல்வது ?
ஆடம்பர அலை:
 குடும்பவிழாக்களில் காது குத்து, பூணூல்கலியாணம், பூப்புநீராட்டுவிழா, மணஉறுதி (நிச்சயதார்த்தம்), திருமணம் முதலியவற்றைத் தத்தம் பொருள் வசதிக்கேற்ப எளிமையாகக் குறைந்த செலவில் செய்வதுதான் வழக்கமாக இருந்தது.  ஆனால் இப்போது குடும்ப விழாக்களே மாநாடுகள் போல் நடத்தப்படும் நிலை வளர்ந்து வருகிறது.  வருகிறவர்களுக்கு சாப்பாடு 100 உரூபாய் என்றால் அழைப்பிதழ் 200 உரூபாய், பதாகை (பேனர்) விளம்பரம் 10,000 உரூபாய்; ஊரெல்லாம் தூங்கமுடியாதவாறு ஒலிபெருக்கியை அலறவிடுவதும் இரவெல்லாம் காணொளியில் (‘வீடியோ’-வில்) திரைப்படங்களைக் காண்பதும் பெருகி உள்ளன.  உணவில், நகையில்,சிக்கனம் பிடித்தாவது மாமனார் கடனில் கறந்தாவது திருமண நிகழ்ச்சியைப் படம் (‘வீடியோ’) எடுக்க வேண்டும் என நடுத்தரக்குடும்பங்களும் அலைமோதுகின்றன.
குழந்தைகளுக்கும் ஆடம்பரம்:
     குழந்தைகளின் பிறந்த நாளில் பலூன்கட்டி ‘கேக்’ வெட்டி ‘ஹேப்பி பர்த் டே டு யூ’ பாடி ஆங்கிலேயராகும் மகிழ்ச்சி பல வீடுகளில் பரவியிருக்கிறது.  குழந்தைகள் பள்ளியிலும் தம் பிறந்த நாளைக் கொண்டாடித் தம் பணக்காரத் தன்மையை வெளிப்படுத்த மற்ற குழந்தைகள் ஏங்குகின்றன.  பிறந்தநாளுக்கு மிக அதிக விலையில் உடையணிந்து விலை உயர்ந்த மிட்டாய் அல்லது இனிப்பு வழங்கும் குழந்தைகளால் போட்டி, பொறாமை, ஆடம்பரம் முதலியற்றை அடுத்த குழந்தைகள் மனத்திலும் வேறுபாட்டை ஆசிரியர்கள் மனத்திலும் ஏற்படுத்துகின்றன.  இப்போது பெரியவர்களும் தம் பிறந்த நாளைக் கொண்டாடுதல், திருமண நாளைக் கொண்டாடுதல் என வளர்ந்துள்ளது. சுவரொட்டிகள்வைத்தும் கஞ்சி காய்ச்சி ஊற்றியும் ‘கட்அவுட்’வைத்துஅதன்மேல் பாலை ஊற்றியும் சாராயத்தை ஊற்றியும்    தலைவர்களின் பிறந்த நாளையும் நடிகர்களின் பிறந்த நாளையும் ஆடம்பரமாகக் கொண்டாடுகின்றனர்.
ஓலையா? வலையா?
     மணப் பெண்ணையும் மணமகளையும் உறுதி செய்து ஓலை எழுதுதல்(நிச்சயதார்த்தம்) மிகச்சிறிய அளவிலிருத்து பெரிய திருவிழா அளவுக்குச் செய்யப்படுகிறது. இன்னார்க்கு இன்னார் என்று முடிவு செய்வதை மிக நெருங்கிவர்கள் சிலர் இருந்து முடிவு செய்து ஓலை எழுதினால் போதாதா? பெரியோர்கள் முடிவுசெய்தபின் சடங்காக  இது தேவையில்லை என்பதால் நிச்சயதார்த்தம் இன்றியே நேரடியாகத் திருமணம் செய்வோர் உண்டு. நிச்சயதார்த்தத்தைத் திருமணத்தின் முதல்நாளில் பெயருக்குச் சடங்காகச் செய்வோரும் உண்டு; 10 கல்யாணத்துக்கு நிகராகச் செய்வோரும் உண்டு.

மணமா? மாநாடா?
     திருமண அழைப்பிதழில் மணமகன் மணமகள் பெயர்கள் எவை என்று தெரியாதபடி மாமன்,மச்சான், மச்சானின் மச்சான் என உறவினரின் பெயர்கள் – குறிப்பாகப் பெரிய பெரிய பதவிகளில் உள்ளவர்கள் பணக்காரர்கள் அரசியல்வாதிகள் பெயர்கள் – பெரும் பட்டியலாக இடம் பெறும்.  திருமணத்தின் போது வாழ்த்துரையாளர்கள்  ‘வாழ் வாழ்’ என்று கத்த குழந்தைகள் ‘வாள் வாள்’ என்று கத்த உறவினர்கள் தமக்குள் குசலம் பேச, பிறர் அரசியல், திரைப்படம் பற்றிப் பேச ஏன் இப்படிக் கூச்சல்குழப்பம்? ஒருபக்கம் அய்யரோ, அரசியல் வாதியோ அலறிக்கொண்டிருக்க மறுபுறம் சோற்றுக்கடை சந்தடி வேறு.
 பணம் நிறைய இருக்கிறது, நிறைய அறிமுகம் இருக்கிறது என்பவர்கள் பெரும் மாநாடு போல் ஊரையே கூட்டித் திருமணம் செய்கின்றனர்; எனினும் இது தவறான எடுத்துக் காட்டாகிக் கொள்ளையடித்துச் சேர்த்த பணத்தில் எலும்புத்துண்டு போடுவது போல் மக்களைக் கூட்டவும் வழிவகுக்கிறது.   இத்தகைய புதுப் பணக்காரர்களின் சமுதாய மதிப்புக்காகவும் அவர்கள் முகம் தாம் பெற்ற அல்லது பெற நினைக்கும் ஆதாயத்துக்காகவும் ஆட்டுமந்தை போல் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அந்தப் பணக்காரர்களுடைய பணத் தகுதியைக் கருதித் தம் தகுதிக்கு மீறிப் பலர் மொய் (அன்பளிப்பு) செய்கின்றார்கள்.
அலுவலக விழாவா ?
     திருமணங்கருக்கும் குடும்பவிழாக்களுக்கும் செல்ல வேண்டும் என்று அலுவலகங்களிலும் கல்வி நிலையங்களிலும் தொழிற்சாலைகளிலும் ஒரே நாளில் பலர்  விடுப்பு அல்லது அனுமதி கோருவதால் எவ்வளவு பணிகள் முடங்குகின்றன? நன்கு அறிமுகமானவர்களும் நெருங்கிப்பழகியவர்களும் மட்டும் போனால் போதாதா ? நூற்றுக் கணக்காகப் பலர் பணியாற்றும் நிறுவனத்தில் அறிமுகம்கூடக் குறைவாக இருக்கும். முகம் தெரியாத அல்லது பழகாத ஒருவரின் திருமணத்திற்கு எல்லோரும் போக வேண்டுமா? உடன் பணியாற்றுபவர் அல்லது கட்சித்தலைவர் குடும்பநிகழ்ச்சிகளுக்கு மட்டும் அல்லாமல் அவரது நெருங்கிய உறவினர் இல்ல நிகழ்ச்சிகளுக்கும் மொய் திரட்டுவது, அன்பளிப்பு வாங்குவது, பேருந்தில்/லாரியில்/ டிரெய்லர் வண்டிகளில்  செல்வது பெருகிவருகிறது.
கண்டவனும் கொடுத்தவனும்
     முகூர்த்த நாள் குறிப்பிட்ட ஒரே மாதத்தில் ஒரே நாளில் பலர் விடுப்பு எடுப்பது, பலர் செல்வது எவ்வளவு பாதிக்கும்? ஒரே நாளில் பல திருமணங்கள், பல ஊர்களில் என்றால் எப்படிச் செல்வது? இதனால் போக்குவரத்து நெரிசல், திடீர்ச்செலவு, உடல் நலிவு, பணிப்பாதிப்பு, குழந்தைகளின் கல்விப்பாதிப்பு, குடும்பக் கடமைகளில் சிக்கல் எல்லாம் ஏற்படுகின்றன.  “கண்ட பயலும் அழைப்பிதழ் கொடுக்கிறான்” என்று திட்டிக் கொண்டே செல்கின்றனர், கண்டவர்களையும் முன்பு தான் அழைத்துத் தன்  வீட்டுக்கு வந்தவர்கள் என்பதால் ! இருநூறு ரூபாய் செலவு செய்து கொண்டுபோய் இருபது ரூபாய் ‘மொய்’ எழுதிவருவர்.  வாழ்த்து மடலுடன் ரூபாய் அனுப்பியிருந்தால் அலைச்சலும் பிறவும் மிச்சம்.  அவர்களுக்கும் கடன் வாங்கிச் செலவு செய்து விட்டு மொய்ப் பணம் வந்ததில் கடனுக்கு  வட்டி அளித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
அழைப்பு கொடுத்து சண்டை வாங்கி
      என்னைக் கூப்பிடவில்லை,என்னை முதலில் கவனிக்கவில்லை, எனக்கு மரியாதை தரவில்லை என்றெல்லாம் சிறு சண்டைகளில் தொடங்கி சாராயம் அடிதடி அரிவாள் வரைக்கும் வளரும். மகிழ்ச்சிக்கு மாறாகக் கூச்சலும் குழப்பமும் சண்டையும் பகையும் ஏன்? அழைப்பிதழ் அச்சடித்தல்,கொடுத்தல், அலைச்சல, பணம் புரட்டல்,  செலவு, மளிவு, காய்கனி வாங்குதல், மண்டபச் செலவு, வரவேற்றல், தொழிலாளிகளைக் கெச்ஞிக் கூத்தாடி அழைத்து வருதல், வேலை வாங்குதல், ஏமாறுதல், திருட்டு, இவை எல்லாவற்றுக்கும் உள்ளாகிக் கடைசியாக இவைதான் பயனா? மகிழ்ச்சிக்கு மாறாகக் கூச்சலும் குழப்பமும் சண்டையும் பகையும் ஏன்? அகலக்கால் வைப்பதும் ஆடம்பரமும்தானே காரணம்.
பணம் சாப்பிட்ட செலவு
     விழாக்கால உணவு மிக அதிகமான பேருக்குச் செய்யப்படுவதால் தூய்மைக்குறைவும், சுமையின்மை, சூடு இன்மை, ‘டால்டா’ முதலிய ஒவ்வாத பண்டங்களின் சேர்க்கை, வேகாத நிலை முதலியன கொண்டுள்ளது.  உடல் நலம் உள்ளவர்களையும் வயிற்றுக் கோளாறு, பலநாள் நோய் உள்ளவர்களையும்  ஒவ்வாதவற்றை  உண்ணச் செய்கிறது.  வீட்டில் நல்ல உணவு இருக்கப் பொது இடத்தில் காத்திருக்க, இருபடி, மரியாதை இழக்க காரனமாகிறது. ஆயிரம் பேருக்கு உணவு இருந்தும்  நூறு பேர் முண்டியடித்து நுழைகிற இழிவு.
 பட்டினியாய்ப் பிச்சைக்காரர்களும் ஏழைகளும் மண்டபத்துக்கு வெளியே பந்தலுக்கு அப்பால் குப்பைக் கூளங்களுக்கு அருகில் மிச்சம் மீதிக்குக் காத்திருக்க, உள்ளே வசதியானவர்களும் வயிறு புடைத்தவர்களும் புளிச்சேப்பக்காரகளும் பசிமாத்திரைக்காரர்களும் கூடிப் பலவகைத் தின் பண்டங்கள், காய்கனிகள், உணவுமுறைகள், சுவை நீர் வகைகள் ஆகியவற்றைக் கண்டு களிக்கவும் உண்டு கழிக்கவும் விருந்து.  எச்சிலாக்கி வீணாக்குவது பாதி; ஆடம்பரமாகக் காட்டிக் கொள்ள மிச்சம் வைப்பது மீதி எனப் பெரும் உணவுக்குவியல் வீணாக்கப்படும்.  எல்லாவகை ஆடம்பரங்களிலும் பணத்தைக் கொட்டிவிட்டு சமையலறையில் சிக்கனம் பிடிப்பவர்களின் விழாக் கூடங்களில் இரண்டாவது பந்தியிலேயே காய்கறி, பாயசம் இல்லையென்றாகி வரவர ரசம் தண்ணீர் ரசமாகி கடைசிபந்தி தண்ணீர் மட்டுமே என்றாவதும் உண்டு.
துணிவான செலவு
     பொங்கல், திபாவளி அல்லது கிறித்துமஸ் அல்லது ரம்சான் முதலிய விழாக்காலங்களில் எடுக்கப்படும் உடை (துணிமணி) வெடி (வானம்) போதாதென்று பிறந்தநாள், திருமணம், காதுகுத்து முதலிய குடும்பவிழாக்களிலும் துணிமணி வாணவேடிக்கை என்று துணிவான செலவு செய்கின்றனர்.  மாமன் மச்சான் வீட்டு விழாக்களில் மொய் எழுதி அல்லது அன்பளிப்பு செய்தும் அவர்கள் திரும்பச் செய்யும் ‘மரியாதை’ துணிமணி (உடை) வரும்.
     ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ (புறநானூறு) என்பதை மறந்து, பீரோ நிறைய உடைகளை அடுக்கி வைப்பது பெருகிவடுறது. ஆயிரக் கணக்கில் பணத்தை அள்ளிக்கொட்டி உடையில் – பட்டுப்புடவைகளில் - முடக்குவதில் என்ன பயன்? சிறுகுழந்தைகளுக்கு எடுக்கப்படும் எண்ணற்ற வகைவகையான உடைகள் அவர்கள் மிக விரைவாக வளர்வதால் – வளரவளரப் - பயனற்றுப் போகின்றன.  திபாவளி அன்று குழந்தைகள் ஏதோ சிறிது மத்தாப்பு, வெடி கொளுத்தினார்கள் என்று இல்லாமல், எப்போதும் எதற்கெடுத்தாலும் வெடியும் வாண வேடிக்கையும் விட்டுக் காசைக் கரியாக்குதல் தவறு.  
ஒட்டாத சுவரொட்டிகள்
                மிகப்பெரிய நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் திரைப்பட அரங்குகளும் செய்யும் சுவரொட்டி விளம்பரம் இன்று குடும்பத்திலும் நுழைந்துவிட்டது.  குடும்பவிழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்துச் சுவரொட்டி ஒட்டும் பழக்கம் மிக மிகுதியாகப் பரவி விட்டது.  இவ்விழாவுக்கு வருகை தரும் அரசியல் தலைவர்களை வரவேற்றும் சுவரொட்டிகள் பெருகுகின்றன.  ஆயிரம் ரூபாயில் முடிக்கும் கிராமத்துத் திருமணங்களில் கூட ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து சுவரொட்டி அச்சடித்துக் கிராமங்களிலும் பக்கத்து நகரத்திலும் ஒட்டி மகிழுகின்றனர்.  சுவரொட்டிக்கு செலவு செய்து விட்டு விருந்துக்குச் செலவு செய்வதில்லை; விருந்தை  கவனிப்பதில்லை; விருந்தினரைக் கவனிப்பதில்லை, சுவரொட்டிச் செலவை வரதட்சணைக் கணக்கில் வைப்பவர்கள் உண்டு; நண்பர்கள் அல்லது கீழே வேலை செய்பவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு இந்த வாழ்த்துச் சுவரொட்டிகள் வருவதுண்டு.
விழாவா? விழவா!
     குடும்பவிழாக்களிலும் அரசியல் விழாக்களிலும் மிகுதியான மக்களை அழைப்பதால் குறிப்பிட்ட ஒரே நாளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுதிறது.  டிராக்டர், லாரி ஆகியவற்றிலும் பேருந்தின் மேலும் தொடர்வண்டிப் பெட்டியின் மேலும் பலர் பயணம் செய்கின்றனர்.  இதனால் விபத்துகள் நேருகின்றன.  விழா மகிழ்ச்சியில் சாராயம் குடித்துவிட்டு வண்டி ஒட்டுவதாலும் ஆடுவதாலும் விபத்துகள் சண்டைகள் ஏற்படுகின்றன. ஆயிரக்கணக்கானோரை ஒரிடத்தில் திரட்டுவதைவிட இருமனங்களை ஒன்றாக இணைப்பதே உயர்ந்தது.
வலம் போனாலென்ன?
     மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் கட்சி ஊர்வலம் போல் சாலையை அடைத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக நடைபெறுகிறது.  பெண்கள் நகைக் கடையையே கழுத்தில் அணிந்து வருவதும், சீர் எடுத்து வருவது என்று வரதட்சணைப் பொருள்களின் கண்காட்சி ஊர்வலம் தடத்துவதும் நாட்டில் திருட்டையும் வரதட்சணைத் தீமையையும் பரப்புவன அல்லவா? மாப்பிள்ளைய ஒரு காரில் அழைத்து வந்தது போக 100 கார் ஊர்வலம் வருகிறது.  பணம், பெட்ரோல், நேரம், போக்குவரத்து ஆகியவை இதனால் வீணாகின்றன.  அரசியல் கட்சிகளின் ஊர்வலம் என்றால் அடுத்த கட்சிக்காரர்களின் கடைகளை உடைக்கப் பயன்படுகின்றது.  மதவிழாக்களில் ஏன் ஊர்வலங்கள்? சாமி புறப்பாடு, தேர், தெப்பம், தொழுகை, வேண்டல் என்று உண்டு.  இப்போது மிலாடி நபிக்கு ஊர்வலம், பிள்ளையார் சதுர்த்திக்கு ஊர்வலம், ரத ஊர்வலம், யாசம் செய்ய ஊர்வலம், கோயில் கட்ட ஊர்வலம் என்று புறப்பட்டு வன்முறையை மதப் பகையை இனக்கலவரத்தை ஏற்படுத்துகின்றன.
கடமையா? கடனா?
     ‘கடனோட கடனா நெய்யூற்றிப் பணியாரம் இடுவது’ என்பது பழமொழி. ‘என்கடன் கடன்வாங்கிப் பிணிப்பதே’ என்று தன்னையே கடளில் பிணித்துக் கொள்வோர் உள்ளனர்.  திபாவளிக்குக் கடன் வாங்கித் துணியிலும் வெடியிலும் செலவழிக்க அரசாங்கமும் கோ -ஆப்டைக்சும் துணிக்கடைகளும் தொலைக் காட்சியும்  தூண்டுகின்றன, திருமணத்திற்குப் பணம் சேருங்கள் என்று வங்கினார் விளம்பரம் செய்கின்றன; வாழ்நாளில் சேமித்ததை ஒரே நாளில் செலவு செய்யவா? ஆடம்பரச் செலவு செய்யும் தொகைக்கு ஏதேனும் நகைகள் வாங்கினால் வாழ்க்கையில் பொருளாதார இடர் இல்லாமல், இடர் நேர்கிற காலங்களில் யாரிடமும் கடனுக்குக் கையேந்தாமல் நகையை அடகுவைத்தோ விற்றோ சரிசெய்து கொண்டு - வாழ முடியும்.  ஏராளமாக்க் கடன் வாங்கிச் செலவு செய்த மணப்பெண்ணின் பெற்றோர் அடுத்த பெண்ணைக் கட்டிக் கொடுக்க வழி இல்லாமல், பட்ட கடனையும் அடைக்க முடியாமல் துன்பப்படுகின்றனர்.
 விழாவே கூடாதா?
                 திருமணம் போன்ற குடும்ப விழாக்களையும், திபாவளி போன்ற மதம் சார்ந்த குடும்ப விழாக்களையும், மதவிழாக்களையும், அரசியல் விழாக்களையும் எளிமையாகவும் சிக்கனமாகவும் சமுதாயத்திற்குப் பாதிப்பு இல்லாமலும் கொண்டாட வேண்டும்.  ஊர்வலம், வாணவேடிக்கை, சுவரொட்டி, வீடியோ, கட்அவுட் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும் நம்மிடம் பணம் இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது செலவு வாரி இறைக்க வேண்டும் என்றோ, நம்மிடம் இருக்கிறது என்றோ - பெரும் ஆடம்பரச் செலவு செய்வது நம் பணத்தையும் மன அமைதியையும் கெடுப்பது மட்டுமல்லாது சமுதாய நலத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கெடுக்கும்.  மிகவும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் அழைக்கப்பட்டால் போதும்; மற்றவர்கள் தொலைவிலிருந்தோ இயன்றபோது வந்தோ வாழ்த்தினால் போதும் என்னும் மனநிலை வளர வேண்டும்.  சுட்டி என்னும்  சிற்றிதழ் திருமணம் செய்து கொண்டு திருமண  அறிவிப்பை மட்டும் அனுப்பு மணமக்களுக்கும் பாராட்டுத் தெரிவித்துத் தம் இதழை ஒராண்டு இலவசமாக அனுப்பியது.  நமக்குத் தேவை-                                               ஆடம்பரச் செலவுகளும் வறுமையான வாழ்க்கையும்
                                                            வெறுமையான சிந்தனைகளும் வீழ்ச்சியான  கொள்கைகளுமா?
உயர்ந்த சிந்தனைகளும் எளிமையான வாழ்க்கையும்
வளமையான நாடும் எழுச்சியான சமுதாயமுமா?

எது தேவை? வீட்டு வழாக்களும் ஊர் விழாக்களும் மதவிழாக்களும் நாட்டுவிழாக்களும் எளிமையான செலவில் உயர்ந்த சிந்தனையில் அமையட்டும்!                                 
*****************************************

Monday, January 14, 2013

இலக்கிய ஓவியம்: புலிக்குகை

மாலை முரசு பொங்கல் மலரில் 13-01-2013 வெளிவந்த இலக்கிய ஓவியம்:
   புலிக்குகை.              000000      

                                                                                                                                                       - முனைவர். பா. இறையரசன்.                                                                                                                                                                            

            பக்கத்து வீட்டுப் பெண்,  மான்போல் துள்ளிக் குதித்து அடுத்த வீட்டுக்கு முன் வந்ததும் தயங்கி நின்றாள். பின் மெல்ல நடந்து அவ்வீட்டுக்கு வெளியே வாசலில் நின்று முன் கூரையைத் தாங்கிக் கொண்டிருந்த சிறுதூணைப் பற்றிக் கொண்டு எட்டிப் பார்த்தாள்.  ‘எங்கே அவன்?’  அவள் புருவங்களில் வினாக்குறி வில்லாய் வளைந்து கரு விழிகள் அம்பு போல் வீட்டின் உள்ளே பாய்ந்தன. அவன் இருக்கிறானா? இல்லையா?  உள்ளே இருப்பானா?.
          அவன் தோளைப் பார்த்தால்  பார்த்துக்  கொண்டே  இருக்கலாம். மலை போன்ற தோள்கள். இந்தத் தோளிலிருந்து அந்தத் தோள்வரை பார்க்கவே பல உகங்கள் ஆகிவிடும். வீரம் செறிந்த அவன் தோள்களைப் பார்த்ததுமே அவள் கண்கள், சூரியன் மேற்கே மறைந்ததும்  தலை சாயும் தாமரைகள் போல்  தரையைப் பார்க்கும். மெல்ல மெல்ல அவன் கால்களையும் கால்களில் உள்ள வீரக் கழல்களையும் பார்த்துப் பெருமிதம் கொண்டு மகிழும். மலைகளுக்கு மேலே  தோன்றுகின்ற  காலைச் சூரியன்போன்ற அவன் முகத்தைப் பார்க்க அவளுக்குத் துணிச்சல் இல்லை.
          துணிந்து ஒருமுறை அவன் முகத்தைப் பார்த்துவிட்டு விருட்டெனத் தாழ்ந்தன  அவள் விழிகள். ஆ! மின்னல் பாய்ந்ததா? மீசைக்கு மேலே நெருப்பைக் கக்கும் அந்த விழிகள் போர்க்களத்தில் மட்டுமல்லவா சிவக்க வேண்டும்! இந்த ஆண் மகனுக்கு ஒருப் பெண்ணைக் குளிர்ந்த விழிகளால் பார்க்கத் தெரிய வில்லை போலும்!
        வீட்டுக்குள்ளே  பார்த்தாள்.  அவன் இல்லை! எங்கே போயிருப்பான்? விளையாட்டுப் பெண். மெல்லத் தூணைப் பற்றிக் கொண்டு வீட்டுக்குள்  எட்டிப் பார்த்தாள். அந்த வீரனின் தாய்தான் வீட்டினுள் இருந்தாள். உறுதியான உடலும் வீரம் செறிந்த உள்ளமும் கொண்ட அந்த காவற்பெண்டின்  தோற்றம் கற்பின் கனலி கண்ணகியைப்போல் இருந்தது. அவன் எங்கே?.
“ தாயே! அவன் எங்கே?.........உம்…..உன்  பிள்ளையைத்தான் கேட்கிறேன்……  எங்கே?..... எங்கே போனான்? என்  கண்ணில் படவில்லையே!’’
வீரத்தாய் பார்த்தாள் வெளியே…… அந்தப்பெண் ! சிறிய குடிலின் தாழ்ந்த  இறைவாணத்தைத்  தாங்கிக்கொண்டு  நிற்கும்  தூணின் பின்னாலே இருந்து அவள் முகம் முழுமதியாய் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.  வெள்ளையுள்ளம் கொண்ட அந்தச் சிறு பெண்ணின் கள்ளமில்லாச் சிரிப்பில் ஆழ்ந்த அந்தத் தாய்   புன்சிரிப்புடன்  அவளைப் பார்த்தாள்.
          “ ஏனடி  பெண்ணே! எதற்குக் கேட்கிறாய்?  ஊர்ப் பெண்களோடுதான் சண்டை போடுவாய்.  இப்போது அவனோடு சண்டை போடவா? அவன்  இருந்தால்தான் நீ வரமாட்டாயே!’’  
             “உம்…..அவன் ஆண்களோடுதான் நட்பு கொண்டிருப்பான் ;     ஆண்களோடுதான்  சண்டை போடுவான். அவனை  எப்போது  நான்
           சண்டைக்கு இழுத்தேன்.  உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். அவன் எங்கே?
           அதைச் சொல் !’’.
             “கள்ளி! அவன் எங்கே போயிருக்கிறானோ, அது எனக்குத் தெரியாது ! புலி உறங்கிய குகை போன்ற என் வயிறு  இங்கே இருக்கிறது. அவன் இருக்குமிடம் எனக்குத் தெரியாது! ஆனால் உறுதியாகச் சொல்வேன், அவன் இருக்குமிடம் ஓர் போர்க் களமாகத்தான் இருக்கும்.  அங்கே அவன் வீரதோடு வாளேந்தித் தோன்றுவான்!’’.
அவன் வீரத்தையும் பெருமிதத்தையும் கொண்ட உருவத்தைக் கண்ணுள் கண்ட அந்த இளம் பெண்ணின் முகம் சிவந்து, மனம்  காளையின் கட்டழகை நினைந்து மயங்கியது. தாயின் மனமோ மகனின் வீரத்தை எண்ணிப் பொங்கியது.
இதோ…. இந்தக் காட்சியைக் காட்டும் காவற்பெண்டின் புறநானூற்றுப் பாடல்……….....
                 “சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
                 யாண்டுளனோஎன வினவுதி; என்மகன்
                  யாண்டுளன் ஆயினும் அறியேன்; ஓரும்
                  புலிசேர்ந்து போகிய கல்லளை போல
                  ஈன்ற வயிறோ இதுவே!
                  தோன்றுவன்  மாதோ  போர்க்களத்  தானே!’’. 
                                                                                           -                                                                       - காவற்பெண்டு  (புறநானூறு-86).
இவ்விளக்கத்தைக் காணொளியாகக் காண:
http://www.facebook.com/tamilargal/app_162891010412392

Tuesday, December 4, 2012


உலகத் தரம் வாய்ந்த தமிழ்வழிக் கல்வி தொடங்குங்கள்!
துணைவேந்தர் பொன்னவைக்கோ வற்புறுத்தல்
-----------------------------------------------------
எழுத்தேணி அறக்கட்டளை, எண்ணம் அறக்கட்டளை, தமிழ் எழுச்சிப் பேரவை ஆகியன இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டுவிழா 01/12/2012 காலை 10 மணிக்குச் சென்னை திருவல்லிக்கேணி அரசு அலுவலர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

சென்னை வருமானவரித்துறை ஆணையர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் விழா நடைபெற்றது.

வரலாற்றறிஞர்  தஞ்சை கோ.கண்ணன்  வாழ்த்துகிறார்

பாவைபதிப்பகம் வெளியிட்ட தஞ்சை இறையரசன் எழுதிய “செம்மொழியும் சிவந்த ஈழமும்“, “பாலியல்+வன்முறை=திரைப்படம்“ என்னும் இரண்டு நூல்கள் வெளியிடப்பெற்றன.வரலாற்றறிஞர் கோ.கண்ணன் பேசுகையில் காலத்தால் அழியாத உயர் தொழில் நுட்பத்தின் சொந்தக்காரர்கள்  தமிழர்களே என்பதைப்பற்றிப் பேசி மரபுசார் கட்டடக் கலை பற்றிய அரசுகல்லூரிப் படிப்புகள் நலிவடைந்து வருகின்றன அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

தான் பிறந்த ஊராகிய திருவண்ணாமலை அருகிலுள்ள தென்மாதி மங்கலம் என்ற ஊரில் அறக்கட்டளை மூலம் ஏறத்தாழ 20 இலட்சம் ரூபாய்க்கு பள்ளிக்கூடம் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் காவல் நிலையம் ஆகியனவற்றைப் புதுப்பித்து நற்பணிகள் செய்துள்ள தொழிலதிபர் ந. இராமகிருட்டிணனையும் அவர் மனைவி மருத்துவர் இரேணுகா இராமகிருட்டிணனையும் பாராட்டி தஞ்சை எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை நிறுவனர் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் தா.இளங்குமரன் வாழ்த்தினார். மரபுசார் கட்டடக்கலைப் பட்டயப்படிப்பை எசு.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தொடங்கப் பெறவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மருத்துவர் இரேணுகா இராமகிருட்டிணன், தொழிலதிபர் இராமகிருட்டிணன், துணை வேந்தர்  பொன்னவைக்கோ, ஆணையர் செந்தாமரைக்கண்ணன்,  இறையரசன்
 எசு.ஆர்.எம். பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ பேசுகையில் பாவாணர் கூறிய மொழியியல் உண்மைகள் உலகம் முழுவதும் உள்ள மொழிகளில் தமிழ்ச் சொற்கள் உள்ளதால், உறுதியாகின்றன. பிற மொழிக் கலப்பில்லாமல் பேசவேண்டும் என்றார். தாய் மொழியாம் தமிழில்தான் படிக்கவேண்டும். பிற மொழிகளை மொழிக் கல்வியாகப் படிப்பதில் தவறில்லை என்றார்.

முனைவர் பொன்னவைக்கோ ஒவ்வொரு ஊரிலும் உள்ள செல்வந்தர்கள் தனியார் பள்ளிக்கு இணையாகவும் உலகத் தரம் வாய்ந்ததாகவும் தமிழ் வழியிலான பள்ளிகளை நிறுவ வேண்டும் என்றார். தொழிலதிபர் இராமகிருட்டிணன் தம் ஊர்ப்பகுதியில் தமிழ்ப்பள்ளி தொடங்குவதாக வாக்குறுதி அளித்தார்.

எண்ணம் அறக்கட்டளை நடத்தும் கவிஞர் தனசேகரன், தனித்தமிழ் வேங்கை மறத்தமிழ் வேந்தன், மறைமலையடிகள் பெயரன் தி.தாயுமானவன், ஆரூர் தமிழ் நாடன் முதலியோர் பேசினர்.

அன்றில் பதிப்பகம் இறையெழிலன் நன்றி கூறினார். 

Sunday, October 21, 2012

மதுக்கடைகளை மூடுங்கள்!



              நாம்தமிழர் ஆட்சிமொழிப்பாசறை வேண்டுகோள்

சென்னை வியாசர்பாடி அருகில் கண்ணதாசன் நகரில் உள்ள எண்ணம் அறக்கட்டளை நடத்திவரும்   குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டோர் மறுவாழ்வுமையமும் நாம்தமிழர் ஆட்சிமொழிப் பாசறையும் இணைந்து   நடத்திய தன்னம்பிக்கைப் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. சிறப்புரை ஆற்றிய முனைவர் இறையரசன்  பேசுகையில்  ஏழைமக்களும் படித்தவர்களும்  மட்டுமல்லாது, மாணவர்களும் பெண்களும் கூட குடியால் அழிந்துவருகின்றனர்; அவர்களைக் காப்பாற்ற அரசு மதுக் கடைகளைப் படிப்படியே மூடவேண்டும் என்றார்.

மனந்திருந்தியோருடன் பேராசிரியர் இறையரசன் (நீலத்துண்டு அணிந்தவர்),கவிஞர் குணசேகரன், கவிஞர் தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்


குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டோர் மறுவாழ்வு மையத்தை நடத்திவரும்  கா. தனசேகரன் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அவர்,  இம்மையத்தில் மனநல மருத்துவர், பொது மருத்துவர் ஆகியோரும் இங்கு பணியாற்றுகின்றனர்;மருந்து மாத்திரைகள் ஆகியவற்றைவிட மன உறுதியே மாற்றம் தரும்; அதற்காக மனவளக்கலை, ஓகப் பயிற்சிகள் ஆகியன இங்கு  தரப்படுகின்றன என்றார். எண்ணம் அறக்கட்டளையின் சார்பில் குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டோர் மறுவாழ்வுமையத்தில் மூன்று மாதப் பயிற்சி அளித்து, இதுவரை 5000  பேர் மீட்கப்பட்டுள்ளனர்; மதுப்பழக்கத்திற்கு ஆளாகி இம்மையத்தால் திருந்தியவர்கள் 10 பேர், இங்கே ஊழியர்களாகப் பணியாற்றுகின்றனர். குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்கள், திருந்திப் பெரிய அறிவாளிகளாகவும் சிறந்தவர்களாகவும் புகழ்பெற்றுவிளங்குவதையும் கூறி,  மருந்தும் கொடுத்து உணவும் தந்து, தங்குமிடமும் அளிக்கப்படுகிறது என்றார்.

நாம்தமிழர் ஆட்சிமொழிப் பாசறைப் பொறுப்பாளர் தனித்தமிழ்வேங்கை  மறத்தமிழ்வேந்தன்  “தமிழ்மீட்சியும் தன்னம்பிக்கையும்” என்ற தலைப்பில் பேசுகையில்,    மது மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கும் மக்களுக்குத் தாம் தெருவில் விழுந்து மானம் இழந்து மதி இழந்து கிடப்பது புரியாது; மொழி மீட்பும் இன மீட்பும்  செய்ய அவர்களை மீட்பதே முதற் கடமை என்று பேசினார். 

“குடியை மறப்போம்! குடிகளைக் காப்போம்!” என்ற தலைப்பில் பேசிய இறையரசன், இன்று தமிழர்கள் தம் அறிவையும் உரிமைகளையும் பண்பாட்டையும் பொருளாதாரத்தையும் இழந்து வருகின்றனர் ; குடிப்பழக்கத்திற்கு ஆளாவது புற்றுநோயைவிடக் கொடியது; அந்நோய்க்கு உள்ளாக்குவதை  அரசே செய்யக்கூடாது; உடனடியாக மீளமுடியாத இத்தீய பழக்கத்திலிருந்து மதுக்குடிமக்களை மீட்கும் அதேவேளையில்,  விரைவில் படிப்படியே மதுக்கடைகளை மூடவேண்டும் என்று கூறினார்.

தமிழ்நாடு முழுதும் திருக்குறள் கூறும் கள்ளுண்ணாமையைப் பரப்பித் தமிழ்இனத்தையும் பண்பாட்டையும் மீட்டுவரும் நாம்தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமானைப் பாராட்டிய தனசேகரன்,  நாம்தமிழர் ஆட்சிமொழிப் பாசறையுடன்  இணைந்து இம்மையம் ஊர்தோறும் வகுப்புகள் நடத்தும் என்றார். இம்மையத்தின் ஊழியர் விசுவநாதன் நன்றி கூறினார்.  இக்கூட்டத்தில் இப்போது  மருத்துவம் பெற்றுவரும் 40 பேரும்  எண்ணம் அமைப்பின் ஊழியர்களும்  பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers